``ரஷ்ய எண்ணெய் கொள்முதல் செய்தால் கூடுதல் வரி விதிப்போம்" - மீண்டும் முருங்க மரம...
`பொல்லாதவன்' முதல் `பைசன்' வரை - 20 ஆண்டுகளில் தீபாவளியை திருவிழா ஆக்கிய படங்கள்!
தீபாவளி என்றில்லை எந்தவொரு கொண்டட்டத்தையும் சினிமா இல்லாமல் கடக்க முடியாது. குடும்பமாக அமர்ந்து தொலைக்காட்சியில் திரைப்படம் பார்ப்பதிலிருந்து திரையரங்கில் ஆட்டம்போதுவது வரை ஏதோ ஒரு வகையில் திரைப்படங்கள் நம் திட்டத்தில் இடம்பெறும்.
பட்டாசு, இனிப்பு, புத்தாடை இல்லாவிட்டாலும் சாதாரண நாட்களையும் தீபாவளி ஆக்கிவிடும் உற்சாகத்தை சினிமாக்கள் வழங்கும். கடந்த 20 ஆண்டுகளில் தீபாவளியைத் திருவிழா ஆக்கிய படங்கள் பற்றி பார்க்கலாம்.
2005: அது ஒரு கனா காலம், சிவகாசி, மஜா
கில்லி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருந்த விஜய், ஓராண்டுக்குப் பிறகு பேரரசுவின் மாஸான பொழுதுபோக்கு படத்தின் மூலம் திரையரங்குக்கு திரும்பியிருந்தார். புயலடித்ததுபோல ரசிகர்களை திரையரங்குக்கு வாரிக்கொண்டது சிவகாசி.
தனுஷ் நடிப்பில் பாலு மகேந்திரா இயக்கியிருந்த அது ஒரு கனா காலம் விமர்சன ரீதியாக வெற்றியையும் சிறிய அளவில் ரசிகர்களின் அன்பையும் பெற்றது.
விக்ரம், அசின் நடிப்பில் வெளியான பக்கா மசாலா படமான மாஜா ஓரளவுக்கான வெற்றியைப் பெற்றது.
2006: வரலாறு, ஈ, வட்டாரம், வல்லவன்
அஜித் மூன்று வேடங்களில் நடித்த வரலாறு திரைப்படம் வெளியான அன்றே கவனம் பெற்றது. கே.எஸ் ரவிக்குமாரின் கமர்ஷியல் ஹிட் வரிசையில் இடம்பிடித்தது வரலாறு திரைப்படம்.
சிம்பு எழுதி, இயக்கி, நடித்திருந்த வல்லவன் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்றது. நயன்தாரா, சந்தியா, ரீமா சென், சந்தானம் ஆகியோரும் கவனம் பெற்றனர்.
முழுமையான பொழுதுபோக்கு படமாக உருவாகியிருந்தாலும், ஆர்யாவின் வட்டாரம் ரிலீஸ் தாமத்தால் பாதிக்கப்பட்டது.
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா, பசுபதி நடித்திருந்த மருத்துவ குற்றங்கள் பற்றிய ஈ திரைப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை எனினும் வட்டாரத்தை விட நல்ல வரவேற்பை பெற்றது.

