நினைவே.. உன் பெயர் சுமையா! | சிறுகதை
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பேருந்தின் சன்னலோரத்தில் தலை சாய்ந்திருந்தாள் அவள். வெளிக்காற்று இதமாய் தலை கோதிக் குழல் கலைத்து விளையாடியது .அவளுக்கு முன் இருக்கையில் ஒரு அம்மா தன் இரு குழந்தைகளுடன் அமர்ந்திருந்தாள்.ஏறத்தாழ பத்துவயதில் ஒரு சிறுமி, அவளை விட சுமார் மூன்று வயதில் சிறியவனாக ஒரு சிறுவன்..
அக்காவுக்கு தம்பிக்கும் ஜன்னல் வழியே யார் தலை நீட்டி விளையாடுவது என்று போட்டி ..சிறுமி தலை நீட்டுவதும் அவளை பின்னே இருந்து இழுத்து விட்டு சிறுவன் தலையை நீட்டுவதுமாக விளையாடிக் கொண்டு இருந்தனர் .விளையாட்டு எல்லை மீறும் போது அவர்களது தாயிடமிருந்து "ம்ம்ம் .." மென்ற ஒலி மட்டும் கிளம்பும். மற்றவர்களுக்கு வெறும் ஒலியாக இருப்பது அவர்கள் காதில் கட்டளையாக, எச்சரிக்கையாக ஒலிக்கும்.உடனடியாக சாது வேடமணிந்த பூனை போல பதுங்குவார்கள், மீண்டும் சிலநிமிடங்களில் பழைய கதைக்கு திரும்புவார்கள்.அவள் மௌனமாய் புன்னகைத்துக் கொண்டாள்..

வெளியே காற்று அவளைக் குளிர வைக்க முயன்றது போல குளிர் கொண்டு வீசியது . அவளது இதழோரம் விரக்திக் சிரிப்பொன்று நெளிந்தோடியது .பார்வை வட்டத்துக்குள் பட்டு விலகி பின்னோக்கி ஓடி மறைந்த மரக்கூட்டம் அவளது நினைவுகளையும் பின்னோக்கி இழுத்துச் சென்றது .அவளது சிறு வயது காலங்கள் இது போன்ற பேருந்து பயணங்களால் நிறைந்தவை .குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போதெல்லாம் அவளுக்கும் அவளது தம்பிக்கும் இடையில் ஒரு பாரதப் போரே நடக்கும் .
கடைசியில் பேருந்தில் மாட்டியிருக்கும் கடிகாரத்தைத் தஞ்சமடைவார்கள் இருவரும் .. ஜன்னலோர இருக்கையை நிமிடக் கணக்கில் சொந்தம் கொண்டாடிக் களித்ததெல்லாம் இந்த பிறவியில் தானா ??
திருநெல்வேலி ஊரின் எல்லைக்குள் பேருந்து நுழைந்திருந்தது . பழகிய இடங்களின் பெயர்களைப் பெரிய எழுத்தில் , கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் சுவர்களில் பார்க்கும் போது, மனதுக்குள் மெல்லிய தென்றலின் வருடலை உணர்ந்தாள்.
பழகிய ஊர்களைக் கடந்து செல்கையில் , கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் பறந்து விரிந்திருக்கும் பொட்டல் காடுகளைக் கூட விழி சிமிட்டாமல் பார்த்திருந்தாள். அடக்க முயன்றும் இயலாமல் கண்களில் வழிந்த கண்ணீர் காற்றின் வேகத்தில் சிதறி பக்கத்தில் அமர்ந்திருந்த பொக்கை வாய்க் கிழவியின் முகத்தில் விழுந்தது .
ஈரம் பட்டதில் கண்களைத் திறந்து பார்த்தவள் , அவசரமாக இவள் கண்களைத் துடைப்பதைக் கண்டாள் . "கொள்ள நாள் ஆயிப் போச்சா தாயி பொறந்த ஊரப் பாத்து.. ? அதான் ஊர் மண்ண மிதிக்கவும் கண்ணுல தண்ணியா கொட்டுது... " இவளது விளக்கத்தை எதிர் பாராது , கேள்வியும் நானே பதிலும் நானே என்று கண்டு கொண்டவளின் அனுபவப் பாய்ச்சலில் அதிசயித்துப் போனாள் . பேருந்து அவள் பிறந்த ஊரைக் கடந்து கொண்டு இருந்தது .
