Vikatan Tele Awards 2024: "நம்பிக்கை மட்டுமே வைத்து சென்னைக்கு வந்தேன்" - கார்த்...
BB TAMIL 9: DAY 7: மிக எளிதில் புண்படுத்திப் பேசும் பாரு; வெளியேறிய பிரவீன்காந்தியின் தத்துவ மழை!
நந்தினி வெளியேறிய நிலையில் இன்னொரு எலிமினேஷன் இருக்குமோ, இருக்காதோ என்று நினைத்தால் இருந்தது. அது பிரவீன் காந்தி.
பிற்போக்குத்தனமான கருத்துக்கள், சில தத்துவங்கள் போன்வற்றைப் பேசினாலும் பிரவீன் காந்தி எதையாவது செய்து கொண்டுதான் இருந்தார். அதைக் கூட செய்யாதவர்கள் வீட்டில் இன்னமும் இருக்கும் போது பிரவீன் காந்தியின் எலிமினேஷன் சரியல்ல என்று தோன்றுகிறது.

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? - நாள் 7
“வீட்டுக்கு உள்ள இருக்கறவங்க, சிறந்த, நல்ல மனிதர்களாக கூட இருப்பாங்க. ஆனா ஒருத்தர் கிட்ட அதிகாரம் தரப்படும் போது, அந்த அதிகாரம் அவர்களை எப்படியெல்லாம் மாத்துது, அதை எப்படி அவங்க ஹாண்டில் பண்றாங்கன்னு விசாரிப்போம்” என்கிற முன்னுரையுடன் வீட்டிற்குள் சென்றார் விசே.
“சூப்பர் டீலக்ஸ் வீட்டாரே.. உங்களுக்கு தரப்பட்ட சக்தி, அதிகாரம் ஆகியவற்றை நீங்க நல்லா புரிஞ்சு வெச்சிருக்கீங்களா.. என்னதான் செஞ்சீங்க.. சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார்.
ஒருவருமே இதற்கு முறையான பதில் சொல்லவில்லை. “கூப்பிட்டா வேலை செய்ய வர மாட்றாங்க சார்..” என்பதைத்தான் பலரும் சலிப்பான குரலில் புகார் சொன்னார்கள். “அவங்க வரலைன்னா தண்டனை தர்றதுக்கு எங்களுக்கு அதிக சக்தி வேணும்” என்றார் அராரோ.
“நாங்க சீக்கிரமா எழுந்திருச்சு.. அவங்களை நிறைய வேலை வாங்கியிருக்கலாம்..” என்று வினோத் சரியான டிராக்கில் ஆரம்பிக்கும் போதே அவரது கையைப் பிடித்து அமர வைக்க முயன்றார் அராரோ. (தூங்கற சொகுசை கெடுத்துருவான் போலயே?!)
“நாங்க ஜட்ஜா இருக்கறதால” என்று பிரவீன்காந்தி ஆரம்பிக்க “அது டாஸ்க் நேரத்துல மட்டும்தான். உக்காருங்க” என்று அவரை அமர வைத்தார் விசே.
பிக் பாஸ் வீட்டு தரப்பில் எழுந்த விக்ரம் “நாங்க பாடி முடிக்கறதுக்குள்ள நீங்க சாப்பிடணும்ன்ற மாதிரி சில விஷயங்கள் யோசிச்சோம்.. இப்படி சுவாரசியங்களை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனா அவங்க மனித உரிமை கமிஷன்ல புகார் தந்துருவாங்களோன்னு பயமா இருந்தது. அந்த அளவுக்கு எமோஷனலா ஹர்ட் ஆகறாங்க” என்று சொல்லியதை விசே பாராட்டினார்.

