``நிறைய நல்லவங்களும் இருக்காங்க, அவங்களைத்தான் நான் மனசுல வச்சுப்பேன்'' - ஆட்டோ ...
``வெள்ளை முடி அஜித் நடித்தபோது ஃபேஷன் ஆகிவிட்டது, அதனாலேயே'' - இலக்கிய மன்றம் தொடங்கிய மாணவர்கள்
சமூகத்தில் நடக்கக்கூடிய பிரச்னைகளை கலை, இலக்கியம் வழியாக மக்களுக்கு கொண்டுசேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறது, பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம்.
நகுல் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம் இன்று 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

உசிலம்பட்டி, விளாம்பட்டி ஊரில் இருக்கும் நகுல் என்பவர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம். ஏ. விஸ்காம் படித்து வருகிறார்.
படிக்கும்போதே ஒரு மன்றத்தை உருவாக்கி அதை சிறப்பாகவும், புதுமையாகவும் வழிநடத்தி இரண்டு வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சமூகத்திற்கான ஆவணப்படங்கள், குறும்படங்கள், போட்டோ வாக், கவிதைகள் என கலை, இலக்கியத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்.
அவர் உருவாக்கிய இந்த மன்றத்தின் நோக்கத்தை, அவரும் அவர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் தேவ அமிர்த பிரியா மற்றும் சாய் விக்னேஷ் ஆகியோர் விகடனுடன் பகிர்கிறார்கள். ஒருங்கிணைப்பாளரான நகுலிடம் முதலில் ஆரம்பித்தோம்.
“நான் அருளா ஆனந்தர் கல்லூரியில் இளநிலை மூன்றாம் வருடம் படிக்கும்போதுதான் நான் இந்த மன்றத்தை ஆரம்பித்தேன். சினிமா, இலக்கியங்கள் மீதுள்ள ஆர்வமும், சமூக ரீதியான படைப்புகளை உருவாக்கும் ஆட்களோடு இருந்ததே இந்த மன்றத்தை உருவாக்குவதற்கு தூண்டுகோலாக இருந்தது.
ஆரம்பிக்கும்போது 6 பேர் கொண்ட இந்த மன்றத்தை ஆரம்பித்தோம். இதன் நோக்கமே கலையும் இலக்கியமும் தான் சமூக மாற்றத்திற்கு ஒரு ஆயுதமாக செயல்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் இங்கு நடக்கக்கூடிய பிரச்னைகளை பார்க்கிறோம்.
அதற்கான தீர்வை காணமுடியவில்லை. மற்றவர்கள் போல் தெருவில் இறங்கி போராட்டம் செய்ய முடியுமா என்பதில் சாத்தியமும் இல்லை. ஆனால் ஒரு கருத்தியல் தளத்தின் மூலமாக வெளியே கொண்டுவரும்போது அது பெரிதும் மக்களிடம் சேர்கிறது.

வெள்ளை முடியை பிரச்னையாகப் பார்த்த ஒரு விஷயத்தை அஜித் எடுத்து நடிக்கும்போது அது ஒரு ஃபேஷன் ஆக மாறிவிட்டது.
இப்படி இங்கே இருக்கும் ஸ்டீரியோடைப்பிற்கு மாற்றாக ஒன்று வைக்கும்போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இப்படிப்பட்ட தளத்தில் தனியாகத் தொடங்குவது சாத்தியம் இல்லை.
அதனாலேயே இதை ஒரு மன்றமாக ஆரம்பித்தோம். அந்த மன்றம் பொதுவானதாக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். யாருக்கெல்லாம் கலையின் மீதும் இலக்கியத்தின் மீதும் ஆர்வம் இருக்கிறதோ அவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அப்படி 50-க்கும் மேற்பட்டோர் இந்த மன்றத்தில் இருக்கிறார்கள். அதில் ஒவ்வொருவருடைய சிந்தனையையும், முயற்சியையும் ஒரு ஆவணப்படமாகவோ, கவிதையாகவோ, குறும்படமாகவோ எடுத்து மக்களுக்கான தேவைகளையும், இந்த சமூகத்தில் அவர்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளையும், அவர்களுக்கான உரிமைகளையும் கலையின் மூலம் வெளிப்படுத்துகிறோம்.
அப்படி 2024-ல் தென்மாவட்ட இயற்கை விவசாய கூட்டமைப்பு, பென்னிகுயிக் கலை இலக்கிய மன்றம் மற்றும் காமராஜ் பல்கலைக்கழகத்தின் விஸ்காம் துறை சேர்ந்து விதைத்திருவிழா என்ற பெயரில் காமராஜ் பல்கலைக்கழகத்தில் நடத்தினோம்.
இதன் நோக்கமே, இன்று மரபணு மாற்றப்பட்ட பல விதைகள் வந்துவிட்டன. அவை நம் உணவுடன் கலந்து விஷமாக மாறி வருகின்றன. ஆனால் இன்றும் சில இடங்களில் பாரம்பரிய விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அப்படி நாங்கள் தேர்ந்தெடுத்த திருமங்கலத்திற்கு அருகில் உள்ள நான்கு ஊர்களுக்கு புவிசார் குறியீடு வழங்குவதற்காக திருவிழாவை நடத்தினோம்.
செங்கப்படை வரகு, காரைக்கேணி கத்திரிக்காய், எட்டுநாழி கத்திரிக்காய், சென்னைம்பட்டி பாவற்காய் என்ற விதைகளை வைத்து ஆவணப்படம் எடுத்து அந்த ஊர் மக்கள் முன்னே திரையில் வெளியிட்டோம்.

