Vikatan Tele Awards 2024: "விஜய் சார்ட்ட இந்தக் கேள்விதான் கேட்பேன்" - திவ்யதர்ஷ...
தீபாவளி: `வீட்டை சுத்தம் செய்த போது கிடைத்த 2000 ரூபாய் நோட்டுகள்' - என்ன செய்யலாம்?
தீபாவளி பண்டிகை முன்னிட்டு வீட்டை சுத்தம் செய்யும் போது, இரண்டு லட்சம் மதிப்பிலான பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கிடைத்துள்ளன.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் தங்களது வீடுகளை சுத்தம் செய்யும் பணிகளில் மக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சமயத்தில் பல ஆண்டுகளாக காணாமல் போன பொருள்கள் கிடைக்கும்.
அந்த வகையில் ரெட்டிட் தளத்தில் ராகுல் குமார் என்பவர் தீபாவளியை முன்னிட்டு வீடு சுத்தம் செய்யும் போது, இரண்டு லட்சம் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து தெரிவித்துள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரெட்டிட் பதிவின்படி,
”தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்யும்போது என் அம்மா பழைய டிடிஎச் பாக்ஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புழக்கத்தில் இல்லாத பழைய 2000 ரூபாய் நோட்டுகளை கண்டுபிடித்திருக்கிறார்.

பண இழப்பு காலத்தில் என் அப்பா இதை வைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன், இந்த விஷயம் குறித்த இன்னும் அவர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. அடுத்து என்ன செய்வது என்று ஆலோசனை கூறுங்கள்” என்று பதிவிட்டிருக்கிறார் ராகுல் குமார்.
அதனுடன் கண்டுபிடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளன.
இதை அடுத்து இந்த பதிவு இணையதளத்தில் வைரலாகி பலரும் இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
2000 ரூபாய் நோட்டுகளை தற்போதும் மாற்ற முடியுமா?
கடந்த 2016 ஆம் ஆண்டு பணமதிப்பு இழப்பு நடவடிக்கைக்கு பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகள் 2023 ஆம் ஆண்டில் புழக்கத்திலிருந்து திருப்பி பெறப்பட்டன.
2023 அக்டோபர் 7-ஆம் தேதிக்குப் பிறகு சாதாரண வங்கிக் கிளைகளில் 2000 ரூபாய் நோட்டுகள் மாற்ற முடியாது. ஆனால் பொதுமக்களிடம் மீதமுள்ள நோட்டுகளை மாற்றிக்கொள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தொடர்ந்து வாய்ப்பளிக்கிறது.
தற்போது, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற விரும்பினால், பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்.

ஆர்பிஐ (RBI) வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள 19 ரிசர்வ் வங்கியின் வெளியீட்டு அலுவலகங்களில் (Issue Offices) 2000 ரூபாய் நோட்டுகளை நேரடியாகச் சென்று மாற்றிக்கொள்ளலாம்.
ஒரு நபர் ஒரு நேரத்தில் ₹20,000 வரை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு 2023 அக்டோபர் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மாற்றுவதற்கு இதுவரை எந்த இறுதி காலக்கெடுவும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.