Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
Doctor Vikatan: பல காலமாகச் செய்கிற, தெரிந்த வேலையில் திடீர் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏன்?
Doctor Vikatan: தெரிந்த பணிகளைச் செய்வதில் சில நேரங்களில் கவனமின்மையும் ஆர்வமின்மையும் ஏற்படுகின்றன. இதற்கு என்ன காரணம். இயல்பானதுதானா, எப்படித் தவிர்ப்பது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மனநல மருத்துவர் சுபா சார்லஸ்

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயம், அனேக நபர்கள் எதிர்கொள்வதுதான். அது குறித்துப் பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை. மனது எப்போதும் புதுமையைத் தேடக்கூடியது. கிரியேட்டிவ் திங்கிங்கை எதிர்பார்க்கும் மனதுக்கு, தெரிந்த வேலையும், பல காலமாகப் பார்த்த வேலையும் சலிப்பை ஏற்படுத்துவது சகஜம்தான்.
தங்கள் தொழிலுக்காக பெரும்பான்மை நேரத்தைச் செலவழித்து, அதில் சிறந்த பெயரைப் பெற்ற பல நபர்கள், பொழுதுபோக்குக்காக ஹாபிஸ் என்ற பெயரில் பல விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவதைப் பார்க்கலாம்.
இது அவர்களுடைய தொழிலை சலிப்பின்றி தொடர, ஒருவித தெம்பையும் மனத்தெளிவையும் கொடுக்கும். பல திறமைகள் கொண்ட மனித மூளைக்கு, அவ்வப்போது ஒரு சவால் தேவைப்படுகிறது.

இப்படிப்பட்ட கிரியேட்டிவ்வான, இலகுவான விஷயங்களில் கவனம் செலுத்தும்போது அந்தச் சவாலை எதிர்கொள்ள மூளை பழகுகிறது. அதன் செயல்திறன் பெருகிறது.தொழிலோ, வேலையோ... அதில் தொடர்ந்து 10 வருடங்கள் ஈடுபடும்போது அதில் ஒரு நிபுணத்துவம் ஏற்படுகிறது.
சில இளைஞர்கள் கஷ்டப்பட்டு பல வருடங்கள் செலவழித்து மருத்துவம் படிப்பார்கள். பிறகு அதில் மேற்படிப்பும் படித்து போராடி, வாழ்க்கையில் முன்னேறி குறிப்பிட்ட மருத்துவப் பிரிவில் ஸ்பெஷலைஸ் செய்வார்கள்.
எல்லாம் முடிந்து, வாழ்க்கையில் செட்டில் ஆகும் அந்த நேரம் அவர்களுக்குத் தன் துறையில் ஒரு சலிப்பு தட்டும். மனது எதற்காகவோ ஏங்கும்.
கடன் வாங்கி மருத்துவமனை கட்டுவார்கள். சிலர் பங்குச் சந்தையில் ஈடுபடுவார்கள். அரசியலில் ஈடுபட்டு, புது அனுபவங்களைப் பெறுவார்கள்.
இப்படி ஏதேனும் விஷயங்களில் தங்களைத் திசைதிருப்பி கொண்டு, மீண்டும் தங்களுடைய பழைய பணியில் இன்னும் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.
வேலையில் சலிப்பு ஏற்படும்போது தற்காலிக திசைத்திருப்பலுக்காக கேம்ஸ் விளையாடுவோரைப் பார்க்கலாம். இதெல்லாம் நடைமுறை வாழ்க்கையில் சகஜம்தான். ஆங்கிலத்தில் 'த்ரில் சீக்கிங் பிஹேவியர்' (Thrill-Seeking Behavior ) என்போம்.

அதாவது, மனித மனமானது எப்போதும் சவாலான, வித்தியாசமான எதையோ தேடிக்கொண்டே இருக்கும். எனவே, வேலையில் சலிப்பு தட்டும்போது, அதை உங்கள் திறமைக்கும் செயல்திறனுக்குமான எண்ட் கார்டாக நினைத்துக்கொள்ள வேண்டியதில்லை.
உங்களை, உங்கள் மூளையை அப்டேட் செய்து கொள்ள, ரெஃப்ரெஷ் செய்துகொள்ள ஏதேனும் விஷயத்தில் கவனத்தைத் திருப்பி, எனர்ஜி பெற்று மீண்டும் உங்கள் வேலையைத் தொடரலாம்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.