கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசா...
நாமக்கல்: கிட்னி விற்பனையில் ஈடுபட்ட 2 புரோக்கர்கள் கைது; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விசைத்தறி கூலித் தொழிலாளர்களிடம் பணம் தருவதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, குறைந்த விலைக்குக் கிட்னி விற்பனை நடந்துள்ளதாகத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில், நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குமாரபாளையம் அன்னை சத்யா நகரில் கடந்த ஜூன் மாதம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் சட்டவிரோதமாகக் கிட்னி விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறையினர் போலீசிடம் புகார் அளித்தனர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், இந்த சம்பவம் விசாரணை நடத்த தமிழக மருத்துவ திட்ட இயக்குனர் வினித் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அந்த குழு நடத்திய விசாரணையில், போலி ஆவணங்களை தயாரித்து ஏழை விசைத்தறி கூலி தொழிலாளர்களிடம் சட்ட விரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபட்டது.

இதில் புரோக்கர்களாக செயல்பட்டு குறைந்த விலைக்கு கிட்னியை விற்பனை செய்தது தெரியவந்தது. சட்டவிரோத கிட்னி விற்பனையில் ஈடுபட்ட இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மதுரை உயர்நீதிமன்றம் தென்மண்டல காவல்துறை தலைவர் பிரேமானந்த் சிம்ஹா தலைமையில் விசாரணை குழு அமைத்தது.
இந்த நிலையில், சட்டவிரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபட்ட புரோக்கர்கள் ஆனந்த் மற்றும் ஸ்டான்லி மோகன் ஆகிய இருவரையும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் மேலும் பலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.