சர்வதேச சமையல் போட்டி; சென்னைஸ் அமிர்தா மாணவர்கள் 26 தங்கப்பதக்கங்கள் வென்றனர்
``சினிமா என்றால் இந்தக் கருத்துதான் பேசணும், இது பேசக் கூடாதுனு சொல்றது தவறு'' - மாரி செல்வராஜ்
மாரி செல்வராஜ் இயக்கி இருக்கும் `பைசன்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 17) வெளியாக இருக்கிறது.
துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, அமீர் எனப் பலரும் இத்திரைப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் கபடி வீரராக நடித்திருக்கிறார் துருவ் விக்ரம்.

இந்நிலையில் பைசன் படத்திற்கான செய்தியாளர் சந்திப்பு நேற்று (அக்.16) நடைபெற்றது. அதில் பேசிய மாரிசெல்வராஜ்,
"சமூகத்தில் என்னென்னமோ நடக்கிறது. அது எல்லாவற்றையும் பார்க்கின்ற, அனுபவிக்கின்ற மக்கள்தான் தீர்மானிப்பார்கள்.
அரசியல் கூட்டங்கள் நடக்கிறது, கருத்தரங்கங்கள் நடக்கிறது. இதுபோன்ற பல விஷயங்கள் நடக்கிறது. அதில் சினிமாவும் ஒரு அங்கம்.
சினிமாவிற்கு மட்டும் அதில் தூய்மையான ஒரு பிம்பம் கொடுக்கக்கூடாது. சினிமா என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடாது.
சினிமா என்பது ஒரு பவர்புல்லான ஒரு கலை. நான் என்ன படம் எடுத்தாலும் அதைப் பார்க்கப்போகிறது மக்கள்தான்.
அதைத் தீர்மானிக்கப்போகிறது மக்கள்தான். கொண்டாட்டம், துயரம் என பல விஷயங்களை மக்கள் சினிமாவில் பார்க்கிறார்கள்.

எதில் நேர்மை, நியாயம் இருக்கிறதோ அதை மக்கள் பாராட்டுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றுக்கொள்கின்ற மாதிரியான கதைகள் இல்லை என்றால் அது ரஜினி படமாக இருந்தாலும் சரி மாரிசெல்வராஜ் படமாக இருந்தாலும் சரி அதனை புறக்கணித்துவிடுவார்கள்.
சினிமா என்றால் இந்தக் கருத்தைத்தான் பேசணும், இந்தக் கருத்தையெல்லாம் பேசக் கூடாது என்று சொல்வது தவறு" என்று பேசியிருக்கிறார்.