அது வேலை நிமித்தம் அவளது பெற்றோர் சில வருடங்கள் தற்காலிகமாக வாழ்ந்த ஊர் . அவள் அங்கே தான் பிறந்தாள் . சந்து வீட்டின் , தெருவைப் பார்த்த ஜன்னல் திட்டில் அவளை அமர வைத்துக் கொண்டு காக்கை ஆட்டுக்குட்டி என்று தெருவில் திரியும் ஜீவராசிகளைக் காட்டி அவளது ஆச்சி சோறு ஊட்டியது மங்கலாக நினைவில் ஆடியது . ஊருக்குள் சென்று பார்க்க வேண்டும் போல இருந்தது. கடவுளுக்கும் காதுகள் இருந்தனவோ? புறவழிச் சாலையை விட்டு பேருந்து ஊருக்குள் திரும்பியது .

"இவனுக இந்த ரோட்டை போட்டு முடிக்கறதுக்குள்ள ஊர்ல இருக்கவனுக்கெல்லாம் கல்யாணம் கண்டுரும் போல .. என்னவோ பளிங்குக் கல்லா பதிக்கப் போறவனுகளாட்டம் ...சல்லிய அள்ளி கொட்டி தார ஊத்தி மூட இம்புட்டு நாளா ?? கொட்டித் தொலைக்கறத வெரசாக் கொட்டுனாத்தான் என்னவாம் .."
பேருந்தினுள் யாரோ சலித்துக் கொண்டார்கள். அவர்களுக்கு சலிப்பாய் இருந்தது, இவளுக்கு சிலிர்ப்பாய் இருந்தது . ஊருக்குள் ஏதோ கோவில் திருவிழா போல. ஒலிபெருக்கி உச்ச பட்ச தொனியில் அம்மனை வணங்கிக் கொண்டிருந்தது. ஊர்க்காரர்கள், முளைப்பாரி சுமந்து கொண்டு ஊர்வலமாய் சென்று கொண்டிருந்தார்கள். தேங்கி நின்ற பேருந்து தெருவைக் காட்டியது.
" இப்போல்லாம் மெடிக்கல் சீட்டுக்கு லட்ச கணக்குல கேக்கறாங்க...நமக்கு வேண்டப்பட்டவங்க-னு சொல்லி 16 லட்சத்துக்கு பேசி முடிக்கலாம் ..யோசிச்சு சொல்லுங்க .."
"16 லட்சமெல்லாம் முடியுமான்னு தெரியல..அவ விதிப்படி நடக்கட்டும்.."
அவளது மருத்துவ கனவு கானல் நீரான அன்று கண்ணீருடன் நடந்து வந்த தெரு இது தான்..25 வருடம் ஆன பின்னும் பச்சை ரணமாய் வலித்தது.
தூரத்தில் தெரிந்த மொட்டை கோபுரம்..கிராமத்தின் வாசத்தை இன்னும் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்கள்... அதோ அந்த கட்டிடம்..வெள்ளையும் சிவப்புமாய் கல் பதித்த முகப்புடன்...தலையை குலுக்கி நினைவை விரட்டினாள்.. போதும்..என்னை துரத்தும் நினைவுகளே..இன்று மட்டுமேனும் கொஞ்சம் கருணை காட்டுங்களேன்...
கங்கை கொண்டான் கடந்து ,தாழையூத்து தாண்டி பேருந்து விரைந்து கொண்டிருந்தது..உடையார்பட்டி ஓடை கடந்து , திருநெல்வேலி ஜங்ஷனுக்குள் நுழைந்தது .எத்தனை வருடங்கள் கடந்து விட்டன..பழைய பேருந்து நிலையம் , ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாய் ஜொலித்துக் கொண்டிருந்தது .
