மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலம...
கோவை சிட்டி டு விமான நிலையம் இனி 10 நிமிடங்கள் தான்! - திறக்கப்பட்டது அவிநாசி சாலை மேம்பாலம்
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கி.மீ தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடங்கியது. பணிகள் முடிந்த நிலையில் அந்த பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொது மக்களின் பயன்பாட்டுக்காக இன்று திறந்து வைத்தார்.

மேம்பாலத்துக்கு ஜிடி நாயுடு பாலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டிருப்பதால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இதுதான் தமிழ்நாட்டின் நீளமான மேம்பாலம். கோவை விமான நிலையம், ஹோப்ஸ், நவ இந்தியா, அண்ணா சிலை ஆகிய நான்கு பகுதிகளில் இறங்குதளமும், கோவை விமான நிலையம், ஹோப்ஸ், நவ இந்தியா பகுதிகளில் ஏறுதளமும் அமைக்கப்பட்டுள்ளது.

1.50 மீ அகலத்தில் நடைபாதையுடன் கூடிய வடிகால், சைனஸ் பிளேட் விரிவு இணைப்புகள், ஒலி குறைப்பு, மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
4 வழித்தடத்தில் மேம்பாலம், 6 வழித்தடத்துடன் விரிவுபடுத்தப்பட்ட தரைத்தள சாலை அமைக்கப்பட்டுள்ளது. சோலார் மின் விளக்குகள், பாதுகாப்பான தடுப்பு சுவர், விபத்தைத் தடுப்பதற்காக ரோலர் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

கோவை நகர் பகுதியில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு சுமார் 45 நிமிடம் ஆகும் நிலையில், மேம்பாலம் மூலம் பயணித்தால் சுமார் 10 நிமிடங்களிலேயே விமான நிலையத்தை அடைந்துவிடலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.