கரூர் துயரம்: `விசாரணை முடியட்டும்; யார் தவறு என்பது தெரிந்துவிடும்' சிபிஐ விசா...
Doctor Vikatan: அதிகாலை முதுகுவலி, தூங்கி எழுந்த பிறகும் நீடிக்கிறது - தீர்வு என்ன?
Doctor Vikatan: நான் 35 வயது ஆண். எனக்கு தினமும் அதிகாலை 4 மணிக்கு முதுகுவலி வருகிறது. தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும்வரையும் சில நேரங்களில் தூங்கி எழுந்திருந்த பிறகும் வலி தொடர்கிறது. தூக்கம் கெட்டுப்போனால் வலி இன்னும் அதிகரிக்கிறது. எனக்கு சுகர், பிபி போன்ற எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த வலியிலிருந்து மீள எனக்கு ஆலோசனை சொல்வீர்களா?
-Krishnan Mani, விகடன் இணையத்திலிருந்து
பதில் சொல்கிறார், சேலத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு மற்றும் வலி நிர்வாக மருத்துவர் நித்யா மனோஜ்.

வலிகளில் பல வகை உண்டு. இன்ஃபெக்ஷனால் (Infection), அதாவது, கிருமித்தொற்றால் ஏற்படும் வலி, அடிபடுவதால் ஏற்படும் வலி, இன்ஃபளமேஷன் (Inflammation) எனப்படும் அழற்சி காரணமாக ஏற்படும் வலி என மூன்றாகப் பிரிக்கலாம்.
அடிபடுவதால் ஏற்படும் வலி, ஓய்வெடுக்கும் போது சரியாகிவிடும். அசைவுகளின் போது வலி இருக்கும். இன்ஃபெக்ஷனால் வரும் வலியில், அசைவுகளின் போதும் இருக்கும்... ஓய்வெடுக்கும் போதும் இருக்கும்.
அழற்சியின் காரணமாக ஏற்படும் வலி, ஓய்வில் இருக்கும்போது அதிகமாகவும், அசைவுகளின் போது குறைவாகவும் இருப்பதாக வித்தியாசமான அறிகுறியைக் காட்டும். இவற்றை வைத்துதான் வலியின் தன்மையைப் பிரிப்போம்.
அந்த வகையில் நீங்கள் குறிப்பிட்டுள்ள வலி, அழற்சியால் ஏற்பட்டது போல தெரிகிறது. இதற்கு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும்.
முதுகுத்தண்டை சுற்றியுள்ள தசைகள் இறுகியிருக்கின்றனவா, அழற்சியால் ஏற்படும் ஸ்பாண்டிலைட்டிஸ் (Spondylitis) பாதிப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
அந்த டெஸ்ட்டுகளை பார்த்துவிட்டு, அழற்சி தான் காரணம் என உறுதியானால், அதற்கான மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
உங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இல்லாத பட்சத்தில், இதை எளிதாக குணப்படுத்தி விடலாம், கவலை வேண்டாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.