புதுச்சேரி பல்கலைக்கழகம்: பாலியல் புகார் பேராசிரியரின் பதவி பறிப்பு! - நடவடிக்கை...
கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விவகாரத்தை விசாரிக்க தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது. சென்னை உயர் நீதிமன்றம் நடத்திய வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டது.

ஆனால் தமிழ்நாடு அரசு விசாரணையில் நம்பிக்கை இல்லை என தமிழக வெற்றிக் கழகம் சிபிஐ விசாரிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதுபோல பாதிக்கப்பட்டோர் தரப்பிலும் பாஜக வழக்கறிஞர்கள் தரப்பிலும் மனு அளிக்கப்பட்டது. இவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. விசாரணையைக் கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழுவையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், "இன்றைக்கு போட்ட உத்தரவுகள் எதுவும் நிரந்தரமான உத்தரவு கிடையாது. எல்லாமே இடைக்கால உத்தரவுகள் தான்.
இறுதி விசாரணைக்கு பிறகான தீர்ப்பில் இது இல்லை என்று சொல்லிவிட்டால் இடைக்கால உத்தரவுகள் அனைத்தும் ரத்து ஆகிவிடும்.
இடைக்காலமாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற சொல்லி இருக்கிறார்கள். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் இரண்டு காவல்துறை அதிகாரிகளுடன் சிபிஐ விசாரணையை கண்காணிக்க குழு அமைத்திருக்கிறார்கள்.

இன்று தீர்ப்பளிக்கப்பட்டபிறகு, வழக்குத் தொடுத்த இரண்டு பேர் எங்கள் பெயரில் மோசடியாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஒரு வழக்கு மோசடியாக போடப்பட்டிருப்பது தெரியவந்தால் நீதிமன்றம் அதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்துவிடும். அப்படியும் இந்த தீர்ப்பு ரத்தாகலாம்.
நாங்களும் நீதிமன்ற உத்தரவின்படி, எதிர்மனு தாக்கல் செய்கிறோம். இது இடைக்கால தீர்ப்புதான். 41 பேர் இறந்திருக்கிறார்கள், 146 பேர் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. தங்களை பாதுகாக்க முடியும் என்ற நினைப்பில் வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனால் இந்த இடைக்கால தீர்ப்பு இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த தீர்ப்பிக்குப் பிறகு, ஏற்கனவே தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையம் அப்படியே செயல்படும். தமிழக அரசின் சிறப்பு புலனாய்வு குழு இதுவரை மேற்கொண்ட விசாரணையை அப்படியே சிபிஐக்கு மாற்றிவிடும்." எனப் பேசியுள்ளார்.