KMH: 'ஹார்ட் வைஸ் க்விஸ் 2025' நிகழ்ச்சி; குழந்தைகளுக்கு இதய ஆரோக்கிய விழிப்புணர...
ICC Womens World Cup: 2 டீம் கன்ஃபார்ம்; இந்தியா நிலை என்ன; பாகிஸ்தான் Out | Points Table நிலவரம்
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை கடந்த செப்டம்பர் 30-ம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்றிருக்கின்றன.
ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இத்தொடரில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டி என மொத்தம் 7 போட்டிகளில் விளையாடும்.

இந்த நிலையில், நேற்றைய பாகிஸ்தான் vs இங்கிலாந்து போட்டியுடன் 8 அணிகளும் தலா 4 போட்டிகள் ஆடிவிட்டன.
இப்போதே இரண்டு அணிகள் தங்களின் அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டன.
அதேசமயம், 3 அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கும் வந்துவிட்டன.
லீக் சுற்று போட்டிகள் பாதி முடிவடைந்துவிட்ட நிலையில் புள்ளிப் பட்டியல் நிலவரப்படி எந்தெந்த அணிகள் எந்த நிலையில் இருக்கின்றன, எந்த 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
வீறுநடை போடும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா!
இத்தொடரில் தோல்வியைச் சந்திக்காமல் முன்னேறிக்கொண்டிருக்கும் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் தலா 3 வெற்றிகள், ஒரு போட்டி டிரா என தலா 7 புள்ளிகளுடன் முதல் இரு இடங்களில் இருக்கின்றன.
மற்ற அணிகளின் நிலவரப்படி இவ்விரு அணிகளின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த இரு அணிகளுக்கு அடுத்தபடியாக, 3 வெற்றி ஒரு தோல்வி என மூன்றாவது இடத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்கா.
இந்த அணிக்கு இன்னும் 3 போட்டிகள் மீதமிருப்பதால் அதில் 2-ல் வென்றால்கூட அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா தனது இடத்தை உறுதி செய்துவிடலாம்.
சிக்கலில் இந்தியா!
தென்னாப்பிரிக்காவுக்கு அடுத்தபடியாக தலா 2 வெற்றி, 2 தோல்வி என 4 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருக்கிறது இந்தியா.
தனது முதல் இரு போட்டிகளில் வெற்றிபெற்று இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்றவாறு தொடரை சிறப்பாகத் தொடங்கியது இந்தியா.
ஆனால், கடைசியாக தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆடிய இரண்டு போட்டிகளில் கடைசி ஓவர் வரைச் சென்று தோல்வியடைந்ததால், அடுத்து தனக்கிருக்கும் 3 போட்டிகளில் 2 அல்லது மற்ற அணிகளின் ரிசல்ட்டைப் பொறுத்து 3 போட்டிகளிலும் வென்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கிறது இந்தியா.

புள்ளிப்பட்டியலில் அடுத்த 4 இடங்களில் இருக்கும் அணிகளில் 2 அணிகளின் நிலை இனிவரும் போட்டிகளில் வாழ்வா சாவா என்ற நிலைதான்.
5-வது இடத்தில் ஒரு வெற்றி ஒரு டிரா என 3 புள்ளிகளுடன் இருக்கும் நியூசிலாந்து அணி தனக்கு மிச்சமிருக்கும் 3 போட்டிகளிலும் வெற்றிபெற்றால்தான் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் இருக்கிறது.
பரிதாபத்தில் பாகிஸ்தான்!
நியூசிலாந்துக்கு அடுத்தபடியாக, ஒரு வெற்றியுடன் வங்காளதேசமும், இரண்டு டிராவுடன் இலங்கையும் தலா 2 புள்ளிகளுடன் 6, 7 இடத்தில் இருக்கின்றன.
இந்த இரு அணிகளும் தங்களுக்கு மீதமிருக்கும் 3 போட்டிகளிலும் வென்றாலும் புள்ளிப் பட்டியலில் இவர்களுக்கு முன்னிருக்கும் அணிகளின் வெற்றி தோல்வியைப் பொறுத்துதான் அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியும்.

இறுதியாக, ஆடிய 4 போட்டிகளில் 3-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டு ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது பாகிஸ்தான்.
அடுத்துவரும் போட்டிகள் அனைத்திலும் வென்றாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வது மிகக் கடினம். ஒன்றில் தோற்றாலும் அரையிறுதி வாய்ப்புக்கு முற்றுப் புள்ளிதான்.
புள்ளிப் பட்டியலைச் சோதிக்கும் மழை!
நேற்றைய போட்டியில் 25 ஓவர்களில் இங்கிலாந்து அணியை 79-7 என பாகிஸ்தான் வீராங்கனைகள் கட்டுப்படுத்தியபோது மழை குறுக்கிடவே போட்டி 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
கடைசி 6 ஓவர்களில் அதிரடியாக ஆடி 54 ரன்கள் சேர்த்த இங்கிலாந்து அணி 31 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் குவித்தது. டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தானுக்கு 113 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்கத்திலேயே அதிரடி காட்டிய பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் குவித்தது.
அப்போது, மீண்டும் குறுக்கிட்ட மழை பாகிஸ்தானின் எளிதான வெற்றி வாய்ப்பைத் தடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது.

ஒருவேளை இப்போட்டியில் மழை குறுக்கிடாமல் இருந்திருந்தால், இங்கிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தால் அரையிறுதிக்கான சூழலே இன்னும் கூடுதல் பரபரப்பாகியிருக்கும்.
இந்தப்போட்டி உட்பட மொத்தம் 3 போட்டிகள் மழையால் டிரா ஆகியிருக்கின்றன. இதில், இலங்கை மட்டும் இரண்டு போட்டிகளில் மழையால் பாதிப்புக்குள்ளானது.
இனிவரும் போட்டிகளில் ஒவ்வொரு அணியின் வெற்றியும் அந்தந்த அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்துவதோடு, மற்ற அணிகளின் அரையிறுதி வாய்ப்பையும் பாதிக்கக்கூடியதாக இருப்பதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது.
எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும், இறுதிப் போட்டியில் யார் யார் மோதுவர்கள் என்ற உங்களின் கணிப்பை கமென்ட்டில் பதிவிடுங்கள்.