மதுரை: விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பட்டியலின இளைஞர்; கால்வாயிலிருந்து சடலம...
கேரளா: "வேலையை விடும் திட்டமில்லை" - லாட்டரியில் ரூ. 25 கோடி வென்ற பிறகும் வேலைக்குச் செல்லும் நபர்
கேரளாவில் பெயிண்ட் கடை ஊழியர் ஒருவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் 25 கோடி ரூபாய் முதல் பரிசாகக் கிடைத்துள்ளது. லாட்டரி விழுந்த பிறகும், அவர் தனது வேலையை விட மனமில்லாமல் மறுநாளே பணிக்குத் திரும்பியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆலப்புழா மாவட்டம் துறவூரைச் சேர்ந்த சரத் எஸ் நாயர் என்ற நபர், கொச்சியில் உள்ள நெட்டூரில் ஒரு பெயிண்ட் கடையில் ஊழியராகப் பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கலில், இவர் வாங்கிய TH 577825 என்ற எண்ணுக்கு 25 கோடி ரூபாய் முதல் பரிசு கிடைத்துள்ளது.
லாட்டரியில் வெற்றி பெற்றது குறித்து மனோரமா நியூஸிடம் சரத் நாயர் கூறியதாவது, "முடிவுகள் வெளியானபோது நான் வேலையில் இருந்தேன். முதலில் எனது சகோதரருக்குத் தகவல் தெரிவித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து வெற்றி பெற்ற எண்ணை உறுதி செய்தோம்.
டிக்கெட்டை வங்கியில் ஒப்படைத்த பிறகே இந்தச் செய்தியை அறிவிக்க முடிவு செய்தோம். வீட்டில் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பரிசுப் பணத்தை என்ன செய்வது என்று இன்னும் திட்டமிடவில்லை" என்று தெரிவித்திருக்கிறார். இதுவே இவர் வாங்கும் முதல் ஓணம் பம்பர் டிக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.
பம்பர் பரிசு வென்ற போதிலும், சரத் மறுநாளே தனது வேலைக்குத் திரும்பியிருக்கிறார். அங்கு சக ஊழியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்திருக்கின்றனர்.
அவர் தனது வேலையை இப்போதைக்கு விடும் திட்டம் இல்லை என்றும், நிதி ஆலோசகரைக் கலந்தாலோசித்த பிறகே பரிசுப் பணத்தைச் செலவிடுவது குறித்து முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார். வெற்றி பெற்ற டிக்கெட்டை துறவூரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கிளையில் அவர் சமர்ப்பித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.