அவளது மனதுக்கு நெருக்கமானது என்னவோ அதன் பழைய தோற்றம் தான் ..பச்சை வெள்ளையும் கலந்த சீருடையில் , இரட்டை சடையாட புத்தக பையுடன் ஓட்டமும் நடையுமாக பேருந்தை பிடிக்க ஓடி வரும் பள்ளிச் சிறுமி கண்களில் தோன்றி மறைந்தாள்..இதோ இப்போது பேருந்து நிற்கும் இதே இடம் தான்.அன்று இங்கே நிறைய கடைகள் இருந்தன..பழக்கடை,டீக்கடை, சகல நேரமும் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் மியூசிக்கல் கடை..
"அப்பாடி..ஒரு வழியா வந்திங்களே ..எவ்ளோ நேரம் காத்திருக்கேன் தெரியுமா ??"
"சாரிடா ..கிளம்பற நேரத்துல ஒரு அவசர வேலை வந்துருச்சு .. முடிச்சிட்டு வாரத்துக்கு கொஞ்சம் நேரமாயிருச்சு .."
"நீங்க வேலை பாக்கற இடம் எங்க இருக்கு?"
"சாலைக் குமாரசாமி கோவில் தெரியுமா ..அது தாண்டி கொஞ்ச தூரம் "
"சரி வாங்க ..நானும் கோவிலுக்கு போயி ரொம்ப நாள் ஆச்சு ..பேசிக்கிட்டே நடக்கலாம்.."
அவள் இருந்த ஜன்னலின் கீழ் வெளியே இருவர் பேசிக்கொள்ளும் உரையாடல்..குரல்கள் மெதுவாய்த் தேய்ந்து மறைந்தன..இதயம் வெடித்து விடும் போல் விம்மியது..பழைய நிகழ்வுகளின் நினைவுகள் சேர்ந்து நெஞ்சை அழுத்தின ... தாங்க முடியாத அழுகையில் மனம் அதிர்ந்தது , சத்தம் வெளியேறாமல் பற்களை கடித்து அடக்கிக்கொண்டாள்.
வண்ணாரப்பேட்டை புறவழிச் சாலை நோக்கி விரைந்த பேருந்து , சுலோச்சன முதலியார் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தது. கீழே வெள்ளிக் கோடாய் தாமிரபரணி.தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அணிவகுப்பு.காலத்தின் காயங்களையும், இழப்புகளின் துயரங்களையும் மௌனமாக ஜீரணித்து இன்னும் உயிர் சுமந்து நிற்கும் தன்னையே பிரதிபலிப்பது போல் உணர்ந்தாள் .

வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தம் வந்ததும் எழுந்து கொண்டாள் .இங்கே தான் இறங்க வேண்டும். சுற்றிலும் ஒலித்த வண்டிகளின் ஹாரன் ஒலியும் , கலவையாய் ஒலித்த இன்ன பிற சப்தங்களும் அந்த நிமிடம் ஏனோ மனதுக்கு ஆறுதலாகவே இருந்தது . இது அவளது ஊர் ..அவளைக் குழந்தையாய், சிறுமியாய் , மங்கையாய் கண்ட ஊர் .. நீண்டநெடுங்காலம் கழித்து தனது ஊரின் தரிசனம் கண்ட போது, உள்ளம் இன்பமும் துன்பமும் கலந்த கலவையில் நிரம்பியது. பழைய தெருக்கள், பழைய வீடுகள், பழைய மரங்களின் நிழல்கள் —ஏதும் இப்போது இல்லை .. காலம் எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறது.பிறந்து வளர்ந்த ஊரிலேயே இறுதி வரைக்கும் வாழும் வாழ்க்கை அமையப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் .
