``இந்தியை இப்படித்தான் கற்றுக் கொண்டேன்'' - ஏ.ஆர்.ரஹ்மான் ஷேரிங்ஸ்
கூட்டணிக்கு வலுசேர்க்கும் சகோதரர்கள்? - உத்தவ் இல்ல விருந்தில் குடும்பத்தோடு பங்கேற்ற ராஜ் தாக்கரே
மகாராஷ்டிராவில் சிவசேனா 2023-ம் ஆண்டு இரண்டாக உடைந்த பிறகு கடந்த 20 ஆண்டுகளாக பிரிந்திருந்த உத்தவ் தாக்கரே மற்றும் அவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்கள் இந்தி திணிப்புக்கு எதிராக முதலில் ஒன்று சேர்ந்து போர்க்கொடி தூக்கினர். அதுவே அவர்கள் மீண்டும் இணைய காரணமாக இருந்தது.
இதையடுத்து மகாராஷ்டிராவில் நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலில் ராஜ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலில் போட்டியிட உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளார். இதற்காக இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வருகின்றனர்.
ஒவ்வொரு சந்திப்புக்கும் எதாவது ஒரு காரணம் இருந்தாலும் அதற்கான வாய்ப்புகள் வரும்போது இருவரும் அதனை தவறவிடுவதில்லை. கடந்த சில மாதங்களில் இருவரும் 5 முறை சந்தித்து பேசி இருக்கின்றனர்.

தற்போது 6வது முறையாக மீண்டும் இருவரும் சந்தித்துள்ளனர். இம்முறை இரண்டு குடும்பமும் உத்தவ் தாக்கரேயின் இல்லத்தில் சந்தித்து பேசி இருக்கிறது. ராஜ் தாக்கரே தனது தாயார் உட்பட குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்தில் ஏற்பாடு செய்திருந்த விருந்துக்கு வந்திருந்தார்.
குடும்பத்தோடு உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு வந்த ராஜ் தாக்கரேயிடம் மும்பை மாநகராட்சி தேர்தல் கூட்டணி குறித்து கேட்டதற்கு, ''என்ன தேர்தல், எனது தாயார் என்னுடன் இருக்கிறார். புரிந்து கொள்ளுங்கள். இது தனிப்பட்ட குடும்ப பயணம். அரசியல் ரீதியிலானது கிடையாது'' என்று தெரிவித்தார்.
ராஜ் தாக்கரே கட்சி தொடங்கிய காலத்தில் இருந்து அவருடன் இருக்கும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா மூத்த தலைவர் பாலா நந்த்காவ்கர் இது குறித்து அளித்த பேட்டியில், ''தாக்கரே சகோதரர்கள் சந்தித்து பேசுவதை பார்த்து எனக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த மராத்தியர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்'' என்று தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே, ``தீபாவளி நேரத்தில் குடும்பத்தினர் சந்தித்துக்கொள்வது வழக்கம். இதற்கு அரசியல் சாயம் பூசவேண்டிய அவசியம் இல்லை'' என்று தெரிவித்தார். ஆனாலும் இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்துக்கொள்வது அவர்களிடையேயான உறவை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. ராஜ் தாக்கரே கடந்த சில ஆண்டுகளாக பா.ஜ.கவை பெரிதும் நம்பி இருந்தார். ஆனால் பா.ஜ.க அவரை கைவிட்டுவிட்டது. இதையடுத்து ராஜ் தாக்கரே உத்தவ் தாக்கரேயுடன் கைகோர்த்துள்ளார்.