2007: பொல்லாதவன், வேல், அழகிய தமிழ் மகன்
ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனதால் அழகிய தமிழ் மகன் மிகப் பெரிய வரவேற்புடன் வெளியானது. ஆனால் ஹரியின் குடும்ப உணர்வுகள் பற்றி பேசிய ஆக்ஷன் என்டர்டெயினர் வேல் பட்டிதொட்டியெல்லாம் ஹிட் ஆனது. சிறிய படமாக பார்க்கப்பட்ட பொல்லாதவன் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
2008: சேவல், ஏகன்
பில்லா என்ற ப்ளாக்பஸ்டருக்குப் பின் அஜித் நடிக்கும் படம், ராஜுசுந்தரம் இயக்கும் படம் என ஏக எதிர்பார்ப்புகள் பெற்றது ஏகன். ஆனால் இப்போது வரை இயக்குநருக்கு இதுவே கடைசி படமாகவும் அமைந்தது பட ரிசல்ட்டின் எதிரொலி. இந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டரான 'மெய்ன் ஹூ நா' படத்தின் ரீமேக் தான் ஏகன். சென்ற தீபாவளில் எகிறி அடித்த ஹரியும் இந்த தீபாவளியில் சேவல் மூலம் பல்ப் வாங்கினார். ஆனால் படித்தவுடன் கிழித்துவிடவும் காமெடி மட்டும் சேனல்களில் ரிப்பிட் அடித்தது வடிவேலுவின் மேஜிக்.
2009: ஆதவன், பேராண்மை
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கம், ஹாரிஸ் ஜெயராஜ் இசை என பக்காவான பாக்கேஜ் உடன் களமிறங்கினார் சூர்யா. அயன் படத்தின் வெற்றி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும் ரசிகர்களும் விமர்சகர்களும் கலவையான விமர்சனத்தையேக் கொடுத்தனர்.
இருவரும் கொண்டாடும் படமாக அமைந்தது எஸ்.பி ஜனநாதனின் பேராண்மை!
2010: உத்தமபுத்திரன், மைனா
தனுஷின் காமடி என்டெர்டெயினர் உத்தமபுத்தினரன் ரசிகர்களை திரையங்கில் மகிழ்வித்தது. விவேக், ஆர்த்தி காமடியும் கலைகட்டியது, விஜய் ஆண்டனியும் பாடல்களும் கவனம் பெற்றது.
மறுபக்கம் எமோஷனல் டிராமாவான மைனா, இமானின் வருடும் இசையால் மக்களை நெகிழ்வித்தது. மாஸ் திரைப்படங்கள் இல்லாவிட்டாலும் தீபாவளியில் நல்ல சினிமா கொண்டாடப்படும் என்பதற்கு உதாரணமாக அந்த படங்கள் அமைந்தன.
2011: வேலாயுதம், ஏழாம் அறிவு
விஜய் ரசிகர்களுக்காக பாட்டு, ஃபைட்டு, காமடி, சென்டிமென்ட், க்ளாமர் என கலந்து உருவாக்கப்பட்ட படம் வேலாயுதம். மக்களைக் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாக விஜய் அமர்கலம் செய்ய ரசிகர்கள் ஆர்பரித்தனர்.
ஏழாம் அறிவு, போதி தர்மர் வரலாறு, ஸ்ருதி ஹாசனின் சயின்ஸ் எக்ஸ்பிரிமன்ட், சீனாவிலிருந்து டாங்லீ பரப்பும் வைரஸ், நோக்கு வர்மம் என வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியானது. சூர்யாவுக்கு நல்ல மைலேஜையும் பெற்றுத்தந்தது.
இன்றும் விஜய்-சூர்யா ரசிகர்களிடையே இதில் எது அதிக வெற்றி பெற்றது என்பதில் தகராறு நிலவுகிறது.

2012: துப்பாக்கி, போடா போடி
100 கோடி க்ளப்பிள் இணைந்த முதல் தமிழ் படம், விஜய்யின் கெரியரிலேயே மிகப்பெரிய ஹிட், வேற லெவல் இயக்குநராக கோலிவுட்டையே கலக்கினார் முருகதாஸ்.
துப்பாக்கி சத்தத்துக்க்கு நடுவில் வந்த சுவடே இல்லாமல் பிறகு லேட் பிக்கப்பாகி ஆவரேஜாக ஓடியது போடா போடி.

2013: ஆரம்பம், பாண்டிய நாடு, ஆல் இன் ஆல் அழகுராஜா
மாஸ் படம் ஆரம்பம், காமெடி படம் அழகுராஜா என இரண்டுக்கும் டிக்கெட் புக்கிங்கில் பிஸியாக இருந்தார்கள் ரசிகர்கள்.
ஆனால், ஆச்சர்யப்படும்படி கவனம் கவர்ந்தது சுசீந்திரனின் வித்தியாச ட்ரீட்மெண்டில் வெளியான பாண்டியநாடு.
இறுதியில் பாண்டியநாடு ஹிட்டாக ரசிகர்களை சோதித்த அழகுராஜா திரைகளில் இருந்து வெளியேறியது. ஆரம்பம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
2014: கத்தி, பூஜை
துப்பாக்கிக்கு பிறகு விஜய் - முருகதாஸ் காம்போ, அனிரூத் இசையில் ஹிட்டான பாடல்கள், மாஸான பிஜிஎம் என வெளியான கத்தி, மாஸ் படமாக இல்லாமல் விஜய் பேசிய கருத்துக்களுக்காக கொண்டாடப்பட்டது. சமந்தா க்யூட்டான வரவேற்பைப் பெற்றார்.
கத்தின் வெற்றியால் ஹரி போட்ட கமர்ஷியல் பூஜை, தடுமாறியது. ஆனாலும் பஞ்சமில்லாமல் கலக்ஷன் பார்த்து வெற்றிகண்டது.

2015: தூங்காவனம், வேதாளம்
ஸ்லீப்லெஸ் நைட்ஸ் படத்தின் அதிகாரப் பூர்வ ரீமேக் என்ற தகவலுடனே 'தூங்காவனம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிட்டார் கமல். மிகக்குறுகிய காலத்துக்குள்ளேயே படத்தை எடுத்தும் முடித்தார்கள். ஆனால் வீரத்திற்குப் பின் அஜித்தை வைத்து சிவா இயக்கிய 'வேதாளம்' ஆலுமா டோலுமா என பாக்ஸ் ஆஃபீசில் கெட்ட ஆட்டம் போட்டது. நல்ல மேக்கிங் என்ற பெயரை மட்டும் வாங்கிக் கொண்டு ஒதுங்கிக் கொண்டது தூங்காவனம்