நெருங்கிய உறவில் ஒரு திருமணம் அவளை அத்தனை காலம் கழித்து அங்கே இழுத்து வந்திருக்கிறது . வலிக்குமெனத் தெரிந்தும் வாய்ப்புண்ணை நிரடிப்பார்க்கும் நாவினைப் போல, அந்த ஒரு கட்டிடத்தைப் "பார்க்காதே" என மனம் தடுத்தும் வெறித்து நோக்கின கண்கள் .. பல வருடங்களுக்கு முன் இதே போல நீ அலங்காரமாய் ஒளிர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்த ஒரு மாலை நேரத்தில், தொலைதூரத்தில் ஒரு முட்டாள் பெண் , கண்ணீரில் தன்னை கரைத்துக் கொண்டிருந்ததை நீ அறிவாயா?? மனம் மானசீகமாக கேள்வி கேட்டது .
இத்தனை வருடம் கழித்தும் மனம் பூகம்பம் கண்ட நிலம் போல் அதிர்ந்து அடங்கியது .. கண்களுக்குள் ஒரு கொத்து இருட்டு பரவி விலகியது. கால்களின் அடியில் பூமி ஒருமுறை புரண்டு படுத்தது. இல்லை..மறந்து விடு மனமே ..தனக்குள் மந்திரம் போல சொல்லிக் கொண்டாள் . கால்களை அழுந்த ஊன்றி தன்னை சமாளித்துக் கொண்டவள் , அருகில் இருந்த ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி நடந்தாள் . அவளது வீட்டு விலாசம் சொல்லி ஏறி அமர்ந்தாள் .
அவளது வீடு இருக்கும் தெருவினுள் நுழையும் போதே மனம் படபடத்தது . வீட்டின் முன் இறங்கியவள் ஈயக் குண்டாய் கனத்த கால்களை நகர்த்தி மதில் சுவர் கதவில் கை வைத்தாள் ..
" பாப்பா ..வந்திட்டியா..அப்போ இருந்து வாசலை பார்த்துட்டே இருக்கேன் " அவளது அம்மாவின் குரல் காதுகளில் ஒலிப்பது போல பிரமை தட்டியது .

அது அவளது வீடு ..அவர்களது கூடு . ஆயிரமாயிரம் நினைவுகளை அள்ளி அள்ளித் தந்த அட்சய பாத்திரம்..அவள் அமர்ந்து படிக்கும் வாசற்படி , குதித்தாடிய முற்றம் ..கோலமிட்டு பழகிய வெளி வாசல் ..
" அக்கா ..விளையாட வா.." அவளது தம்பி அழைப்பது போல் காதுகளில் எதிரொலித்தது .
"வாம்மா .." , வீட்டைப் பராமரித்துக் கொண்டு அங்கேயே தங்கி இருக்கும் தம்பதிகளின் வரவேற்பொலியில் கலைந்தாள்.வீட்டினுள் நுழைந்தவள் வாசலிலேயே அமர்ந்து விட்டாள் .அதல்லவா அவளது சிம்மாசனம்.
"என்னம்மா இங்கயே உக்கார்ந்துட்ட..உள்ள வாம்மா.."
"இருக்கட்டும்மா ..கொஞ்ச நேரம் இங்கயே இருக்கேன் .."
வாழ்ந்து பார்த்தவள்...சிறியவளின் மனஉணர்வுகளை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆதூரமாக புன்னகைத்து விட்டு உள்ளே சென்று விட்டாள் .சிறிது நேரத்தில் கையில் காபி கோப்பையுடன் வந்தவள் அவளது அருகில் அமர்ந்து கொண்டாள்.
"இல்லை-னு நினைச்சு பார்த்தா மனசு வலிக்கும் தான் ..பெத்தவங்க, கூட பிறந்தவங்க, பழகினவங்க னு எல்லாரையும் கூடவே வச்சுக்கணும்னா ஒவ்வொருத்தரும் ஒரு கல்யாண மண்டபம் கட்டி எல்லாரையும் உள்ள போட்டு அடைக்கணும் ..முடியுமா ?? பெத்தவங்க கண்ணுக்கு அப்புறமும், உனக்கு பிறந்த வீட்டுல தல சாய்க்க குடுத்து வச்சிருக்கு ..எல்லாருக்கும் இது வாய்க்குமா ..சொல்லு ..இந்த வீட்டோட ஒவ்வொரு மூலையிலும் நீ வாழ்ந்த வாழ்க்கையோட மிச்சம் ஒட்டி இருக்கு..நீ முகம் வாடி நின்னா உன்னைப் பெத்தவ மனசு குளிருமா ??.. சூடு ஆறும் முன்ன காப்பிய குடிச்சிட்டு உள்ளார வா தாயி..வாழ்ந்து பார்த்தவ சொல்லறேன் ..எனக்கும் நீ மக தான் .. பெத்து வளத்தது எல்லாம் கைய கழுவிட்டு போனப்போ என்னய தத்து எடுத்த மக நீ.. பசியோட வருவியே ன்னு ஆசையா என்னால முடிஞ்சது ஆக்கி வச்சிருக்கேன் ..கண்ண தொடச்சிகிட்டு எந்திரி .."
