`பெண்களை துன்புறுத்தினால் எமராஜாவிடம் அனுப்புவோம்'- உ.பி., முதல்வர் யோகி ஆதித்யந...
இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை! | மறந்துபோன பண்புகள் - 6
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அமைதியான இதயத்தின் சக்தி மன்னிப்பு.
நம் அன்றாட வாழ்க்கையில், மக்கள் நம்மை அடிக்கடி காயப்படுத்தும் சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம், சில நேரங்களில் தெரிந்தோ அல்லது சில நேரங்களில் தெரியாமலோ அதை அவர்கள் செய்கிறார்கள்.
அந்த காயத்தை மனதில் வைத்துக் கொண்டு, கோபத்தை வளர்த்து, பழிவாங்க நினைப்பது ஓர் இயல்பான உணர்வு. ஆனால் இது காயத்தை ஆற்றுவதற்கு பதிலாக அதை வளர்த்துக் கொண்டு தான் போகும். இந்த உணர்வு நம்மை ஒருபோதும் முன்னேற விடுவதில்லை.
இங்கு தான் மன்னிப்பு ஓர் சக்தி வாய்ந்த தார்மீக பண்பாக மாறுகிறது. உங்களை காயப்படுத்தியவர்களை தண்டிப்பதற்கு பதிலாக அவர்களை மன்னித்து விடுங்கள், அது உங்களுக்கு விடுதலையை தருகிறது. சற்று சிந்தித்து பாருங்கள் உங்களுக்கு அழுத்தம் தரும் விஷயத்திலிருந்து நீங்கள் வெளிவரும் போது உங்கள் மனம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று.

மன்னிப்பு ஏன் முக்கியம் :
மன்னிப்பு என்பது மற்றவர்கள் நமக்கு செய்த தவறை அங்கீகரிப்பதல்ல, அவர்களின் செயலால் ஏற்பட்ட கோபம், மற்றும் வெறுப்பின் சுமையிலிருந்து நன்மை நாம் விடுவித்துக்கொள்ள.
நாம் மன்னிக்கும் போது வெறுப்பின் சுழற்சி அங்கே உடைந்து, அமைதி மற்றும் அன்பிற்கான இடம் உருவாகிறது.
சிறு சிறு சண்டைகளை மனதில் வைத்துக்கொண்டு,பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் பார்க்காமல் பேசாமல் வாழ்ந்து எதை சாதிக்க போகிறோம்.
ஒருமுறை என் நண்பர் பேசிய சில வார்த்தைகள் என்னை காயப்படுத்தியது, இத்தனை ஆண்டுகளாக பழகியும் நம்மை அவன் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் இருந்தது. இனி அவன் நட்பே தேவை இல்லை அவனிடம் பேசவே கூடாது என்று எண்ணினேன்.

ஆனால், பின்பு யோசிக்கும்போது அவன் கோபத்தில் ஏதாவது பேசி இருக்கலாம் அவன் சூழ்நிலை அதுபோல இருந்து இருக்கலாம், எவ்வளவோ நல்ல தருணங்கள் எங்கள் நட்பிற்குள் இருக்கும்போது இந்த சிறு மனஸ்தாபத்தால் நட்பை உடைக்க கூடாது என்று தோன்றியது.
உடனே அவனை தொலைபேசியில் அழைத்து என்னை மன்னித்துவிடு என்று கூறினேன், நீதான் என்னை மன்னிக்க வேண்டும் என்று அவன் நிலையை எடுத்துக் கூறினான்.
என் அன்பு வாசகர்களே நட்பில் மட்டும் அல்ல மனஸ்தாபத்தால் எத்தனையோ நல்ல உறவுகளை நாம் இழந்து இருக்கலாம், இன்றே அவர்களை மன்னித்து விடுங்கள், உறவுகளை மீட்டெடுங்கள்.
ஏன் மற்றவரை நம்மால் மன்னிக்க முடியவில்லை:
ஈகோ - பிறரை மன்னிப்பது தங்களை பலவீனமாக்குகிறது என்று மக்கள் நினைக்கிறார்கள், 'நான் அவன மன்னிச்சா நான் இறங்கி போன மாறி ஆகாத, வேணும்னா அவன் வந்து மன்னிப்பு கேட்கட்டும்' என்ற வறட்டு பிடிவாதம் பலரிடம் இருக்கிறது. கடைசி வரை சண்டையே வராமல் சுமுகமாக சென்ற உறவு என்று இந்த உலகத்தில் ஒன்று இல்லவே இல்லை.
பழிவாங்கும் எண்ணம் - திரைப்படங்கள், ஊடகங்கள் பெரும்பாலும் பழிவாங்கும் கதைகளை மையமாக கொண்டுள்ளன, இதை பார்க்கும் சில இளைஞர்கள் ஆஹா இது தான் ஹீரோயிசம் என்று நினைத்து பள்ளியிலும், கல்லூரியிலும் சின்ன பிரச்சனை வந்தால் கூட கத்தியை தூக்கி கொண்டு பழிவாங்க கிளம்பிவிடுகிறார்கள்.

அதீத சிந்தனை - என்றோ யாரோ நமக்கு செய்த துரோகத்தை மீண்டும் மீண்டும் மனதில் நினைத்துக்கொண்டு, வருந்திக் கொண்டு இருந்தால், யாரையும் நம்மால் மன்னிக்கவே முடியாது. இது நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடும். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று கூறிவிட்டு உங்கள் வேலையை நீங்கள் பார்க்க தொடங்குங்கள்.
ஒரு குடும்பத்தில் நடக்கின்ற சண்டையை பற்றி யோசித்து பாருங்கள், யாரேனும் ஒருவர் முன்வந்து மன்னிப்பு கேட்டால் தான் அங்கே அன்பை மீண்டும் மீட்டெடுக்க முடியும், இல்லை என்றால் மனக்கசப்புகள் வளர்ந்து உறவுகளை முறித்து விடும்.

அன்றாட வாழ்வில் மன்னிப்பை எவ்வாறு பயிற்சி செய்வது:
கருணை காட்டுங்கள் : மற்றவர்கள் ஏன் உங்களிடம் அவ்வாறு நடந்து கொண்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.பல நேரங்களில் மனதளவில் காயப்படும் மனிதர்கள் மற்றவர்களையும் காயப்படுத்துகிறார்கள்.
ஈகோவை கட்டுப்படுத்துங்கள் - மன்னிப்பது வலிமையின் அடையாளம், பலவீனம் அல்ல என்பதை நீங்களே உங்களுக்கு நினைவூட்டுங்கள்.
நேர்மறைகளில் கவனம் செலுத்துங்கள்: ஒருவர் செய்த தவறுக்கு பதிலாக அவர்கள் செய்த நல்ல விஷயங்களை நினைத்து பாருங்கள்.
இறுதியாக உங்களை நீங்கள் மன்னியுங்கள்: உங்கள் கடந்த கால தவறுகளை நினைத்துக் கொண்டு குற்ற உணர்ச்சியை சுமக்காதீர்கள், தவறிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறுங்கள்.
"இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயஞ் செய்து விடல்"
அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.