செய்திகள் :

கிருஷ்ணகிரி: "எங்கள் வயிற்றில் அடிக்காதீர்கள்" - திறக்கப்படாத தினசரி சந்தை; குமுறும் வியாபாரிகள்!

post image

கிருஷ்ணகிரி சந்தைப்பேட்டையில், நகராட்சி சார்பில் செயல்பட்டுவந்த தினசரி காய்கறி சந்தை வளாகத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 ஆம் நிதியாண்டின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் 77 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன.

அதாவது, சந்தையின் வெளிப்புறத்தில் ஷட்டர் கதவுடன் கூடிய 19 கான்கிரீட் கடைகள் கட்டப்பட்டுள்ளன. சந்தையின் உள்புற வளாகத்தில் தகரஷீட் பொருத்தப்பட்ட 58 திறந்தவெளி மேடை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

2023 டிசம்பர் 26-ம் தேதி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணிதான் பூமி பூஜை செய்து கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

2024 டிசம்பர் 21-ம் தேதி கடைகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகும், இதுவரை ஒரு கடை கூடப் பயன்பாட்டுக்கு விடப்படவில்லை.

இந்த நிலையில், ``இக்கடைகளைக் கூடுதல் வாடகைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்க நகராட்சி நிர்வாகம் முயல்கிறது’’ என வியாபாரிகள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

இதுபற்றி, வியாபாரிகள் கூறுகையில், ``சந்தைப்பேட்டையில் 2000 ஆம் ஆண்டு முதல், இந்தக் காய்கறி சந்தை செயல்பட்டுவருகிறது. 2006 ஆம் ஆண்டில் சந்தை கட்டடம் புதுப்பிக்கப்பட்டன.

சந்தைப்பேட்டை தினசரி சந்தை
சந்தைப்பேட்டை தினசரி சந்தை

மேலும், 2023-ல் மறுசீரமைப்பு செய்ய கடைகளை இடித்துவிட்டு புதிதாக 77 கடைகளைக் கட்டியுள்ளனர். வியாபாரிகள் ஒன்றுசேர்ந்து, `150 கடைகள் வேண்டும்’ என்று அப்போதே கோரிக்கை விடுத்தோம். ஆனால், நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.

இருந்தாலும், கடைகள் கட்டி முடித்து ஓராண்டு ஆகப் போகிறது. ஆனாலும், கடையை யாருக்கும் ஒதுக்கீடு செய்யாததால், பூட்டியே வைத்திருக்கிறது நகராட்சி நிர்வாகம். இதனால், வியாபாரிகள் தினந்தோறும் சாலையோரங்களில் திறந்தவெளியில் கடை நடத்துகின்றனர்.

சாலையோரங்களில் கடைப் போடுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. திறந்தவெளியில் கடை இருப்பதால், கால்நடைகள் காய்கறிகளைத் தின்று சேதப்படுத்தி செல்கின்றன. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடைகளின் ஒப்பந்தத்தைத் தனி நபரிடம் வழங்கவும், அதன் மூலம் மாத வாடகை வசூலிக்கவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக எங்களுக்குத் தகவல் வந்திருக்கிறது. ஏற்கெனவே, 'அங்கு கடை நடத்திவந்த வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும்’ என்ற உத்தரவாதத்தையும் நகராட்சி நிர்வாகம் மீறி வருகிறது.

நகராட்சி நிர்வாகம் விதித்துள்ள மாத வாடகை, நகர்ப் பகுதியிலுள்ள தனியார் கடைகளின் வாடகையைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக உள்ளது. அதாவது, `19 கான்கிரீட் கடைகளுக்கும் வைப்புத் தொகையாகத் தலா ரூ.1.50 லட்சம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள்.

மேலும் வங்கி உத்தரவாதமும் கொடுக்க வேண்டுமாம். `வங்கி உத்தரவாதம் இல்லாதவர்கள் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வைப்புத்தொகை என மொத்தமாக ரூ.3 லட்சம் செலுத்த வேண்டும்’ என்கிறார்கள்.

இந்த 19 கான்கிரீட் கடைகளையுமே தனித்தனியாக 12 ஆண்டுகளுக்குப் பொது ஏலம் மூலமாகக் குத்தகை விடுகிறார்கள்.

உட்புற திறந்தவெளி மேடை கடைகள்
உட்புற திறந்தவெளி மேடை கடைகள்

அதேபோல, மின் இணைப்பு வசதி, கதவு இல்லாத 58 திறந்தவெளி ஸ்டால் கடைகளையும் ஆண்டுக்கு ரூ.31 லட்சத்துக்குத் தனி நபர் குத்தகைக்கு விட முடிவு செய்திருக்கின்றனர். தனி நபர் குத்தகை என்றால், அவர் விருப்பப்படும் நபர்களுக்கே கடைகளை ஒதுக்குவார்.

அப்படியெனில், வெளியில் இருந்து புதிய வியாபாரிகள் வந்து எங்கள் சந்தையை ஆக்கிரமித்துக்கொள்வார்கள். அதுமட்டுமின்றி, ஸ்டால் போன்ற ஒரு மேடை கடைக்கும் ரூ.1.50 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டுமாம். கூடுதலாக வங்கி உத்தரவாதம் அல்லது மேலும் ரூ.1.50 லட்சம் வைப்புத்தொகை செலுத்த வேண்டுமாம்.