அருள் வந்தவள் போல சொல்லி விட்டு சென்றவள் நடை அவளை வளர்த்த அவளது ஆச்சியை நினைவு படுத்தியது . அவளைத் தொடர்ந்து உள்ளே சென்றவள் ஒரு நிமிடம் தன்னை 10 வயது சிறுமி போல உணர்ந்தாள் .
இந்த இடம் தானே ..அப்போது இங்கே தொலைப்பேசி இருந்தது .செல் போன்களின் ஜனனம் நிகழாத காலம் அது . மணியடித்ததும் எடுத்துப் பேச பெரிய போட்டியே நடக்கும். எத்தனையோ முறை யார் அழைப்பது என்று அவளால் கணிக்க முடிந்திருக்கிறது .. பெரும்பாலும் அவளது உள்ளுணர்வு சொல்வது சரியாகவே இருக்கும். மனம் தேடும் உறவுகளிடம் ஆசை ஆசையாய் பேசிய நிமிடங்களில் உணர்ந்த ஆறுதல் வார்த்தைகளில் வடிக்க இயலாதது.. சில நினைவுகள் உயிருடன், உணர்வுகளுடன் கலந்தவை . அவற்றை வார்த்தைகளில் வர்ணிப்பது அவற்றுக்கு செய்யும் நியாயமாக இருக்காது..
தன்னோடு உள்ளே வந்தவளைக் கண்ட பெரியவள் ஆறுதலாக புன்னகைத்தாள்.
"உனக்குன்னு உள்ளார ரூமை ரெடி பண்ணி வச்சிருக்கேன் .முகம் கழுவி துணி மாத்திட்டு வாம்மா..சாப்பிடலாம்"
"கொஞ்ச நேரம் ஆகட்டும்மா ..பசியில்லை .." என்றவள் வீட்டை அங்குலம் அங்குலமாக விழிகளால் வருடினாள். அம்மா நின்று சமைக்கும் அடுப்பு மேடை. அப்பா வழக்கமாக அமர்ந்திருக்கும் இரட்டைசோபா.
அதென்னவோ இவளை பார்த்தவுடன் தான் அவருக்கு கால் வலி எல்லாம் நினைவுக்கு வரும் ..
"பாப்பா ..கொஞ்சம் காலை பிடிச்சு விடேன்" என்பவரிடம் "போங்கப்பா..வேற வேலை இல்ல உங்களுக்கு .." என்று சலித்துக்கொண்டாலும், அவர் கேட்டதைச் செய்வாள். பூஜை மேடைக்கு எதிரில் தரையில் அமர்ந்து சுவரில் சாய்ந்து கொண்டாள் .கண்களை மூடிக்கொண்டவளுக்குள் பழைய நினைவுகள் ஊர்வலமாய் அணிவகுத்தன .
"இதென்ன இதயத்தோட படமா...சப்பி போட்ட மாங்கொட்ட மாதிரி இருக்கு ..சரியா வரைய நான் சொல்லித் தரவா?"
" தம்பி தானே டா ..அவனோட என்ன சண்டை உனக்கு..விட்டு குடுத்து போலாம் ல.."
"பாடம் புரியலயனு யாரவது அழுவங்களா ..நான் சொல்லித் தரேன் வா.."
" அம்மா கிட்ட இப்டி தான் கோபப்படுவியா ..தப்பு டா .."
