கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட...
Gujarat: முதல்வரைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா! - என்ன நடக்கிறது குஜராத் அரசில்?
குஜராத் மாநிலத்தில் அக்டோபர் 17-ம் தேதி அமைச்சரவை மறுசீரமைப்பு நடைபெறவிருக்கிறது. 17 அமைச்சரவை உறுப்பினர்களுடன் ஆட்சி நடத்தி வந்த குஜராத் முதலவர் பூபேந்திர படேல் தலைமையிலான அரசில், புதிய முகங்களைச் சேர்த்து விரிவுபடுத்த பா.ஜ.க தயாராகி வருகிறது என்றத் தகவல் வெளியானது.
அதனால் குஜராத் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
2027-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரின் மேற்பார்வையில் இந்த மறுசீரமைப்பு நடைபெறும் எனக் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அமைச்சர்களில் சிலர் ராஜினாமா செய்யவிருப்பதாக தகவல் வெளியான நிலையில், குஜராத் மாநிலத்தின் அமைச்சர்கள் இன்றும் நாளையும் காந்திநகரில் தங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுத்தன.
இந்த நிலையில்தான் குஜராத் முதல்வர் பூபேந்திர படேலைத் தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக, 16 அமைச்சர்களும் இன்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேலிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்ததாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
வரவிருக்கும் அமைச்சரவை விரிவாக்கத்தில் சுமார் 10 புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், ``குஜராத் முதல்வர் பூபேந்திர படேலின் அமைச்சரவை வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு விரிவாக்கம் செய்யப்படும்" என்று அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.