Vikatan Tele Awards 2024: "நம்பிக்கை மட்டுமே வைத்து சென்னைக்கு வந்தேன்" - கார்த்...
கரூர் துயரம்: `சிபிஐ விசாரிக்கும்; ஹைகோர்ட் கையாண்ட விதம்.!’ - உச்ச நீதிமன்ற அதிரடி | முழுவிவரம்
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பரப்புரை கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனிநபர் ஆணையத்தை அமைத்திருந்தது.
இது தொடர்பான விவகாரத்தை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தொடர்பான வழக்கை விசாரித்து தமிழக வெற்றிக்கழகம் மற்றும் கட்சியின் தலைவர் விஜய்க்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்திருந்தது.
இதற்கிடையில் உயர் நீதிமன்றத்தில் தங்களுக்கு எதிரான கருத்துக்களை நீக்க கோரியும், சிறப்பு விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. அதேபோல கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரை சேர்ந்தவர்களும் சிபிஐ விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் ஜி.எஸ் மணி என்பவரும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
மொத்தம் ஐந்து மனுக்களை கடந்த வாரம் விசாரித்த உச்ச நீதிமன்றம், மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே மகேஸ்வரி மற்றும் அஞ்சாறியா ஆகியோர் அடங்கிய அமர்வு விரிவான உத்தரவை பிறப்பித்தது.
தீர்ப்பில் சொல்லப்பட்டது என்ன?
தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை குடிமக்களின் அடிப்படை உரிமை சார்ந்த விவகாரமாக தாங்கள் கருதுவதாகவும் வெளிப்படைத்தன்மையுடன் பாரபட்சம் இல்லாத விசாரணையை இது போன்ற விவகாரங்களில் கேட்பது குடிமக்களின் உரிமை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நாங்கள் நம்புவதாகவும் தெரிவித்தனர். அதனால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட மூன்று பேர் கொண்ட குழுவை தாங்கள் அமைத்திருப்பதாகவும், இந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள் இந்த குழுவில் இடம் பெற்று இருப்பார்கள் என்றும் இந்த இருவரும் தமிழ்நாடு பிரிவு ஐபிஎஸ் அதிகாரிகளாக இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.
அதே நேரத்தில் இந்த மூன்று பேர் குழு கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தலாம் என்றும் தேவைப்பட்டால் எந்தத் தருணத்தில் வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தை அவர்கள் நாடலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவில் கூறினர்.

சிபிஐ தங்களது மாதாந்திர விசாரணை அறிக்கையை இந்த குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் உத்தரவை வாசித்து முடித்தவுடன் குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, `இந்த விவகாரத்தில் இரண்டு மனுதாரர்கள் தங்களது ஒப்புதலே இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த செய்யப்பட்டு இருப்பதாக புகார் தெரிவித்திருக்கிறார்கள்.
இதில் மிகப்பெரிய சதி இருக்கிறது எனவே இதை விரிவாக விசாரிக்க வேண்டும். இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று’ என கூறினார். `நிச்சயமாக அது குறித்து விசாரிக்கப்படும்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

உயர் நீதிமன்றம் மீது அதிருப்தி!
மேலும் சென்னை உயர் நீதிமன்றம் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை கையாண்ட விதம் குறித்தும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை நியமித்த பிறகு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எவ்வாறு இதில் தானாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு உத்தரவுகளை பிறப்பித்தார் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் கூட்ட நெரிசல் ஏற்பட்ட கரூர் பகுதி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதி வரம்பிற்குள் வருகின்றது. அப்படி இருக்கும் பொழுது உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு தன்னிச்சையாக எப்படி விசாரணை குழுவை அமைத்தது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மிகவும் நுணுக்கமான இந்த விஷயத்தை சென்னை உயர் நீதிமன்றம் இப்படி கையாண்டிருக்கக் கூடாது என அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், `ஒரு ரிக் மணுக்களை எவ்வாறு விசாரிக்க வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே இருக்கக்கூடிய நிலையில் அவை பின்பற்றப்பட்டதா என்பது குறித்து உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் பதிலளிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
`எங்கள் நீதிபதி ஒருவரை நியமித்து இருக்கிறோம்’
``கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் அனைத்து உண்மையும் வெளிவர வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். அதனால் தான் எங்கள் நீதிபதி ஒருவரை விசாரணையை கண்காணிக்க நாங்கள் நியமித்து இருக்கிறோம். விசாரணை முடியட்டும் யார் செய்தது தவறு என்பது தெரிந்துவிடும் ”என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து அனைத்து மனுக்கள் மீதான விசாரணையை தொடர்ந்து நடைபெறும் என அறிவித்தனர்.

அதே நேரத்தில் மனுதாரர்கள் சிலர் தங்களுக்கு தெரியாமலேயே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக புகார்கள் தெரிவித்துள்ள விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கியதோடு ஏற்கனவே தமிழக அரசு சில விவகாரங்களில் பதிலளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.