ஜஸ்ட் ஒன் கால் ப்ளீஸ்! - திடீரென வரும் விருந்தாளிகளுக்கு சமர்ப்பணம்
Vikatan Tele Awards 2024: "நம்பிக்கை மட்டுமே வைத்து சென்னைக்கு வந்தேன்" - கார்த்திகைச் செல்வன்
சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா நேற்று நடைபெற்றது.
இதில் ச.கார்த்திகைச் செல்வன் (News 18) அவர்கள் 2024-ம் ஆண்டின் Best News Anchor விருதை பெற்றார். இயக்குநரும், கார்த்திகைச் செல்வனின் நெருங்கிய நண்பருமான ராஜூமுருகன் இவ்விருதை வழங்கி சிறப்பித்தார்.

கார்த்திகைச் செல்வன்
``இந்த விருது ரொம்ப முக்கியமானது. விருது அங்கீகாரம் மட்டுமல்ல, அது ஒரு பொறுப்புணர்வு.
விவாத நிகழ்ச்சிகளில் என்னதான் கூச்சல் களேபரமானாலும் நிதானமாக எப்படி கையாளுகிறீர்கள் என்று கேட்பார்கள். எதிர் இருப்பவரும் நம்மைப் போன்ற மனிதர்தானே என்று நினைக்கும்போது அந்த நிதானம் வந்துவிடுகிறது.
நான் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். ஆனா 'Disco with KS’ நிகழ்ச்சிதான் என்னையே நான் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் நிகழ்ச்சி. அதில் எத்தனையோ சாதனையாளர்களை நேர்காணல் எடுத்து வருகிறேன்.
கிரமாத்திலிருந்து முதன் முதலில் சென்னைக்கு வரும்போது இந்த மாநகரத்தின் இரைச்சல் என்னை பயமுறுத்தியது. அப்போது நம்பிக்கை மட்டுமே என்னிடம் இருந்தது. அந்த நம்பிக்கையில் அறத்தை கைவிடாமல் பத்திரிக்கைத் துறையில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். ” என்றார்.

ராஜு முருகன்
``நானும், கார்த்திகைச் செல்வனும் ஒரே நேரத்தில் எங்கள் பத்திரிக்கை பயணத்தைத் தொடங்கினோம். நாங்கள் ஆரம்பிக்கும்போது ஸ்மார்ட்போன் எல்லாம் இல்லை. இப்போது இந்த டிஜிட்டல் தலைமுறைகளிலும் பத்திரிக்கை அறத்தை விடாமல், அறத்தின் பக்கம் நிற்கும் பத்திரிக்கையாளர் என் நண்பன் கார்த்திகைச் செல்வன்” என்றார்.