செய்திகள் :

`வாய் நிறைய கோதுமை அல்வா,மணக்கும் மட்டன் குழம்பு' - வழக்கறிஞர் சாந்தகுமாரி வீட்டு தீபாவளி

post image

சமூக வலைதளங்களைப் பயனுள்ளதாக பயன்படுத்துபவர்களின் கண்களுக்கு கட்டாயம் தென்பட்டிருப்பார் வழக்கறிஞர் சாந்தகுமாரி. பெண்களுக்காகவும் போராடுவார். ஆண்களின் நியாயத்துக்காகவும் பேசுவார். வீடு, பணியிடம் என இரண்டு இடத்திலும் தன்னுடன் பயணிப்பவர்களுக்கு தீபாவளி பர்ச்சேஸ் செய்துகொண்டிருந்தவரிடம், உங்கள் தீபாவளி அனுபவங்களை பகிரச் சொன்னோம்.

’’என்னோட சின்ன வயசு தீபாவளி சந்தோஷங்கள் எல்லாம் இன்னொரு முறை நான் பிறந்து வந்தால்கூட கிடைக்கவே கிடைக்காதும்மா’’ என்று உணர்ச்சிவசப்பட்டவர், தன்னுடைய தீபாவளி மகிழ்ச்சியை நம்முடன் பகிர ஆரம்பித்தார்.

கணவருடன் வழக்கறிஞர் சாந்தகுமாரி
கணவருடன் வழக்கறிஞர் சாந்தகுமாரி

’’சொந்த ஊர் கோயம்புத்தூர். நாங்க நாலு பேரு அக்கா தங்கச்சிங்க. கூட ஒரு குட்டித்தம்பி. பத்து நாளைக்கு முன்னாடி இருந்தே எங்க வீட்ல தீபாவளி களைக்கட்டிடும். அப்பா எக்கச்சக்கமா பட்டாசு வாங்கிட்டு வருவாரு. அத அஞ்சா பங்குப் போட்டு ஆளுக்கொரு பாக்ஸ்ல போட்டு வச்சிருவாரு. 

எங்க குடும்பத்துல மக்கள் தொகை அதிகம். அம்மா, அப்பாவோட சேர்த்து நாங்க ஏழு பேரு. அதுக்கப்புறம் எங்க அப்பாவோட அம்மா. எங்க கடையைப் பார்த்துக்கிட்டிருந்த எங்க சித்தப்பா, ரெண்டு தாய் மாமன்கள், கடையில வேலைபார்க்கிறவங்க, வீட்ல உதவி செஞ்சிக்கிட்டிருந்தவங்கன்னு பெரிய குடும்பம் எங்களோடது. தீபாவளிக்கு நாலு நாளைக்கு முன்னாடியே பலகாரம் சுடுறவரு வந்துருவாரு. பெரிய பெரிய எவர்சில்வர் ட்ரம்ல கிலோ கணக்குல தீபாவளி பலகாரங்களைச் சுட்டு அடுக்குவாரு.

அதுவும் 50 வருஷத்துக்கு முன்னாடி, வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் எந்த பிறந்த வீட்ல தல தீபாவளி கொண்டாட கூப்பிடுவாங்க.

நாங்க அஞ்சு பேரும் அறுந்த வாலுங்க. என் பங்கு பலகாரம், உன் பங்கு பலகாரம்னு சண்டை வந்திடக்கூடாதுன்னு எங்கம்மா உஷாரா அஞ்சு எவர்சில்வர் பாத்திரத்துல பலகாரங்களை போட்டு மூடி ஆளுக்கு ஒண்ணா கையில கொடுத்துடுவாங்க. ஆனா, நானும் என் கடைசி தங்கச்சியும் எங்க அக்காவோட பாத்திரத்துல இருந்து பலகாரம் எடுத்து சாப்பிடுவோம். ஏன் தெரியுமா? நாங்க எல்லாரும் சாப்பிடறப்போ எங்க அக்கா மட்டும் சாப்பிடாம அப்படியே வெச்சிருந்து, நாங்க எல்லாம் சாப்பிட்டு தீர்த்தப்புறம் ’என்கிட்ட பாரு எவ்ளோ பலகாரம் இருக்கு’ன்னு காட்டுவா. அதுக்காகத்தான் நாங்க அப்படியொரு சேட்டையை பண்ணுவோம்.