“ஒரு அடிப்படையை புரிஞ்சுக்கோங்க.. நீங்க விளையாட வந்திருக்கீங்க.. இப்ப இதுதான் உங்க முழுநேர வேலை. உங்களுக்கு தரப்பட்ட ரூல்ஸ், பவரை வெச்சு நீங்கதான் யோசிச்சு ஒவ்வொண்ணையும் டெவலப் பண்ணணும்.
அதுதான் உங்க திறமை. ஒவ்வொண்ணையும் எழுதித் தர முடியாது. நீங்க டெலவப் பண்ணிட்டே போங்க. அதுல ஏதாவது சந்தேகம்ன்னா பிக் பாஸ் இருக்கார். அவரு உள்ளே வருவார்.
முட்டுச்சந்துல மாட்டி அப்படியே நின்னுடாம நீங்களா யோசிச்சு ஆட்டத்தை சுவாரசியப்படுத்துங்க” என்று விசே சொல்வது ஒவ்வொரு சீசனிலும் சொல்லப்படும் உபதேசம்தான்.
சூப்பர் டீலக்ஸ் வீடு சரியாக பதில் சொல்ல முடியாமல் தடுமாறும் போதெல்லாம், பாருவும் திவாகரும் ரசித்து சிரித்தார்கள். எதிர் தரப்பை வெறுப்பேற்றுவது போலவே இந்த எக்ஸ்பிரஷன்கள் இருந்தன. அதிலும் பாரு இருக்கிறாரே… சசிகலாவின் பக்கத்திலேயே நின்று கொண்டு விதம் விதமான எக்ஸ்பிரஷன்களை ஒருவர் தந்து சோஷியல் மீடியாவில் கவனத்திற்கு உள்ளானார்.
அந்தப் பெண்மணியைப் போன்று பத்து மடங்கு எக்ஸ்பிரஷன்கள் பார்வதியிடமிருந்து பீறிட்டு வருகின்றன.
பார்வதியின் உடன்பிறப்பான திவாகரும், ஜாடிக்கேற்ற மூடி போல அதே போன்ற நக்கலான சிரிப்பை தந்து கொண்டேயிருக்க, நம்மைப் போலவே விசேவும் எரிச்சலாகி “இப்படி சிரிக்காதீங்க. மேனர்ஸ் இல்ல. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. உங்க சாரியை நீங்களே வெச்சுக்கங்க” என்று எச்சரிக்கையைத் தர அழுத குழந்தை வாயை மூடியது மாதிரி டபக்கென்று வாயை மூடினார் திவாகர்.

வீட்டின் தலைவரான துஷார், தனது பொறுப்புகளை உணர்ந்திருக்கிறாரா, எப்படி கையாளப் போகிறார் என்பதையெல்லாம் விசாரித்த விசே “வெறும் சத்தம் போடற இடமா இந்த இடத்தை மாத்திடாதீங்க. சுவாரசியமா ஆடுங்க” என்று சொன்ன அட்வைஸ் சிறப்பானது.
இந்த சீசனின் ஆரம்பம் முதலே ஹைடெஸிபல் சண்டைதான் பிரதானமாக இருக்கிறது. விசே பிரேக்கில் சென்றவுடன் ‘சூப்பர் டீலக்ஸ் வீட்டை’ இனி எப்படியெல்லாம் கையாளலாம் என்று பிக் பாஸ் வீடு ஆலோசனை செய்தது.
பிரேக் முடிந்து திரும்பிய விசே, ஒரு வில்லங்கமான டாஸ்க்குடன் வந்தார். சீசன் ஆரம்பித்த ஒரு வாரத்திற்குப் பிறகு யாருக்கெல்லாம் ஃபாலோயர்ஸ் கூடியிருப்பார்கள், யாருக்கெல்லாம் ஹேட்டர்ஸ் அதிகமாகியிருப்பார்கள் என்று ஒவ்வொருவரும் சொல்ல வேண்டும்.
