பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை`ஹேமா ராஜ்குமார்' லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ் | Al...
மும்பை: 72 வயது தொழிலதிபர் டிஜிட்டல் கைது; 6500 வங்கி கணக்குகளுக்கு அனுப்பப்பட்ட ரூ.58 கோடி!
மும்பையை சேர்ந்த 72 வயது பங்குச்சந்தை வியாபாரியை சைபர் கிரிமினல்கள் தங்களை அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ அதிகாரிகள் என்று கூறி டிஜிட்டல் முறையில் கைது செய்து ரூ.52 கோடியை வாங்கிக்கொண்டனர். முதியவர் மற்றும் அவரது மனைவியிடம் உங்களது வங்கிக்கணக்கில் சட்டவிரோத பணம் இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் இதற்காக உங்கள் இரண்டு பேரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்து இருப்பதாக தெரிவித்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி முதல் முறையாக அவர்கள் முதியவருக்கு போன் செய்து பேசியதோடு முதியவருக்கு சில ஆவணங்களையும் அனுப்பினர்.
வீடியோ காலில் சீருடை அணிந்த போலீஸ் அதிகாரிகள், போலி கோர்ட், நீதிபதி, வழக்கறிஞர்களையும் காட்டினர். பண மோசடி தொடர்பாக உங்களது வங்கி கணக்கு விசாரிக்கப்படுகிறது என்று கூறி சி.பி.ஐ .மற்றும் அமலாக்கப்பிரிவு சம்மனையும் அனுப்பினர்.

அதோடு நீங்கள் அனுப்பும் பணம் விசாரணைக்கு பிறகு திரும்ப கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அனைத்தையும் பார்த்த முதியவர் அவர்கள் சொன்னபடி தனது வங்கிக்கணக்கில் இருந்த ரூ.58 கோடியை அவர்கள் கொடுத்த 18 வங்கிக்கணக்கிற்கு அனுப்பினார்.
இம்மோசடி தொடர்பாக முதியவர் கொடுத்த புகாரின் பேரில் இது வரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி பணம் 4 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இது குறித்து சைபர் கிரைம் பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''பணம் டிரான்பர் செய்யப்பட்டவுடன் அது முடக்கப்பட்டுவிடக்கூடாது என்பற்காக இணைய தள குற்றவாளிகள் உடனே அப்பணத்தை மிகவும் கவனமாக வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி இருக்கின்றனர்.
முதலில் ஒரு சில வங்கி கணக்குகளுக்கு மட்டுமே டிரான்ஸ்பர் செய்தனர். இதனால் அப்பணம் எளிதில் முடக்கப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ஒரேநேரத்தில் பணத்தை ஆயிரக்கணக்கான வங்கிக்கணக்கிற்கு சிறிது சிறிதாக பிரித்து அனுப்புகின்றனர். மும்பை முதியவரிடம் வாங்கிய ரூ58 கோடியை 6500 வங்கிக்கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்துள்ளனர். அதோடு டிரான்ஸ்பர் செய்யப்படும் பணம் காசோலை மூலம் எடுக்கப்பட்டு அதே வங்கியில் வேறு ஒரு வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துவிடுகின்றனர்.
இதற்கு முன்பு இப்பணத்தை ஏ.டி.எம் மூலம் எடுத்தனர். இதனால் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணமுடிந்தது. ஆனால் இப்போது வங்கிக்குள் சம்பவம் நடப்பதால் அங்கு அதிகமானோர் இருக்கின்றனர். இதனால் குற்றவாளிகளை அடையாளம் காணமுடிவதில்லை'' என்றார்.
இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் ராகசுதா கூறுகையில்,''டிஜிட்டல் கைது மூலம் பெறப்படும் பணத்தை பெற பயன்படுத்தப்படும் வாடகை வங்கிக்கணக்குகளுக்கு 3 முதல் 10 சதவீதம் வரை கமிஷன் கொடுக்கப்படுகிறது. மும்பை முதியவரிடம் சைபர் கிரிமினல்கள் வாங்கிய ரூ.58 கோடியில் கணிசமான தொகை சீனா மற்றும் கம்போடியாவிற்கு 27 வங்கிக்கணக்குகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு போலி கம்பெனிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது'' என்றார்.
72 வயது முதியவரை 40 நாட்கள் இக்கும்பல் டிஜிட்டல் முறையில் கைது செய்து வைத்திருந்தது. இதே போன்று மும்பையை சேர்ந்த மற்றொரு முதியவரை டிஜிட்டல் முறையில் கைது செய்து 70 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு ஏஜென்சி மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் போன்று முதியவரிடம் பேசி பணமோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டி 70 லட்சத்தை அபகரித்தனர். அது தொடர்பாக 15 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. அதோடு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.