பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை`ஹேமா ராஜ்குமார்' லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ் | Al...
RoKo: சிக்கிய ரோஹித்; டக் அவுட் ஆன கோலி - ரசிகர்கள் ஏமாற்றம்
ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகளை கொண்ட ஓடிஐ தொடர் இன்று பெர்த்தில் தொடங்கியிருக்கிறது. 6 மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பிய சீனியர் வீரர்களான ரோஹித்தும் கோலியும் வந்த வேகத்திலேயே அவுட் ஆகி ஏமாற்றம் அளித்திருக்கின்றனர்.

டாஸை ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷே வென்றார். பௌலிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் ரோஹித்தும் கில்லும் ஓப்பனிங் இறங்கினர். ரோஹித்துக்கு இது மிக முக்கியமான தொடர். ஏற்கனவே அவர் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில், சமீபத்தில் ஓடிஐ போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
2027 உலகக்கோப்பை வரை இந்திய அணியில் ஆட வேண்டும் என்பது ரோஹித்தின் விருப்பம். அதற்கு முதலில் இந்தத் தொடரில் அவர் சிறப்பாக ஆட வேண்டும். ரோஹித்,கோலி இருவருமே கடைசியாக மார்ச் மாதத்தில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக ஆடியிருந்தனர். கிட்டத்தட்ட 6 மாத இடைவேளைக்குப் பிறகு இருவரும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுப்பதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவியது.

ஓப்பனிங் இறங்கிய ரோஹித் 8 ரன்களில் ஹேசல்வுட்டின் பந்தில் அவுட் ஆனார். ஹேசல்வுட் குட் லெந்தில் டைட்டாக வீசிய ஒன்றிரண்டு பந்துகளை ரோஹித் நன்றாக லீவ் செய்தார். ஒரு பந்தை பெரிய ஷாட்டுக்கு முயன்று தவறவிட்டார். குட் லெந்தில் தொடர்ந்து வீசிய ஹேசல்வுட் ஓவர் தி விக்கெட்டில் கொஞ்சம் லெந்தை மாற்றி ஷார்ட்டாக இன்கம்மிங் டெலிவரியாக 4 வது ஸ்டம்ப் லைனில் வீசினார். கொஞ்சம் எகிறிய அந்த பந்திப் எட்ஜ் ஆகி 2 வது ஸ்லிப்பிடம் ரோஹித் கேட்ச் ஆனார். 8 ரன்களை மட்டுமே அவர் எடுத்திருந்தார்.
நம்பர் 3 இல் விராட் கோலி களமிறங்கினார். 8 பந்துகளை எதிர்கொண்ட கோலி டக் அவுட் ஆனார். ஸ்டார்க் ஓவர் தி விக்கெட்டில் வந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசி கோலியின் வீக் ஸ்பாட்டை குறி வைத்தார். அதற்கேற்றார் போல பீல்ட் செட்டப்பும் இருந்தது. இரண்டு ஸ்லிப்கள், பாய்ன்ட், பேக்வர்ட் பாய்ன்ட், தேர்டுமேன் என டைட்டாக அடைத்து வைத்திருந்தனர். இதற்கு பலனும் கிடைத்தது. ஸ்டார்க் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தில் பேட்டை விட்டு பேக்வர்ட் பாய்ன்ட்டில் கனோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

பவர்ப்ளேயின் முடிவில் இந்திய அணி 27-3 என்ற நிலையில் இருந்தது.