தன்னைச் சுற்றி எத்தனை போ் எதிர்த்தாலும் நிறைய டென்ஷன் ஆகாமல் கூலாக கையாள்கிறார். வாய் வலிக்க வலிக்க விளக்கம் தருகிறார். ‘வொய் டென்ஷன்.. டோன்ட் வொர்ரி’ என்பது அவரது வாழ்க்கை முறையாக இருக்கிறது. ஆனால் நடிப்பு அரக்கன் என்கிற பெயரில் அவர் செய்யும் மிகையான சேஷ்டைகள்தான், அவரிடமுள்ள சில நல்ல விஷயங்களை கவனிக்க விடாமல் தடுத்து விடுகின்றன என்று தோன்றுகிறது.
இது ஓகே.. ‘ஹேட்டர்ஸ் யாருக்கு அதிகமாயிருப்பாங்க?’.. அனைத்து சாலைகளும் ரோமை நோக்கி…. என்கிற வாக்கியத்தைப் போல பெரும்பான்மையான தோ்வு பார்வதியாகத்தான் இருந்தது. தன்னுடைய பெயர் சொல்லப்படும் போதெல்லாம் ‘ஹய்யோ.. இவங்கள வெச்சிக்கிட்டு முடியல’ என்கிற மாதிரி எக்ஸ்பிரஷன் தந்து கொண்டிருந்தார் பாரு.
விசேவிடம் அதிகமாக குட்டு வாங்குகிற கம்ருதீன்
‘சர்வைவர்’ என்கிற ரியாலிட்டி ஷோவிலேயே பாருவின் அலப்பறைகள் ஏற்கெனவே காட்சியாகியிருக்கின்றன. அவரால் புறணி பேசாமல் இருக்க முடியாது. போலவே ‘அட்டென்ஷன் சீக்கிங்’ என்பதும் அதிகமாக இருக்கிறது.
மற்றவர்களை மிக எளிதில் புண்படுத்திப் பேசும் பாரு, தனக்கு என்று வரும் போது ‘நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்?’ என்று கலங்குகிறார்.
இது பாருவிற்கான சித்திரம் மட்டுமல்ல. நம்மில் பலரும் இப்படிப்பட்ட மனநிலையைத்தான் கொண்டிருக்கிறார்கள்.

“பாருவிற்குத்தான் ஃபாலோயர் அதிகமாயிருப்பாங்க” என்று தன் தோழியை விட்டுக் கொடுக்காமல் சொன்னார் திவாகர்.
ஆனால் பாரு சொன்னதோ ‘சுபிக்ஷா’வின் பெயரைத்தான். “என் கையைப் பாருங்க.. எப்படி அடிபட்டிருக்குது’ என்று நூற்றியோராவது முறையாக காட்டிய பாரு “இந்த வன்முறைக்கு காரணமான கெமிக்குத்தான் ஹேட்டர்ஸ் அதிகமாயிருப்பாங்க” என்று மறக்காமல் சொல்லி பழி தீர்த்துக் கொண்டார்.
ஃபாலோயர்ஸ் வரிசையில் வியன்னாவின் பெயரை வினோத் “ஓ.. நீங்க ஜெயில் பறவைங்களா இருந்தீங்கள்ல.. அந்த நட்பு போல” என்று சரியாக கிண்டலடித்தார் விசே. வித்தியாசமாக FJ வின் பெயரைச் சொன்ன கலையரசன் “இந்தப் பையனுக்குள்ள நிறைய திறமை இருக்கு.
மனப்பாடமா எல்லாத்தையும் சொல்லிடறான். என்னால ஆயிரம் குறள் சொல்ல முடியும்” என்று ஆரம்பித்து மாட்டிக் கொண்டார்.
“எங்க ஒரு பத்து குறள் சொல்லுங்க. பார்க்கலாம்” என்று விடாமல் நோண்டிய விசேவிடம் பத்து குறள்களைச் சொல்லுவதற்குள் திணறிப் போனார் கலையரசன்.
