Bison: "துருவை கபடி நேஷனல் டீமில் விளையாட கூப்பிடுவாங்க!" - பசுபதி கலகல பேச்சு
சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு - தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?
சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலையில் கவசங்கள் மீது தங்கம் பூசுவதாக கூறி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அதை எடுத்துச் சென்று மோசடி செய்யப்பட்டதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில் தங்கம் பதித்ததில் மோசடி நடந்ததாகவும் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்தி, ஆறு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை ஐகோர்ட் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த இரண்டு மோசடிகளிலும் வெவ்வேறு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால், தனித்தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உன்னிகிருஷ்ணன் போற்றி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட சபரிமலை முன்னாள் நிர்வாக அதிகாரி முராரி பாபு, முன்னாள் தேவசம்போர்டு செயலர் ஜெயஸ்ரீ, முன்னாள் திருவாபரண கமிஷனர்கள் பைஜூ, ராதாகிருஷ்ணன், முன்னாள் எக்ஸிகியூட்டிவ் ஆப்பீசர்கள் சுதிஷ்குமார், ராஜேந்திரபிரசாத், அசிஸ்டெண்ட் இன்ஜினியர் சுனில்குமார், முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர்கள் ஸ்ரீகுமார், ராஜேந்திரன் நாயர் ஆகியோருக்கு திருட்டு, கூட்டுச்சதி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணங்கள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
இதில் 8-வது இடத்தில் அன்றைய சபரிமலை நிர்வாகத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற விசாரணையில் 474.9 கிராம் தங்கம் திருடப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதுபற்றி திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பிரசாந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"சபரிமலை ஐயப்பன் சுவாமி கோயிலுக்கு சொந்தமான சிறு துண்டு தங்கத்தையும் திருட்டுப்போக விடமாட்டோம். 1998-ம் ஆண்டில் விஜய் மல்லையா வழங்கிய தங்கம் தொடர்பாக விசாரணை நடக்கட்டும். சிறப்பு விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்கட்டும்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் உள்ள அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற ஊழியர்களாக இருந்தால், விசாரணை முடிவு வந்ததும் அவர்களின் பென்ஷன் நிறுத்தப்படும் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். சபரிமலை தொடர்பாக மர்மமான கதைகள் கூறுவதற்கு முடிவு ஏற்பட வேண்டும்.

உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு துவாரபாலகர்களின் தங்க கவசங்களை கொடுத்து அனுப்ப வேண்டும் என்று நான் கூறவில்லை. அப்படியே நான் கொண்டுசெல்லக் கூறியதாக நிரூபித்தால் உடனே ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்.
2024-ம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றியிடம் தங்க கவசங்களை கொடுத்து அனுப்ப வேண்டாம் என்று தான் நான் கூறினேன்.
அப்போது திருவாபரணம் கமிஷனராக இருந்தவர் வேறு நபர். அவருக்கு ஏற்பட்ட குழப்பம்தான் இதற்கெல்லாம் காரணம். சபரிமலையில் இருந்து எடுத்துச் சென்ற அனைத்து தங்கங்களையும் திரும்ப கொண்டுவருவோம். திருவிதாங்கூர் தேவசம்போர்டோ, அரசோ தவறு செய்தவர்களுக்கு துணை நிற்காது," என்றார்.