2016: கொடி, காஷ்மோரா
சந்தோஷ் நாராயணனின் சில்லான இசையையும், த்ரிஷா கொடுத்த ட்விஸ்டையும் தீபாவளி பேச்சுபொருளாக்கியது கொடி. டபுள் ஆக்ஷனில் தனுஷ் கலக்க கமர்ஷியல் வெற்றியைப் பெற்றது. மறுக்கம் பெரிய புரமோஷனுடன் வெளியான காஷ்மோரா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறியது.
2017: மெர்சல், மேயாத மான்
ஆட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது படம் மெர்சல், விஜய், வடிவேலு, நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா நடித்த இந்த படத்திற்கு ஏ அர் ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படம் விஜய் மூன்று வேடங்களில் நடித்த முதல் திரைப்படம். பாக்ஸ் ஆஃபீஸில் 260 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது மெர்சல்.
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான், புதுமையான மேக்கிங், மென்மையான இசை, சுவாரஸ்யமான பாத்திரபடைப்புகளுக்காக கவனம் பெற்றது. அறிமுக நடிகை பிரியா பவானி சங்கர் கொண்டாடப்பட்டார்.

2018: சர்கார்
ஆப்பனட்டில் ஆளே இல்லாமல் விஜய் படம் களமிறங்கினால் திரை தீப்பிடிப்பது நிச்சயம் என்ற எதிர்பார்ப்போடு வந்தது சர்கார். விஜய் - முருகதாஸ் கூட்டணியின் மூன்றாவது திரைப்படம். அரசியல் கருத்துகள், ரஹ்மானின் இசைக்காக கவனம் பெற்றாலும் எதிர்பார்த்ததை விட குறைவான வெற்றியைப் பெற்றது.

2019: பிகில், கைதி
திரைப்பட நாயகர்கள், ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரைத்துறையும் கொண்டாடிய தீபாவளி அது. விஜய் ரசிகர்கள் கொண்டாடும் அட்லீயின் விருந்து, சினிமா ரசிகர்களுக்காக லோகேஷின் ஆக்ஷன் - சென்டிமென்ட் படையல் என கலைகட்டியது.
2020: சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன்
இரண்டு திரைப்படங்களும் அமெசான் பிரைம், ஹாட் ஸ்டார் ஓடிடிகளில் ரிலீஸ் ஆகின. திரையரங்கில் கொண்டாடவில்லை என்றாலும் சமூக வலைத்தளங்களில் இரண்டு படங்களுக்கும் அன்பைக் கொட்டித் தீர்த்தனர் சினிமா ரசிகர்கள். சுதா கொங்காரா பெரிய ஹீரோக்களை இயக்கவும், ஆர்.ஜே பாலாஜி குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியை கொடுக்கவும் லேபிள் ஒட்டப்பட்ட தீபாவளியாக அமைந்தது.

2021: அண்ணாத்த
கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகான முதல் தீபாவளி கொண்டாட்டம் சூப்பர் ஸ்டாரின் தௌசண்ட் வாலாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் புஷ்வானமானதாக ரசிகர்கள் நினைத்தாலும், ஓரளவு வெற்றியைப் பெற்று சில ரசிகர்களை திருப்திபடுத்தியது சிவாவின் அண்ணாத்த.
ஆர்யா - விஷால் நடித்த எனிமி படமும் சரியாக பிக்-அப் ஆகவில்லை. ஆனால் ஓடிடியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் நாடுமுழுவதும் பேச்சுபொருளானது.

2022: பிரின்ஸ், சர்தார்
சிவ கார்த்திகேயன் முழுமையான காமடி படத்தில் தோன்றுவது எதிர்பார்ப்பை கிளப்பினாலும் ரசிகர்களுக்கு ஒட்டாமல் போனதால் பெரிய வெற்றியைப் பெற தவறியது பிரின்ஸ். மறுபக்கம் கார்த்தி - ராஷி கண்ணா - ரஜிஷா விஜயன் நடித்த சர்தார் திரைப்படம் வெற்றிபெற்றது.
2023: ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்
கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கிய ஜப்பான் திரைப்படம் ரசிகர்களைக் கவரத் தவறியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யாவின் அபாரமான நடிப்பினாலும் கார்த்திக் சுப்புராஜின் மேக்கிங்காலும் வரவேற்பைப் பெற்றது.

2024: அமரன், பிரதர், பிளடி பெக்கர்
டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் நடித்திருந்த பிளடி பெக்கர் திரைப்படம் சில இடங்களில் காமடிகள் கைகூடாததாலும் எமோஷன்கள் எலிவேட் ஆகாததாலும் போதுமான வரவேற்பைப் பெறத் தவறியது.
பிரதர் படம் ரசிகர்களைக் கவரத் தவறியது. ராணுவ வீரரின் வாழ்க்கைக் கதையாக வந்த அமரன் அமோகமான வெற்றியைப் பெற்று சிவகார்த்திக்கேயனை அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்றது.
2025: பைசன், டியூட், டீசல் என மூன்று வளர்ந்துவரும் ஹீரோக்களின் படங்கள் வெளியாகியுள்ளனர். பைசன், டியூட் படங்கள் நல்ல விமர்சனங்களைப் பெற்றுள்ளன. டீசல் ஸ்லோ பிக்அப் ஆகிறதா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.