இங்கிலாந்து: `பாலியல் வன்கொடுமை, இன ரீதியான தாக்குதல்’ - இந்திய வம்சாவளி பெண்ணுக...
மகள் திருமணத்திற்கு முந்தைய நாள் தந்தை மரணம்; மறைத்து திருமணம் நடத்திய அண்ணன்; துரை வைகோ உருக்கம்
மறுநாள் சகோதரியின் திருமணம் நடைபெற இருந்த நிலையில் முதல்நாள் மாரடைப்பில் தந்தை மறைந்துவிட அந்தத் தகவலை மறைத்து சகோதரிக்கு இளைஞர் ஒருவர் திருமண விழாவை நடத்தியதாக, திருச்சி எம்.பி துரை வைகோ உருக்கமாகப் பதிவு செய்துள்ளார்.
இதுபற்றி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் செய்துள்ள பதிவில், "தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய மரணம்: சிந்திப்போம்! செயல்படுவோம்!. கடந்த சில நாட்களாக என் மனதை ஆழமாகப் பாதித்த ஒரு துயரச் சம்பவத்தையும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்தப் பதிவு, வலியின் வடுவையும், வாழ்க்கையின் புனிதத்தையும் உணர்த்தி, நம்மைச் சிந்திக்கவும் செயல்படவும் தூண்டுவதாக இருக்கும் என நம்புகிறேன்.
திருச்சி மாநகர் மாவட்டம், ஏர்போர்ட் பகுதி கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும், உற்சாகமும், துடிப்பும் நிறைந்த இளைஞர் தம்பி R.K.R வினோத் அவர்களின் தந்தையார் R.ரவீந்திரன் அவர்களின் அகால மரணம் என் மனதில் ஆறாத வடுவாகப் பதிந்துவிட்டது.
அவரது மகளின் திருமணத்திற்கு முதல் நாள், வரவேற்பு நிகழ்ச்சியின்போதே அவர் இயற்கை எய்தியது, நம்மை மீள முடியாத துயரத்தில் ஆழ்த்தியது.

இந்தச் சோகத்தில், வினோத் தனது தந்தையின் இறப்பை மறைத்து, தனது தங்கையின் திருமணத்தை மனவலிமையுடன் நடத்தி முடித்த விதம், அவரது உறுதியையும், குடும்பத்தின் மீதான அன்பையும், பொறுப்புணர்வையும் எடுத்துக்காட்டுகிறது. ஆனாலும், இந்த மரணம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற எண்ணமே என் மனதை உலுக்குகிறது.
ரவீந்திரன் அவர்கள் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறலால் மீண்டும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சேர்க்கப்பட்டார்.
Defibrillation மூலம் மின்னூட்ட அதிர்ச்சி கொடுக்கப்பட்டு, மருத்துவர்களின் அர்ப்பணிப்பான சிகிச்சையால் உயிர்பிழைத்து, மறுபிறவி எடுத்தவரைப் போல மீண்டு வந்திருந்தார்.
இந்நிலையில், அவரது மகளின் திருமணம் நெருங்கியது. குடும்பத்தினரும், உறவினர்களும், சமூகமும் எதிர்பார்க்கும் விதமாக, திருமண மண்டபத்தில் தந்தையாக அவர் இருந்து மகளை ஆசீர்வதிக்க வேண்டும் என்ற ஆசையில், மருத்துவமனையிலிருந்து அவரை அழைத்து வர முடிவு செய்துள்ளனர்.
ஆனால், மருத்துவர்கள் இதற்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'அவரது உடல்நிலை கண்காணிப்புக்கு உரியது, மருத்துவமனையை விட்டு வெளியேறுவது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்' என்று Not fit for discharge என்று திட்டவட்டமாக மறுத்தனர்.
அவர்களின் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்குச் செவிசாய்க்காமல், எங்களால் 'Discharge Summary வழங்க முடியாது' என்று மருத்துவர்கள் தெளிவாகக் கூறியும், உறவினர்கள் பிடிவாதமாக அவரைத் திருமணத்திற்கு அழைத்துச் சென்றனர்.
திருமணத்தின் முதல் நாள், நிச்சயதார்த்த விழாவில், மேடையில் அமர்ந்து தாம்பூலங்களைப் பரிமாறிய பின்னர், மேடையிலிருந்து கீழ் இறங்கி இருக்கையில் அமர்ந்தவர், அப்படியே சரிந்து விட்டார். உடனடியாக, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்தச் செய்தி, வினோத்திற்கு அளவிட முடியாத துயரத்தை அளித்தது. மறுநாள் தனது தங்கையின் திருமணம் நடைபெறவிருக்க, தந்தையின் மரணத்தை அறிந்து செய்வதறியாது தவித்து நின்ற வினோத்திற்கு, மறுமலர்ச்சி தி.மு.க-வின் மூத்த முன்னோடியும், நமது கழக குடும்பத்தின் மூத்த உறுப்பினருமான மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் புதூர் மு.பூமிநாதன் அவர்கள்தான் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆலோசனை வழங்கினார்.
