Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்...
Bison:``விக்ரம் பட்ட அவமானங்கள் எனக்குத் தெரியும்; ஏளனமாக பார்த்தவர்கள் முன்னால்.." - அமீர் ஷேரிங்ஸ்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்திருக்கிறது, 'பைசன்'. படத்தில் இயக்குநர் அமீரும் பாண்டியராஜாவாக முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
'பைசன்' படத்திற்காக இயக்குநர் மாரி செல்வராஜ், இயக்குநர் அமீர், நடிகர் பசுபதி என மூவரும் இணைந்து விகடனுக்கு பேட்டியளித்திருக்கிறார்கள்.
அதில் விக்ரமுக்கும் தனக்குமான நட்பு குறித்தும், 'சேது' திரைப்பட நினைவுகள் குறித்தும் அமீர் பகிர்ந்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் அமீர், "நானும் விக்ரம் சாரும் நெருங்கிய நண்பர்கள். அவரும் இதைப் பற்றி வெளியில் சொன்னது கிடையாது. நானும் சொன்னது கிடையாது.
முதல் முறையாக, 'பைசன்' பட நிகழ்வில் தான் அதைச் சொல்ல வேண்டிய சூழல். விக்ரம் சாருடன் டின்னர் சாப்பிட்ட நினைவுகளை என் பொண்ணுதான் எனக்கு நினைவுப்படுத்தினாங்க. நான் முன்னாடி விக்ரமைச் சந்திக்கும்போது 'துருவ் ரொம்ப வித்தியாசமாக இருக்கான்.
இப்போவே வீடியோ எடுக்கணும், அது இதுனு வித்தியாசமாகப் பண்ணிட்டு இருக்கான்'னு சொன்னாரு.
பிறகு துருவ் வெளிநாட்டுக்குப் போய்ப் படிச்சிட்டு வந்தாரு. அவரை அதற்குப் பிறகு சந்திக்கவே இல்ல. அவர் நடிச்ச இரண்டு படங்களை நான் பார்த்திருக்கேன்.
'பைசன்' படப்பிடிப்பில் துருவ், விக்ரமோட ஒரு மினியேச்சர் மாதிரிதான் இருந்தாரு. நிறைய கஷ்டப்பட்டு நடிக்கிற நடிகர்கள் இங்கு இருக்காங்க.
விக்ரமோட டெடிகேஷன் ஒரு படி மேல. விக்ரம் போடும் உழைப்பை யாரும் போட முடியாது.

விக்ரம் கல்லூரியில் படிக்கும்போது அவருக்கு ஒரு பெரிய விபத்து நடந்தது. அவரால் முட்டிப் போட்டு உட்கார முடியாது. சேது படத்தில் அவர் தொடையில் தெரியுற தழும்பு உண்மையானது.
அவருக்கு நடந்த விபத்தில் ஏற்பட்ட காயம்தான் அது. அப்படி ஜெயிக்கணும்னு ஒரு வெறி அவருக்கு இருந்தது. தன்னை ஏளனமாகப் பார்த்தவர்கள் முன்னாடி ஜெயிக்கணும்னு ஒரு எண்ணம் அவருக்குள் இருந்தது.
'சேது' படத்தில் அவர் கதாநாயகனாக வருவதற்கு நான் ஒரு காரணமாக இருந்திருப்பேன். 'சேது' படம் முதலில் பூஜைப் போட்டு டிராப் ஆச்சு. பிறகு 1997-ல் தொடங்கப்பட்ட படம், 2000-ல் தான் முடிஞ்சது.
அதற்கிடைப்பட்ட காலத்தில் பொருளாதார ரீதியான சவால்கள் அவருக்கு வந்திருக்கும். விக்ரம் சந்தித்த அத்தனை அவமானங்களும் எனக்குத் தெரியும். ஏன்னா, அவருடைய நெருங்கிய நண்பர் நான்தான்," எனப் பகிர்ந்திருக்கிறார்.