``இந்தியை இப்படித்தான் கற்றுக் கொண்டேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
திண்டுக்கல் : சாதி மாறி திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை கைது
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறவை தொழில் செய்து வருகிறார்.
கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவர் மகள் ஆர்த்தி (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்திருக்கின்றனர்.
வீட்டின் கடும் எதிர்ப்புகளை மீறி மூன்று மாதங்களுக்கு முன் இருவரும் காதல் திருமணம் செய்துள்ளனர். ராமசந்திரன் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் கடும் ஆத்திரத்தில் இருந்ததோடு, இரண்டு முறை கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் குளிப்பட்டி கிராமத்திற்கு பால் கறவைக்கு ராமச்சந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தை அடுத்து பெரியார் பாசன கால்வாய் பாலத்தில் ராமச்சந்திரன் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வழிமறித்த பெண்ணின் தந்தை சந்திரன் கண்ணிமைக்கும் நேரத்தில் ராமச்சந்திரனை அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். கை துண்டான நிலையில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமச்சந்திரன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இதையடுத்து சந்திரன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சாதி மாறி திருமணம் செய்ததால் தான் இந்த கொலை நடந்துள்ளது என்றும் இந்த படுகொலையில் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரதீப்பிடம் ராமசந்திரனின் பெற்றோர் புகாரளித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.