மரணம் குறித்து முன்கூட்டியே உணர முடியுமா? - அறிவியல் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள...
'ORS' லேபிள் ஒட்டுவதற்கு எதிராகப் போராடி வென்ற பெண் டாக்டர்; அதிர்ச்சியான காரணம் இதோ!
வாந்தி மற்றும் பேதியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் மருத்துவர்கள் பரிந்துரைப்பது ஓ.ஆர்.எஸ் பாக்கெட்டுகளைத்தான் (ORS - Oral Rehydration Solution).
மருத்துவர்கள் முதல் சாமானியர்கள் வரை ஓ.ஆர்.எஸ் உயிர் காக்கும் என்று நம்பிக் கொண்டிருக்கையில், சர்க்கரை பானங்களுக்கெல்லாம் 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் வணிக நோக்கம் கொண்டவர்கள்.
அதற்குள் இருப்பது சர்க்கரை மட்டுமே; உயிர் காக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது என்று நிரூபித்திருக்கிறார், ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சிவரஞ்சனி சந்தோஷ்.
இதன் நல்ல விளைவாக, இனி சர்க்கரை பானங்களுக்கு 'ORS' லேபிளைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்திருக்கிறது.

பாட்டில்களில் விற்கப்படும் பழச்சாறுகள், காற்று அடைக்கப்பட்ட பானங்கள் உள்பட எந்தவொரு பானத்திற்கும் இனிமேல், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யக்கூடாது. அப்படிச் செய்வது உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ஐ மீறுவதாகும். இது அந்தப் பானங்களை நம்பி வாங்குகிற நுகர்வோரைத் தவறாக வழிநடத்துவதாகும் என, அந்தத் தடை உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு லிட்டர் ORS கரைசலில், 2.6 கிராம் சோடியம் குளோரைடு, 1.5 கிராம் பொட்டாசியம் குளோரைடு, 2.9 கிராம் சோடியம் சிட்ரேட் மற்றும் 13.5 கிராம் டெக்ஸ்ட்ரோஸ் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால், 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்யப்படும் பானங்களில் ஒரு லிட்டருக்கு 120 கிராம் சர்க்கரை இருந்திருக்கிறது. தவிர, பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பைத் தடுக்கும் எலக்ட்ரோலைட்ஸ் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது என்பதை நிரூபித்த டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், சர்க்கரை பானங்களில் 'ORS' லேபிள் ஒட்டி விற்பனை செய்யப்பட்டு வருவதை எதிர்த்து கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக போராடி வருகிறார்.

’’இந்தியாவில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்புக்கு ஒரு முக்கியமான காரணம் வயிற்றுப்போக்கு. பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றும் மருத்துவ உதவிகளில் ஒரு முக்கிய இடத்தில் 'ORS' பானம் இருக்கிறது. சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்களில் 'ORS' லேபிளை ஒட்டி விற்பனை செய்தால், அதைக் குடிக்கிற குழந்தைகளின் நிலைமை இன்னுமே மோசமாகும். அது அந்தக் குழந்தைகளின் உயிரிழப்புக்கும் காரணமாகலாம்.
அதனால்தான், இதை எதிர்த்து தொடர்ந்து போராடினேன். இனிமேல், சர்க்கரை பானங்களுக்கு 'ORS' லேபிளைப் பயன்படுத்தக்கூடாது என இந்தியாவின் உணவு ஒழுங்குமுறை ஆணையம் தடை விதித்திருக்கிறது. இந்த வெற்றி என்னுடன் துணை நின்று போராடிய பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி" என்று தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியும் கண்ணீருமாய் வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ்.
வயிற்றுப்போக்குப் பிரச்னை வந்தால் மருத்துவரை நாடுங்கள். உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்திய 'ORS' பாக்கெட்டுகளை வாங்கி நீரில் கரைத்துக் குடியுங்கள். வண்ண வண்ண பாட்டில்களில் அடைக்கப்பட்ட சர்க்கரைத் தண்ணீரை வாங்கி உங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கவே கொடுக்காதீர்கள். இனி மழைக்காலம் என்பதால், வாந்தியும் வயிற்றுப்போக்கும் வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. 'ORS' லேபிள் ஒட்டப்பட்ட பானங்களிடத்தில் கவனமாக இருங்கள்.