Aus vs Ind : 'குறுக்கிட்ட மழை; முதல் போட்டியிலேயே தோற்ற இந்திய அணி!' - என்ன நடந்...
Starc: 176 கி.மீ வேகத்தில் பந்துவீசினாரா ஸ்டார்க்? - உண்மை என்ன?
'அதிவேக பந்து?'
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் ஓடிஐ போட்டி பெர்த்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் கிரிக்கெட் உலகின் அதிவேக பந்தை வீசியதாக ஒரு தகவல் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கிறது. அது உண்மைதானா?

பெர்த்தில் நடந்து வரும் இந்தப் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. ஆஸ்திரேலியா சார்பில் முதல் ஓவரை ஸ்டார்க் வீசினார். முதல் பந்தில் ரோஹித் ஸ்ட்ரைக் எடுத்திருந்தார். ஸ்டார்க் வீசிய அந்த முதல் பந்து 176.5 கி.மீ வேகத்தில் சென்றதாக தொலைக்காட்சிகளின் ஸ்பீடோ மீட்டர் காட்டியது. எனில், ஸ்டார்க் வீசிய இந்த டெலிவரிதான் கிரிக்கெட் உலகின் அதிவேக டெலிவரி எனக் கூறப்பட்டது. இதற்கு முன்பு 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பையின் போது சோயப் அக்தர் 161.3 கி.மீ வேகத்துக்கு ஒரு டெலிவரியை வீசியிருந்தார். இப்போது வரைக்குமே அதுதான் அதிவேக டெலிவரி என சாதனைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.
'உண்மை என்ன?'
ஸ்டார்க் வீசிய டெலிவரி அதையும் மிஞ்சியதால் அக்தரின் ரெக்கார்டை ஸ்டார்க் உடைத்துவிட்டார் எனக் கருதப்பட்டது. ஆனால், கொஞ்ச நேரத்திலேயே இதில் ஒரு தெளிவு கிடைத்தது. அதாவது, பந்தின் வேகத்தை அளவிடும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட கோளாறினாலயே அந்த டெலிவரி 176.5 கி.மீ வேகத்தில் வந்ததாக காட்டப்பட்டிருக்கிறது. உண்மையில் அந்த டெலிவரி 140.8 கி.மீ வேகத்தில் மட்டுமே வீசப்பட்டிருக்கிறது.

ஆக, இப்போதைக்கு சோயப் அக்தரின் ரெக்கார்டுக்கு எந்த ஆபத்தும் இல்லை. கிரிக்கெட்டின் அதிவேக பந்து அவர் வீசியதே!