பி.ஆர் கவாய்: "அதிர்ச்சிக்கு உள்ளானோம்" - காலணி வீசிய சம்பவம் குறித்து நீதிபதி சொல்வதென்ன?
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது கடந்த அக்டோபர் 6 (திங்கட்கிழமை) வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்க முயன்ற சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை எழுப்பியது.
அது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாகக் கூறியுள்ளார் நீதிபதி கவாய். மேலும் அது முடிந்துபோன கதை என்றும் தெரிவித்துள்ளார்.

"அன்று நடந்த நிகழ்வில் நாங்கள் (கவாய் மற்றும் உடனிருந்த நீதிபதி) மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானோம்... எங்களைப் பொருத்தவரை அது முடிந்துபோன மறக்கப்பட்ட அத்தியாயம்" என நீதிமன்றத்தில் கூறியிருக்கிறார் கவாய்.
சம்பவத்தின்போது தலைமை நீதிபதி கவாய் உடனிருந்த நீதிபதி உஜ்ஜல் பூயான் அந்த நிகழ்வைக் கடுமையாகக் கண்டித்திருந்தார். "அவர் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி; இதை விளையாட்டாக எடுத்துக்கொள்ள முடியாது. இது நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானம்" எனக் கூறியிருக்கிறார்.
திடங்கட்கிழமை நடந்த சம்பவத்தை பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உட்பட நாடுமுழுவதும் இருந்து அரசியல் தலைவர்கள் கண்டித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடந்த அன்றே தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார் மோடி.
தன் மீது காலணி வீசிய 71 வயது வழக்கறிஞர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்தார் நீதிபதி கவாய். இதனால் அவரது பெருந்தன்மைக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
பார் கவுன்சில் ஆஃப் இந்தியா ராகேஷ் கிஷோரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது. தலமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டித்து நாடுமுழுவதும் அம்பேத்கரிய இயக்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது.