Dude: "உங்களில் ஒருவராக என்னைப் பார்க்கிறீர்கள்; அதற்கு நன்றி" - ரசிகர்கள் குறித...
நட்பின் ரகசியம்: ஒரு சிறுவனும் வெள்ளை நாயும் #Straydogissue
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
இதுவரை யாரிடமும் பகிராத ஒரு ரகசியம் என் ஆழ் மனதில் உண்டு, அது எனக்கும் அந்த தெரு நாய்க்கும் உள்ள உண்மையான நட்பு என்று கூட கூறலாம்,
2006 ஆம் வருடம், நான் சிறுவனாக இருந்தபொழுது எதர்ச்சியாக எங்கள் தெருவில் நான் பார்த்தவன் தான் “TIGER” (வெள்ளை நிற தெரு நாய்), நாய்கள் பெயர் என்றாலே டாம்மி,ஜிம்மி,பப்பி,டைகர் தான் என்பது எழுதபடாத விதி
அந்த நாட்களில் பெரிய பெரிய பணக்கார நாய்களை பற்றி எல்லாம் எங்களுக்கு தெரியாது, எங்களுக்கு தெரிந்ததெல்லாம் எங்கள் தெருவில் எங்களோடு வாழும் தெருநாய்கள் மட்டுமே, மனிதர்களிடமும், நாய்களிடமும் பல சாதிகள் உண்டு என்பது கூட தெரியாத பருவம் அது.
ஒரு நாள் நான் அடுத்த தெருவில் இருக்கும் கடைக்கு சென்று வீடு திரும்புகையில் சில தெரு நாய்கள் என்னை சுற்றி வளைத்தபடி கொடூரமாக குறைக்க ஆரம்பித்தன, எனக்கோ நாய் என்றாலே பயம், பதறியபடி நான் கையில் வைத்திருத்த பொருட்களை கீழே போட, அப்போது தான் தமிழ் சினிமாக்களில் ஹீரோயின்களை காப்பாற்ற வரும் ஹீரோகள் போல அங்கே ஒரு வெள்ளை நிற நாய் வந்து மற்ற நாய்களை பார்த்து வேகமாக குறைத்து, பின் அடுத்த நொடியே அணைத்து நாய்களும் அமைதியாகிவிட, நான் மெல்ல கீழே இருந்த பொருட்களை எடுத்து நடக்க ஆரம்பித்தேன்

அப்போது பக்கத்தில் இருந்த ஒரு அண்ணன் “தம்பி இது உங்க நாயா?” என்று கேட்டார், நான் “ஆமாம்” என்று என்னையே அறியாமல் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்து சென்றேன், சிறு தூரம் நடந்து சென்ற பிறகு தான் உணர்ந்தேன் என்னை யாரோ பின் தொடர்கிறார்கள் என்று, பயத்துடன் நான் திரும்பி பார்க்க, என் பின்னலையே வந்துக்கொண்டிருந்தது அந்த வெள்ளை நாய், வேகவேகமாக வீட்டுக்குள் நுழைந்த பிறகு தான் எனக்கு புரிந்தது, அது வீடு வரை என்னை பாதுக்காப்பாக அழைத்து வந்திருகிறது என்று, என்ன காரணம் என்று நான் யோசிக்கையில் தெரிந்தது சென்ற வாரத்தில் என்றோ ஒரு நாள் என் அம்மா அந்த நாய்க்கு வைத்த சோறு தான் காரணம் என்று,
பாவம் அந்த நாய்க்கு தெரியாது, அன்று என் அப்பா எல்லோருக்கும் பரோட்டா வாங்கி வந்து விட்டார் என்று, அதனால் வீணாக இருந்த மீதி சோற்றை என்ன செய்வது என்று தெரியாமல் அப்பாவை திட்டியபடியே எதர்ச்சியாக அந்த நாய்க்கு வைத்தார் என் அம்மா, அதனை அந்த நாய் மிகவும் எமோஷனலாக எடுத்துக்கொண்டது போல,
நாய் நன்றி உள்ளது என்று சொல்வார்களே அதை அன்று தான் உணர்ந்தேன்,பின் நான் அதுக்கு பிஸ்கட் வாங்கி போட, அதுவும் நான் செல்லும் இடத்திற்க்கெல்லாம் வர ஆரம்பித்தது, வயல்வெளி,மைதானம்,ஆற்றங்கரை,மாந்தோப்பு என எல்லா இடமும் சுற்றி திரிந்தோம்,
விளையாட போகும் போதெல்லாம் அது என் பின்னலையே வர “டேய் உன் நாய சும்மா இருக்க சொல்லுடா” என்று என் நண்பர்கள் என்னிடம் சொல்லும் போது தான், அது என்னுடைய நாயாகவே மாறியது, அதற்கு டைகர் என்று பெயரும் வைத்தேன்,
