``நிறைய நல்லவங்களும் இருக்காங்க, அவங்களைத்தான் நான் மனசுல வச்சுப்பேன்'' - ஆட்டோ ...
Bison: `` ̀பைசன்'ல நடிக்கிறதுக்கு கபடியும், மாரி சாரும்தான் காரணம்!" - கபடி வீரர் பிரபஞ்சன் பேட்டி
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து 'பைசன்' படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் ராஜரத்தினத்தின் பிரதிபலிப்பாக வரும் ரத்னம் கதாபாத்திரத்தில் கபடி வீரர் பிரபஞ்சன் நடித்திருக்கிறார்.

சினிமாவுக்கு முன்பே, ப்ரோ கபடி போட்டிகளில் சீறிப் பாய்ந்து ஸ்டார் ரெய்டர் எனப் புகழ் தொட்டவர் பிரபஞ்சன்.
கபடி ஆட்டத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் கில்லிதான் என நிமிர்ந்த உடலமைப்புடன் அழுத்தம் தரும் நடிப்பைக் கொடுத்து அதிரடிக்காரர் எனவும் பெயர் வாங்கியிருக்கிறார் பிரபஞ்சன்.
'பைசன்' படத்திற்கு வாழ்த்துகள் சொல்லி பிரபஞ்சனிடம் பேசினோம்.
நெகிழ்ச்சியுடன் பேசத் தொடங்கிய பிரபஞ்சன், "எனக்கு சினிமாங்கிற புதிய களம். கபடி வீரராக இருந்து இப்போ கபடி வீரராகவே சினிமாவில் நடிச்சிருக்கேன். தெரியாத நபர்களும் எனக்கு இப்போ விஷ் பண்றாங்க. இந்த ஃபீல் ரொம்ப புதுசா இருக்கு." என்றவரிடம் அவருடைய தொடக்க கால கபடி வாழ்க்கை குறித்துக் கேட்டோம்.
அவர், "2012-க்குப் பிறகுதான் நான் கபடி பக்கம் வந்தேன். ஆனா, அந்த காலத்திலேயே மணத்தி கணேசன் அண்ணன் எவ்வளவு போராட்டங்களைத் தாண்டி வந்திருப்பார்னு யோசிக்க வைக்குது.

என்னுடைய அப்பாவுமே கபடி பிளேயர்தான். அவரும் மணத்தி கணேசன் அண்ணனும் பழக்கம்தான்.
எனக்கும், கணேசன் அண்ணன் பெரிய இன்ஸ்பிரேஷன். அவருடைய பயணமும் எனக்கு பெரிதளவில் ஊக்கமளிச்சிருக்கு. என்னுடைய அப்பாவுடைய காலகட்டத்தில் அவரை கபடி சார்ந்து வழிகாட்டுறதுக்கு ஆட்கள் இல்ல.
தொடக்கத்தில் நானும் ஊர் திருவிழாவுல நடக்கிற கபடி போட்டியில் தான் கலந்துகிட்டேன்.
கபடி தொடர்ந்து விளையாடணும்ங்கிறதுதான் என்னுடைய எண்ணமாக அப்போ இருந்தது. பல சிரமங்களைத் தாண்டி பல போட்டிகளிலும் அப்போ ஆடினேன். தொடக்கத்தில் பொருளாதார ரீதியான சவால்கள் எனக்கு இருந்தது.
ஜெர்சி வாங்கக்கூட பணம் இல்லாத சூழலையும் நான் கடந்து வந்திருக்கேன். போட்டியில் கை உடைஞ்ச சமயத்தில் கூட்டிட்டு போகக்கூட வண்டி இருக்காது.
அடிபட்ட கையோட பஸ்ல கடைசி சீட்ல படுத்துட்டு வந்த நாட்களெல்லாம் இருக்கு. அப்படியான பயணத்தில் அண்ணன் ராஜேஷ் எனக்குப் பழக்கமானார்.

அந்த நேரத்தில் எனக்கு தமிழ்நாட்டில் வேலையும் கிடைக்கல. அவர் என்னை ராணுவத்துக்கு தொடர்ந்து கூப்பிட்டார். பிறகு, ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலமா ராணுவ பயிற்சிக்குப் போனேன்.
ஆனா, எனக்கு வயசு பார் ஆகிடுச்சு. எனக்காக ராஜேஷ் அண்ணன் ஆர்மி கோர்ட் வரைக்கும் போய் பேசினாரு. என்னுடைய வாழ்க்கையை மாற்றிய முக்கியமானவராக ராஜேஷ் அண்ணனை நான் சொல்வேன்," என்றார்.
"எங்க ஊர்ல இருந்து போன ஒருத்தன் ப்ரோ கபடி போட்டியில ̀யு மும்பா' அணியில் விளையாடி வந்தான். அதைப் பார்த்தப்போ எனக்கு அங்கப் போய் விளையாடணும்னு ஆசை வந்தது.
பிறகு, ராஜேஷ் அண்ணன் மூலமா ̀யு மும்பா' அணியின் பயிற்சியாளர் என்கிட்ட பேசினாரு. முதல்ல டீமுக்கு என்னை நெட் பவுலர் மாதிரி சும்மா யூஸ் பண்ணுவாங்கனுதான் நினைச்சுப் போனேன். அங்கப் போனதுக்குப் பிறகுதான் என்னை உண்மையாகவே டீமில் தேர்வு பண்ணியிருக்காங்கனு தெரிய வந்தது. முதல் சீசனிலேயே அதிக பாயிண்ட்ஸையும் எடுத்தேன்.

