Lokah Chapter 1: தீபாவளிக்கு 'லோகா'வின் ஓடிடி ரிலீஸ்; வெளியான மோலிவுட் அப்டேட்!
``குறைந்த விலைக்கு பட்டாசு; ஆன்லைன் விளம்பரம் நம்பி ஏமாறாதீர்’’ - எச்சரிக்கும் காவல்துறை!
வரும் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பொது மக்கள் பலரும் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நேரத்தைப் பயன்படுத்தி, ஆன்லைன் மூலமாக குறைந்த விலைக்கு பட்டாசுகள் விற்கப்படுவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபடத் தொடங்கியிருக்கிறது இணையத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடிய மோசடி கும்பல்கள்.
குறிப்பாக, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களின் வழியாக இதுபோன்ற மோசடிகள் அதிகம் நடைபெறுவதாகவும், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் காவல்துறை எச்சரிக்கையோடு அறிவுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக, காவல்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``போலியான வெப்சைட் வாயிலாகவும் விளம்பரப்படுத்தி, மக்களை நம்ப வைத்து, பணத்தை பெற்றுக்கொண்டு பட்டாசுகளை அனுப்பாமல் ஏமாற்றும் மோசடிகள் நடைபெற்று வருகிறது. மேலும், சமூகவலைதள பிரபலங்களின் புரொமோஷன் வீடியோக்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் குறைந்த விலைக்கு பட்டாசுகளை வாங்க பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம்.
இது சம்பந்தமாக, புகார்களும், சைபர் கிரைம் காவல் நிலையங்களில் குவிந்த வண்ணம் உள்ளது. எனவே, மேலே சொன்னவாறு யாரேனும் ஏமாற்றப்பட்டிருந்தால் அருகிலுள்ள காவல் நிலையத்திலோ, அல்லது சைபர் கிரைம் புகாரளிப்பு இலவச எண் 1930 வாயிலாகவோ அல்லது சைபர் கிரைம் புகாரளிப்பு இணையதளம் www.cybercrime.gov.in வாயிலாகவோ புகார் அளிக்கலாம்’’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.