Arasan Promo : திரையரங்குகளில் திரையிடப்பட்ட `அரசன்' படத்தின் புரோமோ - கொண்டாடி...
கிட்னி முறைகேடு விவகாரம்: அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - சட்டமன்றத்தில் பட்டியலிட்ட அமைச்சர்!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், நாமக்கல் கிட்னி முறைகேடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார்.
அதற்குப் பதிலளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இந்த விவகாரத்தில் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார்.

அமைச்சர் மா. சுப்ரமணியன் தனது உரையில், ``சிறுநீரக முறைகேடு நடைபெறுவதாக வந்த புகார் குறித்து, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் மருத்துவர் வினித் விசாரணை மேற்கொண்டு விரிவான அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டார்.
அவர் தலைமையிலான குழு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், திருச்சி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது (17-07-25).
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், திருச்சி சித்தார் மருத்துவமனை, பெரம்பலூர் தனலக்ஷ்மி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட உரிமங்கள் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணி இயக்குநரால் 23-07-25ல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
விசாரணை அலுவலர், மேற்கூறிய மருத்துமனையில் தவறான முறையில் சான்றுகள் சமர்ப்பித்து மனித உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது என்றும், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்ட நுணுக்கங்களை தவறாகப் பயன்படுத்தியது தெரியவருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1944-ன்படி சிறுநீரகம் மாற்றுதல் தொடர்பாக ஆவணங்களின் ஆய்வுகளின்போது சித்தார் மருத்துவமனை மற்றும் பெரம்பலூர் தனலக்ஷ்மி சீனிவாசன் மருத்துவமனையிலிருந்து பரிசீலனை செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இவ்விரு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட சிறுநீரக உறுப்பு மாற்று உரிமைச் சான்றிதழை ரத்து செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டவர்களாகக் கண்டறியப்பட்ட இடைத்தரகர்களான ஸ்டான்லி மோகன், ஆனந்தன் ஆகிய இருவர் மீதும் பி.என்.எஸ் 2023-ன் உரிய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.
மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டம் 1944 -ன்படி செய்யப்படும் அறுவை சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் மருத்துவ சட்ட ரீதியான மெடிக்கோ லீகல் என்பதால் 10 ஆண்டுகள் வரை ஆவணங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
இது தொடர்பாக வருவாய்த்துறை, காவல்துறை, மருத்துவத்துறைக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

அதோடு அனைத்து படிவங்களும் ஆங்கிலம், தமிழ் இரு மொழிகளில் வைத்திருக்க பரிந்துரை செய்யப்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் உடல் உறுப்பு தானம் என்ற பெயரில் உடல் உறுப்பை முறைகேடாக விற்பது தவறான செயல் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் பரிந்துரை செய்யப்படுகிறது என்று 10 விதமான பரிந்துரைகளை அந்தக் குழு அளித்தது.
இவற்றைப் பரிசீலித்த அரசு பாரபட்சம் இல்லாமல், புகார் வந்த மருத்துவமனைகளின் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உரிமம் உடனடியாக ரத்து செய்தது.
இந்த சிறுநீரக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கண்டறியப்பட்ட இருவர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இவை உட்பட மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது." என்றார்.