அந்த சமயம் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்துக்கே நான் போயிட்டேன். அதற்கடுத்து,'தெலுங்கு டைட்டன்ஸ்' அணிக்கு வந்தேன்.
அங்க எனக்கு சரியான வாய்ப்பு கிடைக்கல. அப்புறம், ̀தமிழ் தலைவாஸ்' அணி அறிமுகமான முதல் சீசனிலேயே என்னை ஏலத்தில் எடுத்தாங்க.
̀தமிழ் தலைவாஸ்' அணியில்தான் எனக்கு ஸ்டார் ரெய்டர்ங்கிற பெயர் கிடைச்சது. மக்களுக்கும் நான் பெரிதளவில் பரிச்சயமானேன். அதுக்கப்புறம், குஜராத் அணிக்கு பெரிய தொகைக்கு ஏலம் போனேன்.
கோவிட் சமயம் வந்துச்சு, எனக்குமே அப்போ காயம் ஏற்பட்டுச்சு. மீண்டும் என்னைத் தயார்படுத்தி பிட்னஸ் ஏத்தினேன். அப்படியான சமயத்துல, பெரிய வாய்ப்பில்லாததுனால என்னை ஹரியானா அணி அடிப்படை தொகைக்கு ஏலத்தில் எடுத்தாங்க.

அப்புறம், எனக்கு உடன்பாடில்லாத சில விஷயங்களால் நான் ப்ரோ கபடியிலிருந்து விலகிட்டேன். என்னுடைய கனவுக்காக நான் இவ்வளவு நாள் ஆடிட்டேன்.அது போதும்!
நேஷனல் மேட்சில் விளையாடலாம்னு முடிவு பண்ணினேன். இதற்கிடைப்பட்ட காலத்தில் எனக்கு பெங்களூரில் வேலையும் கிடைச்சது. இப்போ 'பைசன்' மூலமா சினிமாவுக்கும் வந்திருக்கேன்." என்றார் உற்சாகத்துடன்.
"'பைசன்' படத்துக்கு மாரி சாரின் இணை இயக்குநர் ராகுல்தான் என்கிட்ட பேசினாரு. முதல்ல சில தயக்கங்களால பட வாய்ப்பை வேண்டாம்னு சொல்லிட்டேன். பிறகு மாரி சாரின் டீமில் இருந்து வள்ளி நாயகம் சாரும் என்கிட்ட பேசினாரு.
அப்புறம், இந்தக் களத்திற்கும் வந்து பார்ப்போம்னு முடிவு பண்ணி வந்துட்டேன். என்னைப் பார்த்துட்டு மாரி சாரும் முதல்ல 'இவன் நமக்கு செட் ஆவான்'னு சொன்னாரு. நான் இந்தப் படத்தில் நடிக்கிறதுக்கு ஒத்துக்கிட்டதுக்கு காரணம் கபடியும், மாரி சாரும்தான்.

நான் மாரி சாரின் படங்களுக்கு பெரிய ரசிகன். அவர் என்கிட்ட 'கபடி ஆடுவீங்க. ஆனா, உங்களுடைய கதாபாத்திரம்தான் க்ளைமேக்ஸில் அழுத்தமான மெசேஜ் சொல்லணும்.
அதனால, நடிப்பையும் கத்துக்கோங்க'னு சொன்னாரு. அப்போ, பலருக்கும் பரிச்சயமான டிரெயினர் சூரி சார்தான் எனக்கு நடிப்புப் பற்றி சொல்லித்தந்தாரு.
இன்னொரு முக்கியமான விஷயம். 'பைசன்' படத்தில் கபடியை எங்கையும் ஏமாற்றவே இல்ல. தொடக்கத்தில், க்ளைமேக்ஸ் காட்சியில் எனக்கும் துருவ் சாருக்கும் நல்ல கனெக்ட் இருக்கணும்னு சில காட்சிகளைக் காட்டினாரு.
அசலாக, டச்சில் இருந்து தொடங்கி கபடியின் அத்தனை நுணுக்கங்களைப் பாலோ பண்ணி காட்சியில் துருவ் சார் கபடி ஆடியிருந்தாரு.
அப்போவே, அவரை நீங்க துருவ்னு கூப்பிடாதீங்க, கிட்டான்னு சொல்லியே கூப்பிடச் சொல்லிட்டாங்க. பிறகு, நானும் துருவ் சாரும் க்ளோஸ் ஆகிட்டோம்.

துருவ் சாரும் ரொம்ப ஆர்வமாக கபடி ஆடினாரு. சில சமயங்களில் ஷூட்டிங்கில் இருக்கோம்ங்கிறதையே மறந்துட்டு உண்மையாக கபடி ஆடினார்னு சொல்லலாம்.
இந்தப் படத்துக்காக அவர் பல கஷ்டங்களைச் சந்திச்சிருக்காரு. இந்த சமயத்தில் என்னுடைய மனைவிக்கும், குடும்பத்துக்கும் பெரிய நன்றியைச் சொல்லிக்கிறேன். அவங்கதான் எனக்குள்ள இருந்த தயக்கங்களை உடைச்சு நடிக்கிறதுக்கு அனுப்பினாங்க. நன்றி எல்லாத்துக்கும்!" எனக் கூறி முடித்துக் கொண்டார்.