எனக்காக ஒருவன், என்னை பாதுகாக்க ஒருவன், அதை மிக சிறப்பான ஒரு உணர்வாக கருதினேன்,என்னை யாரும் அவ்வளவு சீக்கிரம் எதுவும் செய்து விட முடியாது என்ற கர்வம் கலந்த தைரியத்தை எனக்கு கொடுத்தான் அந்த டைகர்
பள்ளி விடுமுறை நாட்களில் அடிக்கடி தூரத்தில் இருக்கும் எங்கள் பெரியம்மா வீட்டிற்கு செல்வது வழக்கம், அன்று பேருந்து நிறுத்தம் வரை என்னோடு வந்து என்னை பஸ் ஏற்றிவிட்டான் டைகர், நானும் டாட்டா காட்டிவிட்டு பேருந்தில் ஏறி சந்தோசமாக ஜன்னல் சீட்டில் அமர்ந்தேன், பின்பு ஜன்னல் வழியே திரும்பி பார்த்த பிறகு தான் தெரிந்தது, இடைவிடாது பேருந்தை துரத்திக்கொண்டே வந்துக்கொண்டிருந்தான் டைகர், அன்று தான் அவன் பேரன்பும், அவன் என்னை பிரிந்ததின் தவிப்பும் புரிந்தது

சிறிது நேரத்திற்கு பிறகு பேருந்து வேகமாக செல்ல, அவன் தொலைவில் எங்கோ காணாமல் போனான், காரணமே இல்லாமல் இருவருக்கும் அதிகபடியான அலாதியான அன்பு தோற்றிக்கொண்டது, இது எப்படி நிகழ்ந்தது என்று கூட எங்களுக்கு தெரியாது, எப்போதும் சந்தோசமாக பெரியமா வீட்டுக்கு செல்லும் நான், இந்த முறை டைகரை பற்றி தான் யோசித்துக்கொண்டிருந்தேன், நான் இல்லாமல் அவன் என்ன செய்துக்கொண்டிருப்பான் என்று யோசித்தேன்,
நாய்க்கென்று தனியாக பிஸ்கட் எல்லாம் இருக்கிறது என்பதே என் பெரியமா ஊரில் தான் எனக்கு தெரிய வந்தது, உடனே நான் வீட்டில் அடம் பிடித்து டைகர் க்கு ரெண்டு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி வைத்தேன் பின் விடுமுறை முடிந்து மீண்டும் என் சொந்த ஊருக்கு திரும்பிய கையோடு நான் டைகரை தேட
“அந்த வெள்ள நாய காரு காரன் அடிச்சிட்டு போய்டான்,ரோட்டுலையே செத்துகெடந்துச்சு,அப்றம் எல்லாருமா சேந்து பொதச்சிடோம்” என்று என் பாட்டி கூறினார்,
என் மனதில் புதுமையான ஒரு வலி,இதற்க்கு முன்னால் நான் இவ்வளவு கனத்தை உணர்ந்ததே இல்லை, நான் பொறுமையாக சென்று மெயின் ரோட்டில் பாட்டி சொன்ன இடத்தில் பார்த்தேன், அங்கே மணல் மூடி மறைத்திருந்த தடம் இருந்தபோதிலும் தார் சாலையில் அந்த வெள்ளையனின் ரத்தம் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது,
பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை விட்டு அவன் ஓடிவருவதை தான் கடைசியாக பார்த்தேன், எங்கிருந்தோ வந்து என்னோடு ஒட்டிக்கொண்டு என் கால்களில் இடுக்கில் விளையாடிய ஒரு தற்க்காலிக நண்பனாக அவன் மறைந்து போனான்,
நாட்கள் செல்ல செல்ல எல்லாம் இயல்பாக மாறிவிட்டது,அவனிற்காக வாங்கிய பிஸ்கட் என்ன ஆனது என்பது கூட நினைவில் இல்லை, அதன் பிறகு நான் எந்த நாயையும் ஏறெடுத்துக்கூட பார்க்கவில்லை, பின் நாட்களில் நண்பர்கள் நாய் வைத்திருத்தால் கூட அதோடு நான் பெரிதாக விளையாடியதில்லை
எத்தனை நீண்ட வருடங்கள் கடந்தாலும் அவ்வபோது மனதை லேசாக அவன் நச்சரித்துக்கொண்டு தான் இருக்கிறான், அவனுடைய சாயலில் நான் இன்னும் நெறைய டைகர்களை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறேன்.