" இப்படி பேசி விளையாடியே இன்னிக்கு நேரத்தை ஓட்டிறலாம் னு திட்டம் போட்டு வச்சிருக்கியா ..ஒழுங்கா புக் எடுத்துட்டு வா .."
"மார்க் எல்லாம் இருக்கட்டும்..புரிஞ்சு படிச்சியா ..அத சொல்லு முதல்ல..செரிமான மண்டலம் எப்படி வேலை செய்யுது னு தெரியுமா ??"
இவளும் கர்ம சிரத்தையாக தான் அறிந்தது,புரிந்தது எல்லாம் சொல்லி முடித்தால், 'அப்படியா? " னு ஒரு கேள்வி மட்டுமே பதிலாக வரும்..அதுவே சொல்லி விடும் அவளது புரிதல் தவறு என்று .
"மங்குனி அமைச்சரே ...அது அப்படி கிடையாது..." பொறுமையாக வரும் விளக்கத்தில் அவள் மலை போல் நினைத்துப் பயந்தது, பனிபோல் கரைவதை உணர்வாள். நிஜமாகவே அது பொற்காலம் தான்..ஏதோ ஒரு திரைப்பட பாடலில் வருவதைப்போல நிலவுகளாய் சேர்ந்து பூமியில் வாழ்ந்த பொற்காலம் .
எத்தனையோ சொல்லித் தந்தாயே..வாழ்வையே புரட்டிப் போடும் விதமாக நான் முடிவெடுத்த போது அது தவறு என்று ஏன் சொல்லாமல் போனாய் ?? மனதுக்குள் கதறினாள் .
"என்னம்மா ..இன்னும் முகம் வாடி இருக்கியே ..எத்தனை நாள் கழிச்சு வந்திருக்க..கண்டதை நினைச்சு மனச குழப்பிக்காம எழுந்திருச்சு வாம்மா ", அன்பாய் அழைத்த முதியவளுக்காக தற்காலிகமாய் நினைவுகளை உதறி எழுந்தாள் . ஏதேதோ பேசிக் கொண்டே சாப்பிட்டவள் , அவளது அயர்வைக் கண்டு கொண்டு, " நீங்க படுங்கம்மா..நானும் படுக்கறேன் ..காலைல கிளம்பணுமே " என்று விடை கொடுத்தாள் .
"சரிம்மா ..தண்ணி , போர்வை எல்லாம் எடுத்து வச்சிருக்கேன்..வேற ஏதும் வேணுமின்னாலும் ஒரு குரல் குடு தாயி" என்றவள் தளர்வாக சென்று படுத்தாள் .
சொந்த வீட்டுக்குள்ளேயே விருந்தினர் போல உபசரிக்கப்படுவது வரமா சாபமா??
அறைக்குள் நுழைந்தவளது மனதில் எண்ணங்களின் அலை மோதல் மௌனச் சுழலாய் அவளை மூழ்கடித்தது . இங்கே தானே தலையணைகளையும் , போர்வைகளையும் கொண்டு பொய் சண்டை போட்டு விளையாடினேன் . இங்கே தானே அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டு அப்பா கால் பிடித்து விட குட்டி இளவரசியைப் போல உறங்கினேன். வாழ்வில் முதலும் கடைசியுமாய் கண்ணியத்துடன் கூடிய ஆண்மையை கண்டதும் இங்கே தானே.. ஆகாயத்தின் அடியில் இருக்கும் எதைப்பற்றியும் பேசிச் சிரித்த காலங்களின் சுவடுகள் கண்ணீரால் எழுதப்பட்டவை என அறியாமல் போனவள் அவள் ..முத்துக்களை புறந்தள்ளி கிளிஞ்சல்களை சேகரித்துக் கொண்டு சிரித்தவளை, காலம் உச்சந் தலையில் ஓங்கி அறைந்து உண்மையை உணர்த்தியதும் இங்கே தானே..எத்தனையோ இரவுகளில் பதறி எழ வைத்த , பதறித் தவிக்க வைத்த 'இணைத்த கை'களின் பிம்பம் இப்போதும் தோன்றியது .
