பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - ...
``மத்திய அமைச்சரானதால் வருமானம் நின்றுவிட்டது'' - பதவியிலிருந்து நீக்க கோரிக்கை வைத்த சுரேஷ் கோபி
சதானந்தன் மாஸ்டர்
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் சதானந்தன் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் சி.பி.எம் நிர்வாகியாக இருந்தார் சதானந்தன் மாஸ்டர். கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு சி.பி.எம் நிர்வாகிகளால் தாக்குதலுக்கு உள்ளானதில் இரண்டு கால்களையும் இழந்தார்.
கடந்த ஜூலை மாதம் சதானந்தன் மாஸ்டருக்கு பா.ஜ.க ராஜ்யசபா எம்.பி பதவி அளித்திருந்தது. இந்த நிலையில் கண்ணூரில் சதானந்தன் மாஸ்டரின் எம்.பி அலுவகம் திறப்புவிழாவில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி கலந்துகொண்டார்.
அந்த விழாவில் அமைச்சர் சுரேஷ் கோபி பேசுகையில், "நான் சதானந்தனின் எம்.பி அலுவலகத்தை திறந்து வைத்து அவரை இருக்கையில் அமரவைத்தேன்.

சுரேஷ் கோபி கோரிக்கை
அந்த சமயத்தில் வெகு சீக்கிரத்தில் அது ஒரு அமைச்சரின் அலுவலகமாக மாற வேண்டும் என மனதில் பிரார்த்தித்தேன். ஒரு அமைச்சரை அவரது இருக்கையில் அமரவைக்க நான் வரவேண்டும் என்பதுதான் எனது பிரார்த்தனையாக இருந்தது.
நான் சினிமாவில் நடிப்பதை தொடர வேண்டும் என நினைக்கிறேன். நிறைய சம்பாதிக்க வேண்டும். நான் மத்திய அமைச்சரான பிறகு எனது வருமானம் முற்றிலும் நின்று விட்டது. எனவே நான் சினிமாவில் நடிக்கவே விரும்புகிறேன்.
எனக்கு பதிலாக புதிதாக ராஜ்ய சபா எம்பியாக ஆக்கப்பட்டுள்ள சதானந்தனை மத்திய அமைச்சராக ஆக்குங்கள். கேரளாவில் இருந்து முதன்முதலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி நான் என்பதால் கட்சிக்கு என்மீது ஒரு நம்பிக்கை இருந்திருக்கலாம்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் ஒருவேளை அவர்கள் என்னை மத்திய அமைச்சர் ஆக்கி இருக்கலாம்.

நான் இங்கிருந்து ஆத்மார்த்தமாகக் கூறுகிறேன். என்னை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, சதானந்தனை அமைச்சராக்கினால் அது கேரளாவில் புதிய அரசியல் சரித்திரம் ஆகும் என நான் நம்புகிறேன்.
அப்படி அவர் அமைச்சரானால், நான் விட்டுக்கொடுத்ததால் கிடைத்த அமைச்சர் பதவி என்பதால், எனக்கான பணிகளையும் அவர்மூலம் நிறைவேற்றுவேன்.
தேர்தலுக்கு முந்தைய நாள் நான் செய்தியாளர்களிடம் பேசும்போது எனக்கு மத்திய அமைச்சராக வேண்டும் என்று ஆசை இல்லை எனத் தெரிவித்திருந்தேன்.
நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும்; அமைச்சரானால் எனக்கு அது இடையூறாக இருக்கும் எனவும் கூறியிருந்தேன். நான் மத்திய அமைச்சராக வேண்டும் என்று விரும்பவில்லை. அதற்காக எந்தப் பிரார்த்தனையும் செய்யவில்லை.
சொல்லப் போனால் நான் கட்சியில் மிகவும் இளைய உறுப்பினர். 2016 அக்டோபர் மாதம் 28-ம் தேதி வாக்கில் தான் நான் பா.ஜ.க உறுப்பினராக இணைந்தேன்.

இங்கு வைத்து நான் ஆத்மார்த்தமாகக் கூறுகிறேன், ராஜ்யசபா எம்.பி-யாக உள்ள சதானந்தனை அமைச்சராக ஆக்கினால் அது ஒரு சிறந்த அரசியல் சரித்திரமாக மாறும் என்பது எனது விருப்பம். சதானந்தனின் எம்.பி அலுவலகம் விரைவில் மத்திய அமைச்சர் அலுவலகமாக மாறட்டும்" எனக் கூறிவிட்டுக் கூட்டத்தினரைப் பார்த்து "ஏன் கைதட்டாமல் இருக்கிறீர்கள்" எனக் கேட்டார்.
உடனே கூட்டத்தினர் பலமாகக் கைதட்டினார்கள். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சமயத்தில் டெல்லிக்குச் சென்ற சுரேஷ்கோபி மத்திய அமைச்சர் ஆக விருப்பம் இல்லை என வெளிப்படையாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.