நாம் எல்லோருமே தெரு நாய்களோடு ஏதோ ஒரு வகையில் வாழ்கையில் பிணைக்கப்பட்டு தான் வாழ்ந்திருப்போம், ஆனால் சூழ்நிலைகள்,அனுபவங்கள் எல்லோருக்கும் ஒன்று போல் அமைவதில்லை, தற்போது உள்ள சூழலில் தெரு நாய்கள் பற்றி முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது, காரணம் தெருநாய்களால் எளிய மக்கள் அடைகின்ற பாதிப்பு,
தெரு நாய்கள் சரியாக பராமரிக்காமல் ராபிஸ் போன்ற வியாதிகளால் பாதிப்பது பொதுமக்களுக்கு மேலும் ஆபத்தை ஏற்படுத்துகிறது, இப்படிப்பட்ட சூழலை கண்டிப்பாக நாம் ஒரு சமுதாயமாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது
கண்டிப்பாக நாயின் மேல் எல்லோருக்குமே கணிசமான பாசம் இருப்பது உண்மைதான், ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னால் நம் நாயின் மேல் உள்ள பாசத்தை முன்நிறுத்துவது நியாயமாக இருக்காது என்பது தான் என் திட்டவட்டமான கருத்து,
நாய் கடியினால் இறந்த குழந்தைகளின் பெற்றோர்களின் கண்ணீர் முன்னால் நாம் அனைவரும் பேச தகுதி அற்றவர்களே,
தெரு நாய்களால் விபத்துக்கு உள்ளாகி நெருக்கமானவர்களை இழந்தவர்களுக்கு நாம் என்ன ஆறுதல் சொல்லிவிட முடியும்?
நாம் என்னதான் ஆளுக்கு ஆள் பேசினாலும் பாதிக்கப்பட்டவர்களின் ஆழமான வலி அவர்களுக்கு மட்டுமே தெரியும்,மற்றவர்களுக்கு அது வெறும் விவாதம் தான்
மனிதன் எவ்வளவு புனிதமாக தூய்மையாக பேசினாலும்,கருணைக்கொண்டவனாக இருந்தாலும், அவன் உயிரை தாண்டி தான் மற்ற அனைத்துமே என்பது தான் எதார்த்தம்,மனிதர்கள் தங்களை தற்க்காத்து கொள்ள எதையும் செய்வார்கள் என்பதே உண்மை
எனவே எதார்த்ததை புரிந்து அனைவருமே பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்றே இந்த சூழலை கையாள வேண்டும், இந்த விஷயத்தில் மட்டும் அல்ல, அணைத்து விஷயதிலுமே பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையை புரிந்து அவர்கள் பக்கம் நின்று யோசிப்பதே சரியாக இருக்கும்
மனிதாபிமானத்திற்கு பிறகே இங்கு அனைத்தும், மனிதாபிமானத்தை கொன்று மிருகாபிமானத்தை வளர்க்க வேண்டிய அவசியமில்லை, மனிதாபிமானத்தையும், பிறகு மிருகாபிமானத்தையும் சேர்த்து வளர்க்க வேண்டிய பொறுப்பும் நம்மிடம் உள்ளது என்பதை உணர்வோம்
முடிந்த வரையில் தெருநாய்களை சீர்ப்படுத்தி, பராமரிக்க அரசாங்கதுடன் சேர்ந்து நாமும் முயற்சிப்போம், இனி தெருநாய்களால் ஒரு மனிதன் கூட பாதிக்கபடக்கூடாது என்ற விழிப்புணர்வை பெற்று மனிதநேயத்தை முதன்மை என காப்போம்...
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.