அந்த விதைகளை பாதுகாத்து வந்த விவசாயிகளையும் கௌரவித்தோம். மேலும் விதை திருவிழாவில் வீதி நாடகமும் செய்தோம்.
இதன் தொடர்ச்சியாக மதுரை, மேலூர் போகும் வழியில் இருக்கக்கூடிய வேளாண்மை கல்லூரியில் இருக்கக்கூடிய ஆசிரியர்கள் நாங்கள் புவிசார் குறியீடு வாங்கித் தருகிறோம் என்று முன்வந்தனர்.
அப்படியே குறியீடு கொடுப்பவர்களின் கமிட்டியில் இருந்தும் வந்து இரண்டு நாள் நிகழ்ச்சிகள் நடத்தினர். அதனால் அந்த விதைகள் பாதுகாத்து வருகிறது. இந்த வருடமும் விதைத் திருவிழா நடத்த உள்ளோம்.” என தெளிவான பார்வையுடன் விளக்கியவரைத் தொடர்ந்து தேவ அமிர்த பிரியவும், சாய் விக்னேஷும் பேச ஆரம்பித்தனர்.
தேவ அமிர்த பிரியா பேசத் தொடங்கினார். “போன வருடம் இதே நேரத்தில்தான் நான் மன்றத்தில் சேர்ந்தேன். நகுலிடம் பேசும்போது அவருக்கு இருந்த ஆர்வத்தைப் பார்த்து வியந்தேன்.
அவர் கூறும் ஒவ்வொரு கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு என்னால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் நான் செய்து வருகிறேன்.
மன்றத்தின் முக்கிய வலுவே உறுப்பினர்கள் தான். ஆர்வம் இருப்பவர்கள் பல இடங்களிலிருந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதிக்கொடுக்கின்றனர். அதுவே மன்றத்தின் வலுவாகப் பார்க்கப்படுகிறது”, என்றார்.

இவரைத் தொடர்ந்து சாய் கணேஷ், மன்றத்தின் மூலம் நடந்த சிறப்பான விஷயங்களை கூறினார். “2025-ல் முதன்முதலில் குறும்படத் திருவிழாவை நடத்தினோம்.
ஒரே வாரத்தில் அந்த நிகழ்வை நடத்த முடிவெடுத்தோம். அதுதான் எங்கள் மன்றத்தின் முதல் பெரிய சாதனையாகப் பார்த்தோம். கலை இலக்கியம் அல்லாத இடத்தில் இருப்பவர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.”
மொத்தம் 9 குறும்படங்களை வெளியிட்டோம். அதனால் வெளியில் தெரியாத பல கலைஞர்களின் படைப்புகளை எங்களால் வெளியில் கொண்டுவர முடிந்தது.
இந்த நிகழ்வை நடத்துவதற்கு எங்களுக்கு ஆசிரியர்களிடமிருந்து பொருளாதார ரீதியான உதவி கிடைத்தது.
அடுத்த கட்டமாக மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே உள்ள நத்தம்பட்டி என்ற ஊருக்கு சென்றோம். அங்கே பென்னிகுயிக் உருவச்சிலையை வைத்திருந்தனர்.
அங்கு முல்லைப்பெரியாறு அணையை கட்டி, அங்குள்ள மக்களையும் விவசாயம் செய்ய வைத்தார்.

இப்போது அவர்களின் விவசாயம் எப்படி செய்கிறார்கள், முன்பு எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது, என்பதை வீதி நாடகமாக அந்த ஊர் மக்களுக்கு நடத்தினோம்.
3 நாட்கள் அங்கேயே தங்கி அங்குள்ள குழந்தைகளிடம் பேசியது என சிறப்பான அனுபவமாக அது அமைந்தது.
மேலும் அங்கே ஒரு நூலகம் அமைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது. எதிர்காலத்தில் பல இடங்களுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு கலை இலக்கியத்தைப் பற்றிக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
கலையும், இலக்கியமும் மக்களிடம்தான் உருவானது. அதை மக்களிடமே கொடுப்பதுதான் எங்களது நோக்கம்” என்றார்.
பென்னிகுயிக் என்ற பெயர் வைப்பதற்கான காரணம் நகுலிடம் கேட்டபோது அவர்,
“மன்றத்தை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுவானதாகவே ஆரம்பித்தோம். அதனால் பெயரும் பொதுவானதாகவே இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இங்குள்ள பிரச்னைகளைப் பேசுகிறோம்
அப்படியென்றால் இவர்களுக்குப் பொதுவான ஒருவராக இருக்க வேண்டும். அப்படி எடுத்ததுதான் அவர் பெயர். ஏனெனில் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என இந்த ஐந்து மாவட்டங்களும் ஆங்கிலேயர் காலத்தில் பெரும் வறட்சியில் பாதித்தபோது அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து முல்லைப் பெரியார் அணையை கட்டி இன்று வரை அங்கு வாழும் பல மக்களின் வாழ்வாதாரத்தை மாற்றி அமைத்தவர் பென்னிகுயிக்.

அவருக்கு எந்த சாதி மதமும் கிடையாது. இன்றும் பல ஊர்களில் அவரது பிறந்த நாளை பொங்கலாக கொண்டாடுகின்றனர்.
மொத்த இந்தியாவும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இருக்கும்போது இவரை மட்டும் இன்றளவும் போற்றும் வகையில், பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு அவர் பெயரை வைப்பது என்று, இங்குள்ள மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார். அவரின் பெயர் மட்டுமே இந்த மன்றத்திற்கு பொருந்தும்.“ என்றபடி முடித்துக் கொண்டார்.