மரணம் குறித்து முன்கூட்டியே உணர முடியுமா? - அறிவியல் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள...
"மணத்தி கணேசன் முதல்ல ஹாக்கி சாம்பியன்; பிறகுதான் கபடி" - ‘பைசன்’ நிஜ நாயகன் குறித்து உறவினர் பேட்டி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான ‘பைசன்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
திருச்செந்தூர் அருகேயுள்ள மணத்தி கிராமத்தில் பிறந்து கபடியில் சாதித்து அர்ஜுனா விருது வரை வாங்கி, தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் கணேசன் என்பவரது நிஜ வாழ்க்கையை கருவாக வைத்து படம் எடுத்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
இந்நிலையில் தற்போது சென்னையில் வசிக்கும் கணேசனின் உறவினரும் கணேசன் படித்த சாயர்புரம் போப் பள்ளியில் அவருக்கு ஜூனியருமான அருள்ராஜிடம் பேசினோம்.
‘’எனக்கு அம்மா வழியில் நெருங்கிய சொந்தம் அவர். மச்சான் முறை வேணும். நாங்க ரெண்டு பேருமே சாயர்புரம் போப் பள்ளியில் படிச்சோம். எனக்கு ஒரு வருட சீனியர்.
பள்ளிக் கூடத்துல முதல்ல அவர் ஹாக்கியில்தான் கில்லியா இருந்தார். கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் நடக்கும். அந்தப் போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கிட்டு வருவார். மாவட்ட அளவுல ஹாக்கி சாம்பியனாகவும் இருந்தார்.
அப்ப பள்ளிக்கூடத்துல தங்கராஜ்ங்கிற பி.டி. ஆசிரியர் இருந்தார். அவர்தான் ஹாக்கியில ஆர்வமா இருந்தவரை கபடி பக்கம் திருப்பி விட்டார்.

பிறகு கபடியில அவர் மாநில, தேசிய, ஏன் சர்வதேச அளவில் போய் சாதித்தது எல்லாருக்கும் தெரிந்ததுதான். சாதாரண விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வந்து அவர் தொட்ட உயரம் ரொம்பவே அசாத்தியமானது. எங்கள் சொந்தக்காரர்களிலேயே நிறையப் பேர் அவரைப் பார்த்து முன்னேறணும்னு நினைச்சாங்க.
இத்தனைக்கும் அந்தச் சமயங்கள்லதான் தென்மாவட்டங்கள்ல சாதிக் கலவரங்கள் மூண்டு, இளைஞர்கள் பலர் தேவையில்லாம அதுக்குள் இழுக்கப்பட்டதெல்லாம் நடந்தது.
மச்சான் வாழ்க்கையைப் படமா எடுக்கிறது தொடர்பா இயக்குநர் மாரி செல்வராஜ் எங்க ஊருக்கு வந்த போது நானுமே அவரைச் சந்தித்தேன். அதேபோல நேற்று படம் பார்த்தேன். துருவ் செமயா மிரட்டியிருக்கார். படத்துலயும் கம்ர்ஷியல்னு சொல்லி ரொம்பவும் கூட்டி குறைச்சு சொல்லாம முடிஞ்சவரை அப்படியே சொல்லியிருக்காங்க.

அதுக்காகவே மாரி செல்வராஜைப் பாராட்டலாம். சில படங்கள் மேக்கிங் நல்லா இருக்கும். ஆனா கமர்ஷியலுக்காக கூட்டிச் சொல்லிடுவாங்க. அப்படி இல்லாததால் எங்க ஊர்ப்பக்கம் பைசனைக் கொண்டாடிட்டிருக்காங்க’’ என்றார் அருள் ராஜ்.