ஸ்ரீமஹா சண்டி சாந்தி ஹோமம்: உங்கள் பிள்ளைகளின் வாழ்வுக்காக வளத்துக்காக இந்த ஹோமம...
Doctor Vikatan: கர்ப்ப காலத்தில் வயிற்றைச் சுற்றி கடுமையான அரிப்பு; காரணமும் தீர்வுகளும் என்ன?
Doctor Vikatan: நான் இப்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறேன். வயிற்றைச் சுற்றிலும் அரிப்பு ஆரம்பித்திருக்கிறது. நாளாக ஆகஇது அதிகரிக்கிறது. சொரிந்து சொரிந்து புண்ணாவதுதான் மிச்சம். இப்படிச் செய்தால் தழும்புகள் அதிகமாகும் என்கிறார்கள் சிலர். கர்ப்பகாலத்தில் இப்படி வயிற்றைச் சுற்றி அரிப்பு ஏற்பட என்னதான் காரணம். இதைக் கட்டுப்படுத்த வழிகள் உண்டா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
கர்ப்பிணிகளுக்கு வயிற்றுப் பகுதியில் ஏற்படுகிற அரிப்பானது பொதுவான ஓர் அறிகுறியே. கர்ப்பத்தின் 6-வது மாதத்துக்குப் பிறகு இந்த அரிப்பு ஆரம்பமாகும். அதாவது வயிறு பெரிதாகத் தொடங்கும்போது, மெள்ள மெள்ள அரிப்பும் ஆரம்பமாகும்.
குழந்தை வளர, வளர வயிற்றுப் பகுதியில் உள்ள சருமம் விரிவடைகிறது. அதனால் சருமம் வறட்சியடையும். அதன் விளைவாக அரிப்பும் இருக்கும். தேங்காய் எண்ணெயோ, தரமான மாய்ஸ்ச்சரைசரோ தடவினாலே, இந்த அரிப்பிலிருந்து மீள முடியும்.
கர்ப்ப காலத்தில் வயிற்றுப் பகுதியில் அதிகமான அரிப்புடன் உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளிலும் அரிப்பு இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.இது 'கோலிஸ்டேசிஸ்' (Cholestasis) என்ற பிரச்னையாக இருக்கலாம். இது கல்லீரலில் ஏதோ பிரச்னை இருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். கல்லீரலால் சில பொருள்களை வெளித்தள்ள முடியாதநிலையில், அந்தப் பொருள்கள் கல்லீரலில் சேகரமாகத் தொடங்கும்.
அதை 'பைல் ஆசிட்' (Bile acids) என்று சொல்வோம். இதன் அளவு அதிகமாகும்போதும் அரிப்பு இருக்கலாம். இதை ரத்தப் பரிசோதனையின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். இந்தப் பிரச்னை கருவிலுள்ள குழந்தையையும் பாதிக்கும் என்பதால், இத்தகைய அரிப்பு அறிகுறியை அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.

பாலிமார்பிக் எரப்ஷன் (Polymorphic eruption) என்ற பாதிப்பு கர்ப்பத்தின் இறுதி மாதங்களில் வரும். இதனாலும் அரிப்பு இருக்கலாம். குழந்தை பிறந்ததும் இந்தப் பிரச்னை தானாகச் சரியாகிவிடும். இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படுகிற பெரும்பாலான அரிப்பு, குழந்தை பிறந்து, தொப்புள்கொடி இணைப்பைத் துண்டித்ததும் தானாகச் சரியாகிவிடும்.
அரிப்பிலிருந்து நிவாரணம் பெற, தினமும் இருவேளை குளிக்க வேண்டும். குளிர்ந்த நீர்தான் பெஸ்ட். வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். தளர்வான உடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளை ஒரு சைஸ் பெரிதாக வாங்கி அணிவது சௌகர்யமாக இருக்கும். கற்றாழை, மென்தால் உள்ள மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.