கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட...
Foxconn : 'அது ஒரு Unofficial உடன்பாடு!' - பாக்ஸ்கான் சர்ச்சையும் திமுக-வின் விளக்கமும்!
ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தமிழக முதலீடு குறித்த விவகாரம் அரசியல் களத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15000 கோடி ரூபாயை முதலீடு செய்யவிருப்பதாகவும், அதன் மூலம் மிகப்பெரிய அளவில் 14000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்குமென்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அறிவித்திருந்தார்.

அந்நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி ராபர்ட் வூ தமிழக முதல்வரை சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார். ஆனால், ஃபாக்ஸ்கான் நிறுவன தரப்பில் ஆங்கில ஊடகம் ஒன்றில், 'நாங்கள் தமிழ்நாட்டில் புதிதாக எந்த முதலீடையும் செய்யவில்லை.' எனக் கூறப்பட்டிருந்தது. இதை வைத்துக் கொண்டு அதிமுக உட்பட எதிர்க்கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் இன்று சட்டமன்றத்தில் பேசுபொருளும் ஆனது.
இந்நிலையில், நாம் திமுக தரப்பை தொடர்புகொணடு பேசுகையில், 'ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒரு Unofficial உடன்பாடை எட்டியிருக்கிறோம்.' என புது விளக்கம் அளிக்கப்பட்டது.

ஃபாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம் தொடர்பாக அதிமுக வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், '#Foxconn நிறுவனம், முதல்வர் @mkstalin உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் "செயலில் ஸ்டாலின் மாடல்" என்று மார்தட்டிக் கொண்டார்.

இந்நிலையில், #Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
"பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" என்ற திரு. ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம்.
ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.
ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், "வெற்று பேப்பர்"! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?
நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!
கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதே!' எனக் கூறப்பட்டிருக்கிறது.
'அரை நாளில் அம்பலமான தமிழக அரசின் புளுகு!' என பா.ம.க தலைவர் அன்புமணியும் தமிழக அரசை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேச திமுகவின் சில செய்தித் தொடர்பாளர்களை அழைத்த போது, 'எங்களுக்கு இந்த விஷயத்தில் பெரிதாக விவரம் தெரியாது. வேற யாரிடமாவது பேசுங்களேன்.' என தன்மையாக பேச மறுத்தனர்.

அந்த வகையில் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனையும் தொடர்புகொண்டு பேசினோம். 'ஃபாக்ஸ்கான் நிறுவனம் 15000 கோடி முதலீடு செய்திருப்பதாக கூறியதில் எந்த பொய்யும் இல்லை. உறுதியாக அவர்கள் முதலீடு செய்கிறார்கள். அந்த நிறுவனத்தின் சார்பில் Unofficial ஆக இந்த முதலீட்டை பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. அவர்கள் மற்ற மாநிலங்களிலும் தொழில் செய்கிறார்கள். தமிழகத்துக்கு அதிக முதலீட்டை கொடுப்பதால் மற்ற மாநிலங்களுடனான அவர்களின் உறவு பாதிக்கப்படக்கூடாது என நினைக்கிறார்கள். அவர்களின் தர்மசங்கடத்தை தவிர்க்கவே வெளியில் சொல்ல வேண்டாம் என்றார்கள். ஆனால், விவகாரம் வெளியில் தெரிந்துவிட்டது. இப்போது பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடே செய்யவில்லை எனக் கூறியதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்யவில்லை என அவர்கள் எங்கே அதிகாரப்பூர்வமாக கூறியிருக்கிறார்கள்?
பத்திரிகைகளில் வெளிவந்ததை வைத்து பேசுவதெல்லாம் அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமே. ஆந்திராவில் கூகுள் முதலீடு செய்வதோடு ஒப்பிட்டு இதை விமர்சிக்கிறார்கள். அவர்கள் Helicopter Hijack முறையில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே முதலீட்டை கொண்டு செல்கிறார்கள். நாங்களும் எல்லாவிதத்திலும் முதலீடுகளை ஈர்க்கவே முயற்சிக்கிறோம். வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் 70% முதலீடுகளை செயலாக்கிக் காட்டியிருக்கிறோம். இதில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய நினைக்க வேண்டாம்!' என்றார்.

ஃபாக்ஸ்கான் நிறுவனம் Unofficial கோரிக்கை வைத்ததும் வினோதமாக இருக்கிறது. கோரிக்கையை கேட்ட பின்பும் அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அவர்கள் முதலீடு செய்வதாக அறிவித்ததும் வினோதமாக இருக்கிறது. விதவிதமாக திமுக தரப்பு சொல்லும் காரணங்களும் வினோதமாக இருக்கிறது!