Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விள...
அதிகாலை கொட்டித் தீர்த்த மழை; அரசு மருத்துவமனைக்குள் புகுந்த நீரால் பொதுமக்கள் அவதி
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை முடிந்த நிலையில் இன்று முதல் வடகிழக்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மாவட்ட தலைநகரான ராமநாதபுரத்தில் இன்று காலை 6 மணி வரை 22 மி.மீ மழை பெய்தது. இதன் பின்னரும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள் நோயாளிகளை காண வந்த பார்வையாளர்கள் தேங்கிக் கிடந்த மழை நீரினை கடந்து செல்ல அவதிப்பட்டனர்.

இதே போல் செட்டியார் தெரு பகுதியில் அரசுத் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை இயங்கி வருகிறது. வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் இந்த மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் இங்கு வைக்கப்பட்டிருந்த மருத்துப் பொருட்கள் மற்றும் பதிவேடுகள் மழை நீரில் நனைந்தன. மேலும் வழக்கமாக சிகிச்சைக்கு செல்லும் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு செல்ல முடியாமலும், அங்கு பணியாற்றும் மருத்துவ பணியாளர்களும் அவதிக்குள்ளாகினர்.

மேலும் ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த 3-ம் தேதி முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலைய பகுதியில் தேங்கிய மழை நீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. இதனால் பயணிகள் தேங்கிய மழை நீரை தாண்டிய படியே பேருந்துகளில் ஏறி சென்றனர். வடகிழக்கு பருவ மழை துவங்கிய முதல் நாளிலேயே தலைநகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுத்துள்ளது. இத்தகைய நிலையினை போக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.