தீபாவளி அன்னிக்கு காலைல நாலு மணிக்கெல்லாம் அம்மா எழுப்பி விடுவாங்க. அஞ்சு பேரும் தலைக்கு எண்ணெய் வச்சு குளிச்சு முடிச்சவுடனே புதுத்துணி குடுப்பாங்க. அதை போட்டுக்கிட்ட உடனே அம்மாவோட ஸ்பெஷல் கோதுமை அல்வாவை ஆளுக்கொரு வாய் ஊட்டி விடுவாங்க. அந்த இனிப்பு வாயோட விடியற்காலை அஞ்சு மணிக்கு பட்டாசு போட வாசலுக்கு ஓடுவோம். வெடி வெடிச்சு வெடிச்சு டயர்டு ஆகுறப்போ, 8 மணி வாக்குல அம்மா எங்க எல்லாரையும் டிபன் சாப்பிடக் கூப்பிடுவாங்க. சுடச்சுட இட்லியும் மணக்க மணக்க மட்டன் குழம்பும் வழிக்கிக்கிட்டு வாயில போகும்’’ என்று மகிழ்ந்தவர், தன் தலை தீபாவளி கதையையும் பகிர்ந்து கொண்டார்.

மருமகள்களுடன் வழக்கறிஞர் சாந்தகுமாரி
மருமகள்களுடன் வழக்கறிஞர் சாந்தகுமாரி

’’என்னோடது காதல் கல்யாணம். அதுவும் 50 வருஷத்துக்கு முன்னாடி, வீட்டை எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதுக்கப்புறம் எந்த பிறந்த வீட்ல தல தீபாவளி கொண்டாட கூப்பிடுவாங்க. நமக்கு தல தீபாவளியெல்லாம் ஒண்ணும் கிடையாதுன்னு மனசை தேத்திக்கிட்டேன். ஆனா நடந்தது வேற. அந்தக் காலத்துல கோயம்புத்தூர்ல ராயல்னு ஒரு சினிமா தியேட்டர் இருந்துச்சு. அந்த தியேட்டருக்கு முன்னாடி ஒரு நீளமான ஐஸ்கிரீம் கடை இருந்துச்சு. அந்தக் கடையோட ஓனர் என்னோட அங்கிள். அவர் எங்க வீட்டுக்கு வந்து, ’மாப்பிள்ளை நீங்களும் மருமகளும் தல தீபாவளிக்கு எங்க வீட்டுக்கு வரணும்’னு கூப்பிட்டார். எனக்கு பயங்கர ஆச்சரியம். இந்த வருஷம் தீபாவளி கொண்டாட மாட்டோம்னு நினைச்சோமே. இவர் திடுதிப்புன்னு வந்து கூப்பிடுறாருன்னு ரொம்ப சர்ப்ரைஸ் ஆயிட்டேன்.

அந்த நேரத்துல நாங்க ரெண்டு பேருமே படிச்சுக்கிட்டுதான் இருந்தோம். வேலைக்குப் போகல. அதனால பொருளாதாரரீதியா ரொம்ப கஷ்டத்துல இருந்தோம். அந்த நேரத்துல அந்த அங்கிள் வந்து கூப்பிட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. அவர் எங்களுக்கு தல தீபாவளிக்கு புது துணிமணி எல்லாம் கொடுத்து உபசரிச்சப்போ, என் மனசுக்குள்ள ஒண்ணு தோணுச்சு. எங்க அம்மா தான் எனக்காக அந்த அங்கிள் கிட்ட துணிமணி எல்லாம் வாங்கி கொடுத்து தல தீபாவளி கொண்டாட வெச்சிருக்காங்கன்னு என்னோட உள் மனசு சொல்லுச்சு. இல்லைன்னா, திடீர்னு அவர் வந்து எங்க ரெண்டு பேரையும் கூட்டிட்டுப் போய் தல தீபாவளி கொண்டாட வைக்கணும்கிற அவசியம் இல்லையே. அதை நினைச்சு மனசுக்குள்ளேயே சந்தோஷப்பட்டுக்கிட்டேன்.