நினைவுகளின் கணம் தாளாது கண்களை மூடிக் கொண்டாள் . முகம் மறந்து போய், முகவரிகளும் மறந்து போன காரணங்களால் எழுதப்படாமலே தொலைகின்ற அவளது கடித வரிகளைப் போல துடைக்கப்படாமலே உலர்ந்தன அவளது விழி நீர் கோலங்கள். .கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இன்றி ஆற்றிக் கொள்ளவும் தேற்றிக் கொள்ளவும் இயலாமல் அழுகையில் கரைந்தவள் அப்படியே உறங்கிப் போனாள் . காலையில் எழுந்தவள் வேகமாக குளித்து உடை மாற்றிக் கிளம்பினாள்.
"சாப்பிட்டுப் போயேம்மா ", என்றவளிடம், 'வேண்டாம்மா ..உங்களுக்கு எதுக்கு சிரமம் .. கல்யாணத்துக்கு தானே போறேன்..அங்கேயே பார்த்துக்கறேன் 'என்று சமாளித்து விட்டாள் .அப்போது இருந்த மன நிலையில் ஒரு வாய் தண்ணீர் கூட தொண்டைக்க குழி தாண்டாது என்பது நன்றாகவே புரிந்தது.
வீட்டின் வாசலில் இருந்து வெளியேறும் முன், வீட்டின் கதவுகளை மெதுவாகத் தடவினாள். வீட்டின் வாசலை விட்டு வெளியேறியவள், இன்னொரு முறை திரும்பிப் பார்த்தாள். இறுக அடைக்கப்பட்டிருந்த சாளரங்கள், அவளது மனதின் இறுக்கத்தைப் போலவே இருப்பதாகப் பட்டது.
“காலம் என்னை எங்கே இழுத்துச் சென்றாலும், என் வேர்கள் இங்கே தான்..” என்று மனம் சூளுரைத்தது...'ஒரு நாள் திரும்பி வருவேன்..நிரந்தரமாக ..' தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் ..
அம்மா வைத்து வளர்த்த அடுக்குமல்லி ..வாசனையாய் வரவேற்றது ..இரண்டொரு பூக்களை பறித்துக் கொண்டாள் ..'அம்மா.. நான் போகிறேன்.. முடிவற்ற தொடுவானமாய் என் முன்னே விரிந்து கிடைக்கும் என் உயிர்ப்பற்ற நாட்களை நோக்கி நகர்கிறேன்'.. இந்தக் கதவுகளை மீண்டும் கடப்பதற்கான விதி இனி என்றாவது அமையுமா ?அவளது உடல் வெளியே நகர்ந்தாலும், ஆன்மா அந்த வீட்டிலேயே சிறைப்பட்டது .வாசலை மூடியவள், தனக்குள் மெதுவாகச் சொல்லிக் கொண்டாள் ."ஒரு நாளில் இந்த வீடு என்னை மீண்டும் அழைத்துக் கொள்வதற்குள், நான் எங்கோ மறைந்து போயிருப்பேன்.” கண்ணீர் வழியும் கண்களுடன், படியின் பக்கத்தில் கையில் இருந்த பூக்களை மெதுவாக வைத்தாள். கைகளில் இன்னும் பூ வாசம் மீதமிருந்தது.
வீட்டை நிமிர்ந்து பார்த்தாள் . அவளது குழந்தைப் பருவம், இளமையின் சிரிப்பு, தொலைத்த வாழ்வு, துயரத்தின் நிழல் என அத்தனை நிகழ்வுகளின் மௌன சாட்சியாக அது எப்போதும்போல இன்றும் அமைதியாக நின்றது.
" அடிக்கடி வாம்மா " என்று விடை கொடுத்த முதியவளிடம் மௌனமானதொரு தலை அசைப்புடன் விடைபெற்றவள், காரில் ஏறினாள் . மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்த்தவளது விழி சிந்திய ஒருதுளி கண்ணீர் வாசலில் பட்டுச் சிதறியது.
செல்வ கிருத்திகா கௌரிநாதன்
கலிபோர்னியா
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.