Arasan Promo : திரையரங்குகளில் திரையிடப்பட்ட `அரசன்' படத்தின் புரோமோ - கொண்டாடி...
Dhanush: ``படம் பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு நன்றி" - அண்ணாமலைக்கு நன்றி சொன்ன நடிகர் தனுஷ்!
நடிகர் தனுஷ் இயக்கி நடித்தப்படம் இட்லி கடை. இது அவர் இயக்கத்தில் வெளிவந்த 4-வது திரைப்படமாகும். இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், பார்த்திபன், ஷாலினி பாண்டே, சமுத்திரக்கனி, இளவரசு, ராஜ்கிரண், கீதா கைலாசம் மற்றும் சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக பா.ஜ.க-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இட்லி கடை திரைப்படத்தைப் பார்த்துவிட்டு நடிகர் தனுஷை வாழ்த்திருந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், ``திரையுலகில், கதாநாயகர்களுக்கு என ஆண்டாண்டு காலமாக வைத்திருந்த இலக்கணத்தை உடைத்து, திறமையே தகுதி என்பதை வெளிப்படுத்தி, அதில் வெற்றியும் பெற்ற வெகுசிலரில், தனுஷும் ஒருவர்.

அவரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படத்தைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி.
தமிழக இளைஞர்கள் அனைவருமே இந்த காலகட்டத்தில் எதிர்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான பிரச்சினை குறித்து நீங்கள் பேசியிருப்பது பாராட்டத்தக்கது." எனக் குறிப்பிட்டிருந்தார்.
அண்ணாமலையின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நடிகர் தனுஷ் தன் எக்ஸ் பக்கத்தில், ``மதிப்பிற்குரிய அண்ணாமலை அவர்களே, எங்கள் படத்தைப் பார்க்க நேரம் ஒதுக்கியதற்கு மிக்க நன்றி.
உங்கள் அன்பான வார்த்தைகள், பாராட்டு மற்றும் ஊக்கத்திற்கு நானும் எனது குழுவினரும் உண்மையிலேயே நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஓம் நமசிவாய" எனப் பதிவிட்டிருக்கிறார்.
தனுஷின் இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் அண்ணாமலை, ``அன்புள்ள சகோதரரே, உங்கள் பயணம் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும், உங்கள் பணி மேலும் உயரங்களை எட்டட்டும். முடிவில்லா வெற்றிகளையும், கடவுள் ஆசீர்வாதங்களையும் பெற வாழ்த்துகிறேன். ஓம் நமசிவாய!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.