`பொல்லாதவன்' முதல் `பைசன்' வரை - 20 ஆண்டுகளில் தீபாவளியை திருவிழா ஆக்கிய படங்கள்...
Diwali ''நான் 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன்' பொண்ணு'' - நடிகை ஜெயா சீல் பேட்டி
'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...' - 2000-ல் லவ் பண்ணவங்கள்ல ஆரம்பிச்சி, 2000-ல பிறந்து இப்போ லவ் பண்றவங்க வரைக்கும், இந்தப் பாட்டு இன்னமும் எவெக்ரீன் 'லவ் சாங்'காகத்தான் இருக்கு.
இந்தப் பாட்டு இடம்பெற்ற படம் 'பெண்ணின் மனதைத் தொட்டு'. நடிகை 'ஜெயா சீல்' இந்தப்படத்துல தான் தமிழ்ல அறிமுகமானாங்க. சமீபத்துல 'அவள் விகடன்' சேனலுக்கு அவங்க ஒரு பேட்டி கொடுத்திருக்காங்க.

''நான் அஸ்ஸாம் மாநிலத்துல, கெளஹாத்தியில, சாதாரண குடும்பத்துல பிறந்த பொண்ணு. சின்ன வயசுலேயே டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சிட்டேன். கூடவே ஆக்டிங்லேயும் ரொம்ப ஆர்வம் இருந்துச்சு. ஸோ, நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். எனக்கு மனசுக்குள்ள டாக்டருக்கு படிக்கணும்கிற ஆசை ரொம்பவே இருந்துச்சு. அதுக்காகவே சயின்ஸ் குரூப் எடுத்துப் படிச்சேன். ஆனா, என்னோட கரியர் ஆக்டிங்தான்னு ஒருகட்டத்துல எனக்குப் புரிஞ்சிடுச்சு. டெல்லியில ஓர் ஆக்டிங் டிரெயினிங் ஸ்கூல்ல நடிப்புல பயிற்சி எடுத்துக்க ஆரம்பிச்சேன். எங்கப்பா சினிமாவுல விநியோகஸ்தரா இருந்ததால, சினிமா எனக்கு புதுசில்ல.
1999-ல இந்தியில முதல் வாய்ப்பு வந்துச்சு. அடுத்த வருஷமே பிரபுதேவாகூட 'பெண்ணின் மனதைத் தொட்டு' வாய்ப்பு. எனக்கு தென்னிந்தியப்படங்களோட கதைகள் ரொம்ப பிடிக்கும். அப்புறம் இளையராஜா சாரோட மியூசிக் ரொம்ப ரொம்ப பிடிக்கும். 'முக்காபுலா' பாட்டு மூலமா பிரபுதேவாவை நல்லா தெரியும். அவர்கூட நடிக்கணும்; ஹீரோயின் கேரக்டர் ஒரு டாக்டர்னு டைரக்டர் எழில் கதை சொன்னாரு. உடனே ஓகேன்னு சொல்லிட்டேன். என்னோட அடுத்தப்படம் 'சாமுராய்'லயும் எனக்கு டாக்டர் கேரக்டர்தான். என்னோட டாக்டர் கனவு எப்படியோ நிறைவேறிடுச்சு''னு சிரிக்கிற ஜெயா சீல், 'கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா' பாட்டு தனக்கு கிடைச்சிது பெரிய அதிர்ஷ்டம்னு சொல்றாங்க.

