BB Tamil 9 Day 14: `பர்சனல் விஷயங்களை வச்சு...' வறுத்தெடுத்த வி.சே - ரணகள வீக்கெ...
``நிறைய நல்லவங்களும் இருக்காங்க, அவங்களைத்தான் நான் மனசுல வச்சுப்பேன்'' - ஆட்டோ ஓட்டும் திருநங்கை
நள்ளிரவில் அடைமழையில் சிக்கிக்கொண்டேன். ஒதுங்க இடம் தேடி, பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்தேன். என் சூழலைக் கண்டும் காணாதது போல தீவிரமடைந்தது மழை. ஆட்டோ புக் செய்வதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்து புக் செய்தேன்.
அடுத்த சில நொடிகளில் தொலைபேசி அழைப்பு வந்தது. ஆட்டோ ஓட்டுநர் தான் என்று யூகித்து, "ஹலோ" என்றதும், 'லொக்கேஷனுக்கு வந்துட்டேன், எங்க இருக்கிங்க?' என்ற கணீர் குரல் கேட்டது. பேருந்து நிறுத்தத்திலிருந்து தலையை நீட்டி எட்டிப் பார்த்தேன், சில அடி தூரத்தில் காட்டு மழையின் நடுவே ஆட்டோ ஒன்று மெல்ல நகர்ந்து வந்தது. ஆட்டோ நம்பரை செக் செய்து கொண்டேன்.

மழைக்காக போட்டிருந்த சைட் ஷீட்டை நகர்த்திவிட்டு ஆட்டோவிற்குள் ஏறினேன். மழைக்காக போடப்பட்டிருந்த ஷூட் மழையின் சத்தத்தையும் சற்றே குறைத்தது. அந்த கணீர் குரல் என்னை மீண்டும், 'ஓ.டி.பி' என்று கேட்டது. நிமிர்ந்து ஓ.டி.பி சொல்லிய போது ஓட்டுநர் பெண் சீருடை அணிந்திருந்ததை கவனித்தேன்.
அவர் குரலும், அணிந்திருந்த சீருடையும் பொதுவாக ஏற்படுத்தும் பாலினக் குழப்பத்தையே எனக்கும் ஏற்படுத்தியது. ஆட்டோ கிளம்பியபோது கண்ணாடியில் அவர் முகத்தை உற்றுப் பார்க்க முயன்றேன். கண்ணாடி வழியே என்னைப் பார்த்தவர், 'ஆணா, பொன்ணானு பாக்குறியா? நான் திருநங்க' என்றார்.
தொலைப்பேசியில் பார்த்து, "உங்க பேரு சரளாவா அக்கா?" என்று கேட்டேன், கண்ணாடியில் பார்த்து பல் தெரியாத புன்னகையுடன், "ஆமா பா" என்றார். “அழகா சிரிக்கிறீங்கக்கா” என்றதும் சிரிப்பில் லேசாகப் பல் தெரிந்தது
“எத்தன வருசமா ஆட்டோ ஒட்டுறிங்கக்கா” என்று கேட்டதும், பேச்சின் தொனி மாறி, “2 வருஷமா ஓட்டுறேன், இன்னும் 6 மாசம் தவணை பாக்கி இருக்கு. என்ன செய்றதுனு ஒன்னும் புரியலப் பா” என்று சலித்துக்கொண்டார்.
'ஆட்டோ ஓட்டுனா ஒரு நாளைக்கு எவ்ளோக்கா கிடைக்கும்?' என்று பேச்சைத் தொடர்ந்தேன்.
"நா நைட்டு மட்டும் தான் பா ஓட்டுறேன். டிராபிக்ல ஓட்ட மாட்டேன், ஒரு நைட்டு ஓட்டுனா பெட்ரோல் காசு போக ஆயிரம் ரூபா கிடைக்கும். வீட்டு வாடகைக்கும் சாப்பாட்டுக்குமே அது கரைஞ்சிருது.
திருநங்கை தங்கணும்னா வீட்டு வாடகை அதிகம் தம்பி. இதுல எங்க இருந்து நான் ஆட்டோ கடனை கட்டி முடிக்கிறது?' என்ற சரளா அக்காவின் புலம்பலுக்கு பதில் இல்லாமல் பேசாமல் சில வினாடிகளை கடத்தினேன்.