பொருளாதார கஷ்டத்துல இருந்தப்போ குழந்தைகளுக்கு மட்டும் துணிமணி, பட்டாசு, பலகாரம்னு வாங்கிக் கொடுத்துட்டிருந்தோம்.

அன்னிக்கு சாயங்காலம் அந்த ராயல் தியேட்டர்ல சிவாஜியும் மஞ்சுளாவும் நடிச்ச ’டாக்டர் சிவா’ படம் பார்த்தோம். இன்டர்வல்ல எங்களுக்கு ஐஸ்கிரீம் வந்துச்சு. அந்த நாள் முழுக்க நாங்க சந்தோஷமா இருந்தோம். ஆனா, அன்னிக்கு ராத்திரி நான் ரொம்ப அழுதேன். பெத்தவங்க கிட்ட போராடியாவது பர்மிஷன் வாங்கி இந்த கல்யாணத்தை செஞ்சிருக்கலாமேன்னு நினைச்சேன். பட் 18 வயசுல அவ்வளவுதான் மெச்சூரிட்டி எங்களுக்கு இருந்துச்சு’’ என்று கலங்கியவர், ’’அப்புறம் இந்த தீபாவளி எங்களுக்கு ஐம்பதாவது தீபாவளி’’ என்று நிகழ்காலத்துக்கு வந்து சிரிக்கிறார்.

’’எங்களுக்கு ரெண்டு பசங்க பிறந்தாங்க. சென்னைக்கு வந்துட்டோம். அதுக்கப்புறம் தீபாவளி மகிழ்ச்சியெல்லாம் குழந்தைகளுக்காகன்னு மாறிப் போயிடுச்சு. பொருளாதார கஷ்டத்துல இருந்தப்போ குழந்தைகளுக்கு மட்டும் துணிமணி, பட்டாசு, பலகாரம்னு வாங்கிக் கொடுத்துட்டிருந்தோம். கொஞ்சம் பொருளாதாரத்துல வலுவானதும் நாங்களும் புது துணிமணி வாங்கிக்க ஆரம்பிச்சோம். பசங்க வளர ஆரம்பிச்சதும் ஒரு நாய் வளர்த்தாங்க. அது கட்டில்ல படுத்துட்டு எங்கள கீழே இறக்கி விட்டுடும். அந்த அளவுக்கு செல்லம். ஒருமுறை பசங்க பட்டாசு வெடிக்கிறப்போ அது பயந்ததையும், மூணு நாள் சாப்பிடாம இருந்ததையும் பார்த்த பசங்க இனிமே நாங்க பட்டாசு வெடிக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க. 

இப்போ பசங்க வளர்ந்து அவங்களுக்கும் கல்யாணமாகி, பேரப்பசங்களும் வந்துட்டாங்க. இப்போ பேரப்பசங்களுக்காக மறுபடியும் பட்டாசு வாங்க ஆரம்பிச்சிருக்கோம். ஆனா, சமீப சில வருஷங்களா என் மனசுக்குள்ள பட்டாசு தொடர்பா நிறைய யோசனைகள் வர ஆரம்பிச்சிருக்கு. தீபாவளி சமயத்துல இருக்கிற காற்று மாசுபாட்டைப் பார்க்கிறப்போ ரொம்ப கவலையா இருக்கு. கவர்ன்மெண்ட் போட்டிருக்கிற ரூல்ஸோட நாமளும் பட்டாசு வெடிக்கிறதை குறைக்க ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன்.

