`பெண்களை துன்புறுத்தினால் எமராஜாவிடம் அனுப்புவோம்'- உ.பி., முதல்வர் யோகி ஆதித்யந...
உள்ளாட்சித் தேர்தல்களில் 42% இட ஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!
தெலங்கானா மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம் 42 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு தடைவிதித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தெலங்கானா அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தெலங்கானா அரசு தரப்பு, ``மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு பிறகே இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இந்த மசோதா தாக்கல் சட்டமாகிவிட்டது" எனக் கூறப்பட்டது.
இந்த வாதத்துக்கு எதிராக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ``தேர்தல் அறிவிக்கப்பட்டதற்குப் முன்பு ஏன் இந்த இட ஒதுக்கீடு கொண்டுவரப்படவில்லை" என்றனர்.
அதைத் தொடர்ந்து பேசிய எதிர்தரப்பு வழக்கறிஞர், ``தெலங்கானா அரசு கொண்டுவந்திருக்கும் இந்த மசோதா, இட ஒதுக்கீடுக்கான 50 சதவிகித உச்ச வரம்பை மீறிவிட்டது" என்றார்.
இதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், ``50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது நிரந்தரமான விதியல்ல. மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூக பொருளாதார ஆய்வுகள் போன்ற கடினமான சோதனைகளுக்குப் பிறகே கொண்டுவரப்பட்டது" என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், `` தெலங்கானா அரசு தேர்தலை இட ஒதுக்கீடு இல்லாமல் தொடரலாம். மேலும், இந்த இட ஒதுக்கீடு பற்றி உயர் நீதிமன்றமே தகுதியின் அடிப்படையில் இறுதி முடிவை எடுக்க வேண்டும்" எனத் தீர்ப்பளித்து, தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்திருக்கின்றனர்.