' நைட்ல ஆட்டோ ஓட்டுறது சிரமமா இல்லையா அக்கா?' என்ற கேள்வியை முன்வைத்தேன்.
"சாலையை பார்த்து பதில் சொல்லிக்கொண்டிருந்த சரளா அக்கா ஒரு நொடி கண்ணாடியில் என் முகத்தைப் பார்த்து, 'சிரமம் தான்'. ஆனா, பயமெல்லாம் இல்ல. ஆட்டோ ஓட்டும் போது என்ன சிலர் தப்பா நடத்தியிருக்காங்க, காசு தராம ஓடிருவாங்க.
திருநங்கைனு தெரிஞ்சதும் ஆட்டோல ஏறத் தயங்குவாங்க. இன்னும் சிலர் கிண்டல் பண்ணிட்டே வருவாங்க. ஆனா, நிறைய நல்லவங்களும் இருக்காங்க. யாருனே தெரியாத பலர் என்ன வாழ்திட்டுப் போவாங்க. அவங்கள தான் நான் மனசுல வச்சுப்பேன். வாழ்க்கையினா நல்லது, கெட்டது எல்லாம் கலந்தது தான, நல்லதை மட்டும் எடுத்துக்கணும்" என்று ஆவர் பேசி முடித்த பொழுது மற்றும் ஒரு முறை பேச வார்த்தைகள் இன்றி அமைதியைப் பரிசளித்தேன்.
'ஆட்டோ வாங்குறதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்திங்க?' கேட்க வேண்டாம் என்று நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த கேள்வியை தயக்கத்துடன் கேட்டேன்.
"யாசகம் கேட்டுட்டிருந்தேன். கடை கடையா போயி கை தட்டி காசு கேப்பேன். இப்போ அதை நெனைச்சா கோவம் வருது. உழைப்பு கொடுத்த மாற்றம். உழைச்சு சாப்பிடும் போது ஒரு திருப்தி கிடைக்குது. இப்போ என் கூட இருக்கவங்க என் முன்னாடி கைத் தட்டுனாலே அவங்கள கத்திவிட்ருவேன்" என்று அவர் முடிக்கும் போது மழையின் தீவிரம் சற்றுக் குறைந்ததை உணர்ந்தேன்.

சரளா அக்கா தொடர்ந்தார்..." எனக்கு என்ன யாசகம் கேக்கணும்னு ஆசையா. சோத்துக்கு வேற வழியில்ல. எட்டாவது வரை படிச்சேன், எனக்குள்ள நடந்த மாற்றத்தை வீட்ல சொன்னேன். அடிச்சாங்க. வலி தாங்க முடியாம வீட்டை வீட்டு வெளிய வந்துட்டேன். அவங்க என்ன புரிஞ்சு ஏத்துக்கிட்டு இருந்தா, நா பிச்சையெடுத்துருக்க மாட்டேன். இவ்வளவு கஷ்டமும் பட்டுருக்க மாட்டேன். கண்டிப்பா படிச்சி மேல வந்திருப்பேன், ஏதோ எங்க என்.ஜி.வோ உதவியால கடனுக்கு ஒரு ஆட்டோ வாங்கி இருக்கேன், இன்னைக்கு நான் பிச்சை எடுக்காம சொந்தக் கால்ல நிக்கிறேன்" என்று அவர் முடித்தபோது மழையும் ஓரளவு அழுது முடித்திருந்தது.
சரளா அக்காவின் பேச்சில் மூழ்கி கிடந்த என்னை, "கேஷா ? ஜி-பே வா ?" என்று கணீர் என்ற அதே குரல் எழுப்பியது, சொந்தக் காலில் நிற்கும் சரளா அக்காவிற்கு, தொலைப்பேசியில் காட்டிய தொகையைத் தாண்டி பணம் கொடுக்க மனம் வராமல், "அழகா சிரிக்கிறீங்கக்கா" என்று கூறி வழி அனுப்பி வைத்தேன் அடை மழையின் கடைசித் தூறல்களில் நனைந்துகொண்டு.
அடுத்த நாள் சரளா அக்காவை தொடர்புகொண்டு நேரில் பார்க்கச்சென்று விகடனிலிருந்து வருவதாக என் அடையாளத்தை வெளிப்படுத்தி, கட்டுரை ஒன்று எழுதிக்கொள்ளலாமா என்று கேட்டபோது "டபுள் ஓகே" என்று சிரித்த முகத்தோடு வரவேற்றார்.
- கோகுல் சரண்