கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசா...
`இந்து கடைகளில் பொருட்கள் வாங்குங்கள்’ - எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு; விளக்கம் கேட்கும் அஜித் பவார்
மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாட முழு அளவில் தயாராகி வருகின்றனர். ஜவுளி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிராவில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ சங்க்ராம் ஜக்தாப் தீபாவளிக்கான பொருட்களை இந்துகள் நடத்தும் கடைகளில் இருந்து வாங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
அகில்யாநகரை சேர்ந்த சங்க்ராம் ஜக்தாப் சோலாப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ''தீபாவளிக்கு ஷாப்பிங் செய்யும்போது நமது பணம், பரிவர்த்தனை, பயன்கள் இந்துக்களை சென்றடைய வேண்டும் என்று அனைவரிடம் கேட்டுக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உடனே ஜக்தாப் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். அதோடு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் குறிப்பிட்டார். இது குறித்து அஜித் பவார் அளித்த பேட்டியில், "எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடும் எந்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி.யையும் கட்சி ஏற்றுக்கொள்ளாது.

மகாராஷ்டிரா சத்ரபதி சிவாஜி, சத்ரபதி ஷாஹு மகாராஜ் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கரின் பூமி, அனைவரையும் அரவனைத்து செல்லக்கூடியது'' என்று குறிப்பிட்டார்.
நேற்று புனேவில் மீண்டும் சர்ச்சைக்கு பதிலளித்த அஜித் பவார், "எம்.எல்.ஏ. நோட்டீஸுக்கு பதிலளித்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு கட்சி உறுப்பினர் கட்சிக் கொள்கைக்கு எதிராகப் பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது" என்றார். இப்பிரசனை குறித்து அஜித் பவாரிடம் பேசுவேன் என்று சங்க்ராம் தெரிவித்தார். சங்க்ராமை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என்று சுப்ரியா சுலே எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்.எல்.ஏ.ஜக்தாப் சர்ச்சையாக பேசுவது இது ஒன்றும் முதல்முறை கிடையாது. கடந்த ஜூன் மாதமும் முஸ்லிம்களுக்கு எதிராக பேசி இருந்தார். அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணியில் இருந்தாலும் தொடர்ந்து மதசார்பர்ற கட்சி என்ற அந்தஸ்தை பின்பற்ற முயன்று வருகிறது.