இப்போ எங்களோட முதிர் பருவத்து தீபாவளி எப்படியிருக்குன்னா, எங்க சேம்பர்ல இருக்கிற எல்லோருக்கும், எங்க வீட்ல இருக்கிற உதவியாளர்களுக்கும் துணிமணி எடுத்துக்கொடுத்து சந்தோஷமா கொண்டாடிட்டு இருக்கோம். எல்லோருக்கும் ஹேப்பி தீபாவளி’’ என்று உற்சாகமாகப் பேசினார் வழக்கறிஞர் சாந்தகுமாரி.

``நிறைய நல்லவங்களும் இருக்காங்க, அவங்களைத்தான் நான் மனசுல வச்சுப்பேன்'' - ஆட்டோ ஓட்டும் திருநங்கை

நள்ளிரவில் அடைமழையில் சிக்கிக்கொண்டேன். ஒதுங்க இடம் தேடி, பேருந்து நிறுத்தத்தில் தஞ்சம் புகுந்தேன்.என் சூழலைக் கண்டும் காணாதது போல தீவிரமடைந்தது மழை. ஆட்டோ புக் செய்வதுதான்ஒரே வழி என்பதை உணர்ந்து புக்... மேலும் பார்க்க

`ஊக்கத்தொகை நிராகரிக்கப்பட்ட ஒருவர் அதிகாரியானால்' - தன் புத்தகம் குறித்து ராம் பிரசாத் மனோகர் IAS

ஐ.ஏ.எஸ் ராம் பிரசாத் மனோகர் தன் வாழ்க்கையையும், அவர் கடந்துவந்த பாதையையும் மாணவர்களுக்கு உத்வேகமூட்டும் வகையில் 'கருவிலிருந்து கலெக்டர் வரை' என்ற தலைப்பில் புத்தகமாக எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்த... மேலும் பார்க்க

`பாதுகாப்பு மட்டுமல்ல, பாசமும் தான்' – திருமணத்தில் அண்ணனாக மாறிய வீரர்கள்; நெகிழ்ந்த குடும்பம்

இமாச்சலப் பிரதேசத்தின் சிர்மௌர் மாவட்டம், பார்லி கிராமத்தில் நடந்த ஒரு திருமண விழாவில், ராணுவ வீரர்கள் குழு ஒன்று, வீரமரணம் அடைந்த தங்கள் சக ஊழியரின் சகோதரிக்குச் சகோதரர் பொறுப்பை ஏற்று செய்த செயல், அ... மேலும் பார்க்க

`சென்று வாருங்கள் Jane Goodall ' - மறைந்தார் சிம்பன்சிகளின் தோழி!

உலகம் முழுவதும் விலங்குகள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் காப்பின் சின்னமாக திகழ்ந்த ஜேன் கூடால், 2025 அக்டோபர் 1ஆம் தேதி 91 வயதில் மரணமடைந்தார். “வனவிலங்குகளுக்கும் மனிதர்களுக்குச் சமமான உணர்வுகள் ... மேலும் பார்க்க

ஆதரவின்றி உயிரிழந்த முதியவர்; குடும்பத்தினரைத் தேடி நெகிழவைத்த போலீஸ்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை முத்தையா நகரில் குடும்பத்தைப் பிரிந்து தனியாக வசித்து வந்த பலராமன் என்ற 65 வயது முதியவருக்கு, சில நாட்களுக்கு முன்பு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்த... மேலும் பார்க்க

என்ன பெத்த தாயே... இப்படி போயி சாகணும்னு உன் தலையெழுத்தா - கலங்கும் குடும்பங்கள் - Spot Visit

போன உசுரு திரும்ப வருமா...`உன்ன தூக்கிக் கொடுத்துட்டு நாங்க மட்டும் என்ன செய்ய போறோம்...' கரூர் நகர்ப்பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 10 கி.மீ தூரத்தில் இருக்கிறது ஏமூர் எனும் கிராமம். ஊருக்குள் நுழையும்ப... மேலும் பார்க்க