வைப்புத்தொகையே தலையைக் கிறுகிறுக்க வைக்கிறது. அதைவிட மாத வாடகை நிர்ணயம் பதற வைத்திருக்கிறது. மொத்தமாக இந்த 77 கடைகளில், தலா ஒருகடைக்கு மாத வாடகையாக 7,030 ரூபாய் நிர்ணயித்திருக்கின்றனர்.

புதிய கடைகள் கட்டுவதற்கு முன்பு நாங்கள் தினமும் 50 ரூபாய் வாடகையும், வைப்புத்தொகையாக 5,000 ரூபாய் மட்டுமே கொடுத்திருந்தோம். இப்போது, தினமும் 100 ரூபாய் என நிர்ணயித்து, கடை ஒன்றுக்கு அதிகபட்சமாக 3,000 ரூபாய் வாடகை வாங்கலாம். அதுதான் சரியாக இருக்கும்.

எங்கள் வயிற்றில் அடித்து, பணம் பறிக்கத்தான் புதிய கடைகளைக் கட்டியிருக்கிறார்கள். திறந்தவெளி மேடை கடைகளுக்கு இன்னுமே மின் இணைப்பு வசதி வழங்கவில்லை. கதவு கூட இல்லை. மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தாலும் மழை, காற்று என்றால் காய்கறிகளைப் பத்திரப்படுத்த முடியாது.

வெளிப்புற கான்கிரீட் கடைகள்
வெளிப்புற கான்கிரீட் கடைகள்

எல்லாவற்றையும் சரி செய்துகொடுத்து, வாடகையைச் சரிப்பாதியாகக் குறைப்பதோடு, நிர்ணயிக்கப்பட்ட வைப்புத்தொகையையும் பெருமளவு குறைக்க வேண்டும். இதுதவிர மின்கட்டணம் ஏற்படுத்தப்பட்டால் அதற்கான கட்டணம், காவலாளி நியமிக்கப்பட்டால் அவருக்கான சம்பளத்தையும் கடையை ஏலம் எடுக்கும் வியாபாரிகளான நாங்கள்தான் தர வேண்டும்.

அதுமட்டுமின்றி, கொரோனாவுக்குப் பிறகு சுற்றுவட்டார மக்கள் சந்தைகளில் கூடுவதைத் தவிர்த்துவிட்டார்கள். அவரவர் வீதிகளுக்கே வரும் தள்ளுவண்டி கடைளிலும், உள்ளூர் கடைகளிலுமே காய்கறிகளை வாங்கிக் கொள்கிறார்கள். உழவர் சந்தைக்கும் போகிறார்கள்.

சந்தைப்பேட்டை சந்தையில் முன்பு இருந்ததுபோல வியாபாரம் இல்லை. எனவே, எங்கள் வயிற்றில் அடிக்காமல் வாடகை கட்டணத்தைக் குறைத்து, கடைகளை உடனடியாக எங்களுக்கு ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்’’ என்றனர் வேண்டுகோளாக.

கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் சதீஷ்குமாரிடம், இதுபற்றி விளக்கம் கேட்டோம். ``நான் கடந்த வாரம்தான் வேலூர் மாநகராட்சியில் இருந்து பணி மாறுதலாகி கிருஷ்ணகிரிக்கு வந்திருக்கிறேன். இங்குள்ள தினசரி சந்தைக்கு இன்னும் திறப்பு விழா நடத்தினார்களா? என்றும் எனக்குத் தெரியவில்லை.

உடனடியாக நகராட்சி அலுவலர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தி, சந்தையை விரைவாகத் திறந்து வியாபாரிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறேன்’’ என்றார்.

``பாஜக-வின் நாடகத்தில் நடிக்கும் அரசியல் நடிகர்தான் விஜய்" - விசிக எம்.பி ரவிக்குமார் விமர்சனம்

கரூரில் செப்டம்பர் 27-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து த.வெ... மேலும் பார்க்க

கரூர் நெரிசல் வழக்கு: "இதெல்லாம் தெரியாமல் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்" - திமுக எம்.பி வில்சன்

கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 140க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தை விசாரிக்க... மேலும் பார்க்க

கோவை: களமிறங்கிய சின்னத்தம்பி - மீண்டும் தொடங்கிய `ரோலக்ஸ்’ யானை ஆபரேஷன்

கோவை மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியிருப்பதால் மலையடிவார கிராமங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவு இருக்கும். முக்கியமாக நரசீபுரம், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மருதம... மேலும் பார்க்க

'கரூர் சிபிஐ விசாரணை ஸ்டாலினுக்கு பெரிய அடி' - வானதி சீனிவாசன்

கோவை புலியகுளம் பகுதியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “திராவிட மாடல் ஆட்சி பெண்களுக்கு எதிரான மாடலாக இருக்க... மேலும் பார்க்க

"வேலுநாச்சியாரின் மறு உருவமாக உள்ள அக்கா வானதி சீனிவாசன்.!" - ஆர்.பி.உதயகுமார் புகழாரம்

'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற பிரசார பயணத்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் தொடங்கினார். பாஜக விழாவில்நேற்று மாலை மதுரையில் நடைபெற்ற பிரசாரப் பயணம் தொடக்க விழாவில் மத்திய அமைச்சர்... மேலும் பார்க்க

பாமக: ``தந்தையின் சிகிச்சை குறித்து அன்புமணி தவறான தகவலை பரப்பி இருக்கிறார்'' - எம்எல்ஏ அருள்

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே கட்சி நிர்வாக அதிகாரம் தொடர்பாக பல மாதங்களாக உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் கடந்த வா... மேலும் பார்க்க