(பரவாயில்லை.. அது கூட தெரியாமல் எத்தனையோ இளைஞர்கள் இருக்கிறார்கள்!).

விசே கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லாமல் அவ்வப்போது மாட்டிக் கொள்கிறார்.
விசே பிரேக்கில் சென்றவுடன் “ஒரு சிலை செதுக்கப்படும் போது இப்படியான வலிகளைத் தாங்கித்தான் ஆகணும்” என்று தனக்குத் தானே கெத்தாக ஆறுதல் சொல்லிக் கொண்டார்.
“எல்லாமே சரியா நடந்தா, அதுல ஏதோவொரு தப்பு இருக்கு’ என்பதும் கம்ருதீன் சொன்ன தத்துவம்.
பிரேக் முடிந்து வந்த விசே “இந்த வாரம் எவிக்ஷன் இருக்கும்ன்னு நெனக்கறீங்களா.. இருந்தா யார் போவாங்கன்னு நெனக்கறீங்க?” என்கிற கேள்வியை எழுப்ப “இந்த வாரம் எவிக்ஷன் இருக்கும்” என்றே பலரும் சொன்னார்கள்.
வெளியேறுபவராக அப்சராவின் பெயரை பலரும் சொன்னதில் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருக்கிறார் அப்சரா.
“ரெண்டு பிரவீன்ல ஒருத்தரா இருக்கலாம். அது மோஸ்ட்லி காந்தியா இருக்கலாம்” என்று சரியாக யூகித்தார் பார்வதி. வியன்னா, அரோரா, கலை உள்ளிட்ட பலரும் காந்தியின் பெயரைச் சொன்னார்கள்.
முடிவு வெளியாகும் நேரம். அப்சரா மற்றும் கலையரசன் காப்பாற்றப்பட்ட செய்தியைச் சொன்ன விசே, அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் எவிக்ஷன் கார்டை காட்ட அதில் பிரவீன்காந்தியின் பெயர் இருந்தது.
மனிதர் இதை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. அப்பட்டமான ஏமாற்றம் தெரிந்தது.

முடிவு வெளியான மறுகணமே கதவு பக்கம் ஓடிய பிரவீன்காந்தியிடம் “சார்… ஏன் அவசரம்.. ஒரு பை சொல்லிட்டுப் போங்க” என்று மற்றவர்கள் பின்னாலேயே ஓட “யாரும் பக்கத்துல வராதீங்க.. ப்ளீஸ்.. எந்த சீனும் வேண்டாம்… தோத்தவன் மாதிரி என்னை டிரீட் பண்ணாதீங்க. நான் தோக்கலை.. என்னைத் தோற்கடிக்க யாரும் இன்னும் வரலை.. கிட்ட வராதீங்க.. ப்ளீஸ்” அனைவரையும் அப்புறப்படுத்தினார் காந்தி.
“அஞ்சு படங்கள் பண்ணவரு.. ம்… “என்று திவாகர் முனகியது சரியான விஷயம். ஒரு காலத்தில் ஹிட் படங்களைத் தந்து விட்டு பிறகு நிறைய வீழ்ச்சிகளை சந்தித்து மீண்டும் அடையாளம் காணலாம் என்று பிக் பாஸிற்குள் வந்து விட்டு அங்கேயும் முதல் வாரத்திலேயே வெளியேறுவது என்றால்.. அது நிச்சயம் சங்கடமான விஷயம்தான்.
அது சார்ந்த மனஉளைச்சல்தான் பிரவீன்காந்தியை இப்படி செயல்பட வைத்தததா அல்லது அவர் வெளிப்படுத்தும் மிகையான தன்னம்பிக்கையில் கொஞ்சம் உண்மை இருக்கிறதா என்று தெரியவில்லை.
மேடைக்கு வந்தார் பிரவீன்காந்தி. பொதுவாக விசேவே நிறைய தத்துவமாக பேசுகிறவர். அவரையே தோற்கடிக்கும் வகையில் தத்துவமழை பொழிந்தார் பிரவீன். “பிக் பாஸ் வீடுன்றது போதிமரம் மாதிரி. போன் கைல இல்லாம, எந்த டிஸ்ட்ராக்ஷனும் இல்லாம இருந்தது பெரிய அனுபவமா இருந்தது. மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் ஒருநாளாவது பிக் பாஸ் வீட்டுக்குள்ள இருந்து பார்க்கணும்.” என்றெல்லாம் பேசியவர் “நான் தூணிலும் இருப்பேன். துரும்பிலும் இருப்பேன்.. பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் இருப்பேன்.
மேடையிலும் இருப்பேன். எங்கும் நிறைந்திருப்பேன்” என்று மஹாவிஷ்ணு அவதாரம் எடுக்க, விசே ஜொ்க் ஆகி “சரிங்க.. சார். நீங்க பெரிய ஆளுதான். வீட்டுக்குள்ள இருக்கறவங்க கிட்ட விடைபெறலாமா?” என்று கேட்க “நான்தான் வீட்டுக்குள்ள இருக்கறனே..” என்று மறுபடியும் ஆரம்பித்தார் பிரவீன். (முடியல!)

ஒருவழியாக பயண வீடியோவை ஒளிபரப்பி பிரவீன்காந்தியை வழியனுப்பி பெருமூச்சுடன் பிரேக் விட்டார் விசே. திரும்பி வந்தவர் “அவர் போயிட்டாரா.. இன்னமும் இங்கேதான் இருக்காரா. யாராவது பார்த்து சொல்லுங்களேன்” என்று கிண்டலடித்தது டைமிங் காமெடிதான் என்றாலும் ஒரு சீனியர் டைரக்டரை அடுத்த நிமிடமே கலாய்த்திருக்க வேண்டாமோ?!
மீண்டும் வீட்டுக்குள் சென்ற விசே “வீட்டையெல்லாம் நல்லாப் பார்த்தீங்களா.. எத்தனை அருமையா இருக்கு.. ஆனா நீங்க லைட்டையெல்லாம் உடைச்சு விளையாடறீங்க. இதை உங்க வீடா நெனச்சா அப்படி செய்வீங்களா.. சுவாரசியமான ஆட்டத்தின் மூலம் இந்த வீட்டை இன்னமும் அழகாக்க வேண்டிய பொறுப்பு உங்க கிட்டதான் இருக்கு. வீட்டுக்கு உயிர் கிடையாது. நீங்கதான் அதைத் தரணும்” என்றெல்லாம் மோட்டிவேஷனாக பேசியதற்கு 19 போட்டியாளர்களும் உடன்பட்டனர். (பிரவீன்காந்தியுடன் சோ்த்து!)

கெட்ட ஜோக் சொல்லுவதென்றால் கூட்டத்தில் இருக்கிற சிறுபிள்ளைகளை ‘வெளியே போங்க’ என்று துரத்துவது பெரிய அண்ணன்களின் பழக்கம். அதைப் போல் சபரி மற்றும் கம்ருதீனை கார்டன் ஏரியாவிற்கு துரத்தினார் விசே.
கூடவே டிக்குசிக்கு டிக்குசிக்கு என்கிற சப்தத்துடன் எஃப்ஜேவும் துணைக்கு சென்றார். வெளியே போய் திரும்பினாலும் அந்த சஸ்பென்ஸை அவர்களால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. வெளியே இருந்த வாட்டர் டேங்க் அகற்றப்பட்டிருந்தது.
வெள்ளை யூனிபார்ம் அணிந்திருந்த பிரவீன்ராஜை ‘குட்பாய்’ என்று முதலில் பாராட்டியதின் மூலம் மறைமுகமாக ஆதிரைக்கு குட்டு வைத்தார் விசே.