''பெண்ணின் மனதைத் தொட்டு படம் வந்து 25 வருஷம் ஆகிடுச்சு. ஆனா, அந்தப்பாட்டை இன்னும் யாரும் மறக்கல. நான் நாட்டியகலா கான்பிரன்ஸுக்காக சென்னைக்கு வருவேன். அப்படி வர்றப்போ ஆட்டோவுலதான் வெளியே போவேன். ஒருமுறை ஓர் ஆட்டோ டிரைவர் என்னை அடையாளம் கண்டுபிடிச்சிட்டார். 'நீ கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் பாட்டு பொண்ணு தானே'ன்னு சந்தோஷமா கேட்டார். சென்னையில மட்டுமில்லீங்க, லண்டன், சிங்கப்பூர்னு வெளிநாடுகளுக்குப் போனப்போவும் 'கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன்' பாட்டுல வந்த நடிகையாதான் என்னை அடையாளம் கண்டுபிடிச்சாங்க. இதுக்கெல்லாம் படத்தோட டைரக்டருக்கும் மியூசிக் டைரக்டருக்கும்தான் நன்றி சொல்லணும்'' என்பவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இங்கிலீஷ், பெங்காலி, ஒடியா, அசாமின்னு இதுவரைக்கும் 8 மொழிகள்ல, 19 படங்கள் நடித்திருக்கிறார்.
''என்னோட முகம் எல்லா மொழிக்கும் செட் ஆகுதுன்னு நிறைய பேர் சொல்லியிருக்காங்க. கன்னடப்படத்துல நடிக்கிறப்போ கன்னடப்பொண்ணு மாதிரியே இருப்பேன். ஒடியா படத்துல நடிக்கிறப்போ ஒடியா பொண்ணு மாதிரியே இருப்பேன். 'பஹாலா சென்னகிடே'ங்கிற கன்னட படத்துல சிவ ராஜ்குமார்கூட நடிக்கிறப்போ 'நீங்க எங்க ஊர் பொண்ணு மாதிரியே இருக்கீங்க'ன்னு சொன்னார். 'எவராத்தகாரு'ங்கிற தெலுங்கு படத்துல டைரக்டர் கே. விஸ்வநாதன் சாரோட பேத்தியா நடிச்சேன். அப்போ, 'உன்னோட முகம் சாவித்திரியம்மாவை நினைவுப்படுத்துது'ன்னு சொன்னார். இந்தியில டைரக்டர் பங்கஜ் பராஷர் படத்துல நடிக்கிறப்போ, 'நீங்க கேமரா ஆன் உடனே அந்த கேரக்டராவே மாறிடுறீங்க. ஸ்ரீதேவி தான் இப்படி இருப்பாங்க'ன்னு பாராட்டினார். எல்லாமே காட் கிஃப்ட். வேறென்ன சொல்ல...''ன்னு ரொம்ப தன்னடக்கமா பேசுற ஜெயா சீலோட ரியல் கேரக்டர் செம்ம போல்டாம். ''விக்ரம்கூட நான் நடிச்ச 'சாமுராய்' படத்துல வர்ற கவிதாதான் என்னோட ஒரிஜினல் கேரக்டர். ரோட்ல ஏதாவது பிரச்னைன்னா இறங்கிப்போய் என்னன்னு கேக்கிற ஆளு நான்'' என்கிறார்.

உங்க ஃபேமிலிபத்தி சொல்லுங்களேன் என்றோம்.
''இப்போ கொல்கத்தாவுல இருக்கேன். ஹஸ்பெண்ட் விக்ரம் ஜோஷ் மியூசிக் டைரக்டர் அண்ட் தபேலா ஆர்ட்டிஸ்ட். 55 படங்களுக்கு மேல மியூசிக் அமைச்சிருக்கார். அதுல ரெண்டு படங்கள் ஆஸ்கருக்காக பரிந்துரை செஞ்சிருக்காங்க. எங்களுக்கு ரெண்டு பசங்க இருக்காங்க. மூத்தவன் அதீத் ஜோஷ் காலேஜ் ஃபைனல் இயர் படிக்கிறான். சின்னவன் அராப் ஜோஷ்க்கு ஆறு வயசுதான் ஆகுது. ஆனா, நல்லா தபேலா வாசிப்பான். மியூசிக்கும் கம்போஸ் பண்றான். அப்புறம் நானும், என் டான்ஸும்... பசங்களுக்காக நடிப்புக்கு பிரேக் விட்டுட்டேன். சவுத்ல எனக்காக யாராவது நல்ல கதை வெச்சிருந்தா, கண்டிப்பா நடிப்பேன்'' என்கிறார் ஜெயா சீல் கோஷ்.
கண்ணுக்குள்ளே உங்களை இன்னமும் வெச்சிருக்கோம் ஜெயா சீல்..!