விடிந்தால் திருமணம் என்ற நிலையில், இந்த இறப்புச் செய்தியை உடனடியாக அறிவித்தால், அவரது மகளின் திருமணம் தடைபடலாம்; அது மட்டுமல்லாமல், அவளது மணவாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும். எனவே, மனதுக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், இச்செய்தியை மறைத்து, திருமணம் முடிந்த பின்னர் அறிவிப்பது சரியா இருக்கும் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்தக் கருத்து எனக்கும் சரியென்றே தோன்றியதால், உடனடியாக வினோத்தைத் தொடர்பு கொண்டு இதை எடுத்துரைத்தேன். அவரும் பெரும் மனவேதனையுடன் இதனை ஏற்றுக்கொண்டார்.
இந்தத் துயரச் செய்தியைத் தனது தாயிடமோ, மணமகளான தங்கையிடமோ, குடும்பத்தினரிடமோ தெரிவிக்காமல் மறைத்து, திருமணத்தை முழுமையாக நடத்தி முடித்தார். அவரது மனவலிமையும், பொறுப்புணர்வும், குடும்பத்தின் மீதான அன்பும் நெஞ்சை உருக்குகிறது.
தம்பி வினோத், திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற மறுமலர்ச்சி தி.மு.க மாநாட்டிலும், எனது தேர்தல் பணிகளிலும் மாவட்டச் செயலாளர் அண்ணன் வெல்லமண்டி இரா.சோமு அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து, தனது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியவர்.
அவரது தங்கையின் திருமணத்திற்காக, கழகக் கொடிகளுடன், தலைவரின் படங்களும், எனது படங்களும் பொறிக்கப்பட்ட வண்ணமயமான பதாகைகளால் திருச்சியைத் திரும்பிப் பார்க்க வைத்தவர்.
தனது தங்கையின் திருமண ஏற்பாட்டை பற்றி கழக நிர்வாகிகளிடம் பெருமையுடன் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார். ஆனால், இத்தகைய மகிழ்ச்சியான தருணத்தில், இத்தகைய பெருந்துயர் ஏற்பட்டது, என் மனதை உலுக்கி விட்டது.
திருமண நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, வினோத் தனது தந்தையின் மரணச் செய்தியை குடும்பத்தினருக்குத் தெரிவித்தார். பின்னர், அவரது உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டு, இறுதி மரியாதைகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நானும் பெரும் துயரோடு இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அவரது உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தியதோடு, அவரது குடும்பத்தினருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொண்டேன். இந்த அசாதாரண துயரத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?
முதல் பாடம்: நமக்காக வாழ்வோம்; சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பூர்த்தி செய்வதற்காக அல்ல. சமூகம் என்ன நினைக்கும், உறவினர்கள் என்ன பேசுவார்கள் என்று வாழ்க்கையை வாழ்ந்தால், இத்தகைய தவிர்க்கப்பட வேண்டிய துயரங்கள் நம்மைச் சூழ்ந்து விடும்.
நமது முடிவுகள், நமது குடும்பத்தின் நலனையும், நமது விருப்பங்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மருத்துவர்களின் அறிவுரையை மீறி, சமூக அழுத்தங்களுக்கு அடிபணிந்து எடுக்கப்பட்ட முடிவு, இந்தத் துயரத்திற்கு வழிவகுத்தது.
நமக்காக, நம் குடும்பத்திற்காக வாழ வேண்டும்; பிறர் நினைப்பதற்காக அல்ல. இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.
இரண்டாவது பாடம்: இதய ஆரோக்கியத்தைப் பேணுவோம்.

40 மற்றும் 50 வயதுடையவர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. ரவீந்திரன், ஒரு முன்னாள் ராணுவ வீரர், வெறும் 64 வயதில் இதய நோயால் உயிரிழந்தார். இன்னும் 20 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டியவர், இந்த அகால மரணத்தைத் தழுவினார்.
இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் என்ன?. 40 வயதைத் தாண்டிய அனைவரும், ECHO, Treadmill போன்ற இதயப் பரிசோதனைகளைத் தவறாமல் செய்து கொள்ள வேண்டும்.
சிலருக்கு இதய நோயின் அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியலாம்; ஆனால், பலருக்கு அறிகுறிகள் இல்லாமலேயே திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நேரலாம். எனவே, 40 மற்றும் 50 வயதுடையவர்கள், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறையாவது இதயப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதன் மூலம், மருந்துகள், Stent பொருத்துதல் அல்லது தேவைப்பட்டால் Bypass அறுவை சிகிச்சை மூலம், நமது ஆயுளை நீட்டிக்கலாம். இதயப் பரிசோதனைகளைத் தவறாமல் செய்வது, திடீர் மரணத்திலிருந்து நம்மையும், நம் குடும்பத்தையும் காக்கும்.
உங்களுக்காகவே இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்திற்காக, வளரும் பிள்ளைகளுக்காக, இதைக் கட்டாயம் கடைபிடியுங்கள். இந்தத் துயரச் சம்பவம், நம்மைச் சிந்திக்கவும், செயல்படவும் தூண்ட வேண்டும்.
வினோத்தின் தந்தையின் இழப்பு, நமக்கு வாழ்க்கையின் மதிப்பையும், ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது. அவரது ஆன்மா அமைதி அடையட்டும். இத்தகைய துயரங்கள் மீண்டும் நிகழாமல், நாம் அனைவரும் விழிப்புடன் இருப்போம். சிந்திப்போம்! செயல்படுவோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.


















