Vikatan Tele Awards 2024: "நம்பிக்கை மட்டுமே வைத்து சென்னைக்கு வந்தேன்" - கார்த்...
விளையாட்டாக கேபிளை இழுத்த சிறுவன்; ட்ரில்லிங் மெஷின் நெற்றியில் துளைத்து பலி - கேரளாவில் சோகம்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
மூத்த மகன் துருவ் நாத்துக்கு இரண்டரை வயது ஆகிறது. மகேஷ் வெளிநாட்டில் வேலைசெய்துவந்த நிலையில் இரண்டாவது குழந்தைக்கு நூல் கட்டும் நிகழ்வுக்காக ஊருக்கு வந்தார்.
கடந்த 8-ம் தேதி நூல் கட்டும் நிகழ்வு முடிந்த நிலையில் 9-ம் தேதி வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது மகன் துருவ் நாத் இன்னும் சில நாட்கள் வீட்டில் நிற்கும்படி கூறியதை அடுத்து பயணத்தை ரத்து செய்திருந்தார்.

இந்த நிலையில் வீட்டில் சில வேலைகளுக்காக சுவரில் ஓட்டையிட வேண்டியது இருந்ததால் ட்ரில்லிங் மிஷின் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார் மகேஷ்.
அந்த ட்ரில்லிங் மிஷினை பிளாஸ்டிக் கவரில் சுற்றி சமையல் அறை சிலாப்பில் வைத்திருந்தார்.
வீட்டில் உள்ளவர்கள் கவனிக்காத நேரத்தில் கவரில் விளையாட்டுப் பொருள் வைத்திருப்பதாக நினைத்த குழந்தை துருவ் நாத் ட்ரில்லிங் மிஷினின் கேபிளை பிடித்து இழுத்துள்ளான்.
சிலாப்பில் இருந்த ட்ரில்லிங் மிஷின் கீழே விழுந்ததில் துளையிடும் பிட் (ஆணி போன்ற பகுதி) குழந்தையின் நெற்றிப்பகுதியில் துளைத்து மூளைவரை காயம் ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர் உடனே அங்கு சென்று பார்த்தனர். படுகாயம் அடைந்த நிலையில் கிடந்த குழந்தையை உடனே மீட்டு எஸ்.பி போர்ட் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அனந்தபுரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது.

கடந்த 9-ம் தேதி காலை 11 மணிக்கு குழந்தைக்கு காயம் ஏற்பட்டு சிகிச்சைக்கு சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி இறந்தது.
மூளையில் காயம் ஏற்பட்டதால் குழந்தைக்கு மரணம் சம்பவித்ததாகக் கூறப்பட்டுள்ளது. குழந்தை இறந்ததும் துக்கம் தாளாமல் தந்தை மகேஷ் மருத்துவமனை கட்டடத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றார்.
அங்கிருந்த உறவினர்கள் அவரை தடுத்து மீட்டனர். குழந்தையின் உடலுக்கு நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.