மாஸ்க் அணிய மாட்டேன் என்று அடம்பிடித்தவரிடம் “பிக் பாஸ்க்குன்னு சில ரூல்ஸ் இருக்கு. அதையோ, என்னையோ விமர்சனம் பண்றதுல என்ன உபயோகம் இருக்கு.. லாஜிக்கலா யோசிங்க.. சீசன் ஃபுல்லாவா மாஸ்க் போடச் சொல்லப் போறாங்க. அது ஷோவிற்கு அசிங்கமா இருக்காதா.. ஒரு சவாலா எடுத்துக்கிட்டு மாஸ்க் போட்டு உங்க திறமையை காண்பிச்சிருக்கலாம். அதுதான் டாஸ்க்கை சுவாரசியப்படுத்தும்” என்று விசே அட்வைஸ் செய்தவுடன் மற்றவர்களும் வற்புறுத்தியதால் அரைமனதுடன் முகமூடியை அணிந்து கொண்டார் ஆதிரை.

பிறகு ஆரம்பித்தது அந்த நீண்ட பஞ்சாயத்து. ஒரு குவளை சோற்று விஷயத்திற்காக பெரிய அண்டா நேரத்திற்கு பேசி தீர்த்தார்கள். பஞ்சாயத்து என்றால் பாரு இல்லாமலா? அவர்தான் இதன் மையம். வாரஇறுதி நாள் என்பதால் பிக் பாஸ் அனுப்பிய ஸ்பெஷல் உணவு வந்தது. எல்லோருக்கும் சமமாக ரேஷன் முறையில் கப் அளவில் தரலாம் என்று கிச்சன் டீம் செய்து வைத்திருந்த பிளானை உடைத்து, கரண்டியில் அள்ளி போட்டுக் கொண்டார் பாரு.
“இப்படி ரூல்ஸ் பிரேக் பண்ணாதீங்க” என்று சபரி தடுத்ததும் “ப்ரோ.. நான் தேவையான அளவு கொஞ்சமா எடுத்தேன். கப் அளவு வாங்கி வேஸ்ட் செய்ய விரும்பலை.. கோயில்அன்னதானம் வாங்கி கப்புல வாங்கி சாப்பிட பிடிக்கலை” என்றெல்லாம் விதம் விதமான காரணங்களைச் சொன்னார் பாரு. “நீங்க சொல்லியிருந்தா அரை அளவு தந்திருப்போம்.. நீங்களா எடுத்தது சரியில்லதானே” என்று சபரி சமாதானக் காரணம் சொன்னாலும் பாருவிடம் அது எடுபடவில்லை.

“ஏம்ப்பா வளர்ற புள்ளய சாப்பிட விடாம அநியாயம் பண்றீங்க.. இதெல்லாம் சரியில்ல” என்று வழக்கம் போல் பாருவிற்கு சப்போர்ட்டாக திவாகர் களம் இறங்க, சபரி இன்னமும் டென்ஷன் ஆகி விட்டார். “ஏன்யா.. இப்படி டிவிஸ்ட் பண்றீங்க?”.. காமிரா முன்னால் புலம்பிக் கொண்டே உணவை சாப்பிட்டு முடித்தார் பாரு.
இந்த ‘அளவுச் சாப்பாட்டு’ பிரச்சினை இன்றைக்கும் நீடிப்பதை பிரமோவில் பார்க்க முடிகிறது. தண்ணீர்ப் பிரச்சினை ஒருவழியாக முடிந்தது என்று பார்த்தால் அடுத்தது உணவுப் பிரச்னை. பிரச்னை இல்லாமல், செய்யாமல் மனிதனால் வாழவே முடியாது என்பது வரலாற்று உண்மைதானே? பிக் பாஸ் வீடு மட்டும் எப்படி விதிவிலக்காக இருக்க முடியும்?!
பிரவீன்காந்தி எலிமினேஷன் பற்றி உங்கள் கருத்தென்ன? கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.