``18 வயதில் ரூ.55000 கிடைக்கும்'' - பெண் குழந்தைகள் பிறந்தால் டெபாசிட் செய்யும்...
Melodi Dorcas: ``ஸ்கின் கலர் பார்த்து ஸ்கிரிப்ட் எழுதும் சினிமா?'' -நடிகை மெலொடியின் அசத்தலான பேட்டி
மெலோடி டார்கஸ் (Melodi Dorcas) என்றப் பெயர் திரை ரசிகர்களிடம் அறிமுகமில்லாமல் இருக்கலாம். ஆனால் இவரின் முகம் எல்லோர் மனதிலும் அழுத்தமாகப் பதிந்திருக்கும்.
தமிழில் வெளியான 'அயலி' வெப் சீரிஸ் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைந்தவர், ஜே.பேபி படத்தில் ஊர்வசி மீது பெரும் அன்பு வைத்திருக்கும் மகளாக கூடுதல் கவனம் ஈர்த்தார்.
'இவங்க எங்க ஏரியா பொண்ணு' எனப் பார்ப்பவர்கள் சொந்தம் கொண்டாடும் முகம், கதாப்பாத்திரத்துக்கான அச்சில் ஊற்றி வார்த்தது போன்ற நடிப்பு என மக்களின் கவனம் ஈர்த்துவரும் நடிகை மெலோடி டார்கஸை தொடர்புகொண்டு பேசினோம்.

வியாசர்பாடி டூ கோடம்பாக்கம்: எப்படி நடிப்புத் துறைமீதான ஆர்வம்?
நான் சிறுவயதிலிருந்தே கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டி, பேச்சுப்போட்டி போன்றவற்றில் ஆர்வமுடன் கலந்துகொள்வேன். பள்ளி காலத்திலேயே இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் சாரிடம் பேச்சுப்போட்டிக்காக முதல் பரிசு பெற்றிருக்கிறேன்.
பள்ளியில் விழா ஏதாவது நடந்தால் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்வேன். இப்படித்தான் என் கலை ஆர்வம் தொடங்கியது.
அதேப் போல 7-ம் வகுப்பிருலிருந்தே பாக்ஸிங் தொடங்கி கற்றுக்கொண்டேன். அதனால் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் எத்திராஜ் கல்லூரியில் இடம் கிடைத்தது.
அங்கு படித்துக்கொண்டிருக்கும்போதுதான், கல்லூரி நிகழ்வில் ஒரு நாடகம் போடவேண்டும் என கேட்டார்கள்.
நானே நாடகம் எழுதி, நண்பர்களுடன் சேர்ந்து நடித்தேன். அதுதான் என் முதல் நாடகம். இப்படிதான் தொடங்கியது என் பயணம்.
முதன் முதலாக நடித்த திரைப்படம் எது?
இறுதிச்சுற்று... பாக்ஸிங்கை மையமாக வைத்து சுதா கொங்கரா எழுதி இயக்கிய திரைப்படம். மாதவன், ரித்திக்கா சிங் நடித்திருப்பார்கள். இந்தப் படத்துக்காக பாக்ஸிங் தெரிந்த மாணவர்களை தேர்வு செய்தார்கள்.

எங்கள் பாக்ஸிங் கிளப்பிலிருந்து சிலர் ஆடிஷனுக்குச் சென்றார்கள். என்னையும் அதில் கலந்துக்கொள்ளச் சொன்னதால் சென்றேன்.
சுதா மேடம் என்னிடம் டைலாக் கொடுத்து பேசிக்காட்டச் சொன்னார்கள். அதன்பிறகு, நான் தேர்வு செய்யப்பட்டு, இறுதிச் சுற்றில் பாக்ஸீங் மாணவியாக நடித்தேன்.
அப்போதுவரை சினிமா, கேமரா, நடிப்பு என்பதுபற்றியெல்லாம் பெரிதாக தெரியாது. இதுதான் என் முதல் படம்.
திரைத்துறைக்கான எந்த பின்புலமும் இல்லாமல் இவ்வளவு யதார்த்தமாக நடிக்கிறீர்களே எப்படி?
கல்லூரி காலத்தில் நான்கு சுவர்களுக்குள் அடங்கி, குறிப்பிட்ட பாடத்தில் கவனம் செலுத்தி படிப்பதில் ஈடுபாடு இல்லை. புதிதாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் ஆழமாக இருந்தது.
அப்போதுதான் பெங்களூரில் The National School of Drama(NSD) என்றநடிப்புக்காக ஒரு கல்லூரி இருக்கிறது எனத் தெரிந்துகொண்டேன்.
அங்கு ஒரு வருடம் நடிப்புப் பயிற்சி பெற்றால் என்ன என முடிவு செய்து அந்தக் கல்லூரியில் ஒரு வருட பயிற்சிக்காக சேர்ந்தேன்.

எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களில் முக்கியமான சிலர், டெல்லியில் இருக்கும் NSD-யில் படித்தவர்கள்.
அவர்களின் அபாரமான திறமையால் வியந்து, அங்கு சென்று படித்தால் இன்னும் கற்றுக்கொள்ளலாமே என டெல்லி சென்று 3 வருடம் நாடக நடிப்பும், நாடக இயக்கமும் கற்றேன்.
உங்கள் குடும்பம் பற்றி
எனக்கு அம்மா மட்டும்தான். சிறுவயதிலிருந்தே உணவுக்கும், உடைக்கும் சிரமப்பட்ட குடும்பம். ஆனால், அம்மாவுக்கு எப்படியாவது நான் படித்துவிட வேண்டும் என்பதில் பிடிவாதம் இருந்தது.
`நீ என்ன வேணூம்னாலும் பண்ணு. ஆனா படி’ இது அம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தை.
அதனால் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் இருக்கும். அதன் பலனாகதான் இந்த நடிப்புக்கலையைக் கற்றுக்கொண்டேன்.
நடிப்புக் கலை மீது இந்தளவு தீராத ஆர்வம் வந்ததற்கு காரணம் என்ன?
பெரும் வறுமைக்கு மத்தியிலும் கலைமீதான ஆர்வம் வருவதற்கு என் வாசிப்பனுபவம் முக்கியக் காரணம். எங்கள் வீட்டில் டிவி கிடையாது.

பள்ளிகாலங்களில் என் பெரும்பாலான பொழுதுபோக்கு நேரம் நூலகத்தில்தான் இருந்தது. கல்கி, சாண்டில்யனில் தொடங்கிய வாசிப்பு காலப்போக்கில் மார்கி, தாஸ்தாவோஸ்கி, தாய் என நீண்டுகொண்டே செல்கிறது.
வட சென்னை என்றாலே எல்லொருக்கும் ஒருப் பார்வை இருந்தது, இன்றும் சிலரிடம் இருக்கிறது. ஆனால், 'ஏன் எல்லோரும் நம்மை வேறுமாதிரியாக பார்க்கிறார்கள்?" என்றக் கேள்வி என்னுள் எழுந்தது.
ஆனால், கறுப்பர் நகரம் வாசித்து முடித்தபோது, 'இது எப்பேர்பட்ட வாழ்விடம், உழைப்பாளர்களைச் சுமந்துக்கொண்டிருக்கும் நகரம் இது. இதைப்பற்றி நாம் பெருமைப்பட வேண்டும்' என்ற மனமாற்றம் ஏற்பட்டது.
குறிப்பிட்ட எழுத்தாளர் என்றெல்லாம் கிடையாது. எல்லா நூல்களையும் வாசிப்பேன். எல்லாமே என்னை மெருகேற்றியிருக்கிறது.
சினிமா – நாடகம் என்ன வித்தியாசம்
இரண்டும் பெரும் உழைப்பைக் கேட்பவை. இரண்டுக்கான தளமும் வேறு. ஆனால் இரண்டின் நோக்கமும் மக்களுடன் உரையாடுவதுதான். நாடகத்துக்கு அரங்கம் மட்டும் போதும். சொல்ல வேண்டியதை சொல்லிவிடலாம்.
ஆனால் சினிமாவுக்கு சூரியன், நிலவு, ஆகாயம் என இயற்கையின் எல்லா வளமும் வேண்டும். சினிமா ஒரு பெரும் களம். எனக்கு மக்களுடன் உரையாடுவது பிடிக்கும். அதனால் இந்த சினிமாவும் – நாடகமும் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது.

தீபாவளி... ஒரு கலைஞராக இந்தக் கொண்டாட்டத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
நமக்கான இந்த வாழ்வே கொண்டாட்டம்தான். நான் நாடக கலைஞராக இருப்பதால், அங்கு நிறைய கொண்டாட்டங்கள் இருக்கும்.
யாரைப்பற்றியும் முன்முடிவுகள் இல்லாமல் கொண்டாடுவோம். அதனாலேயே எனக்கு அந்தக் கலை பிடிக்கும்.
ஒருவேளை நம்மிடம் செல்போன், டிவி என எதுவும் இல்லை என வைத்துக்கொள்ளுங்கள். நம்மிடம் கொண்டாட்டங்கள்தான் அதிகமாகியிருக்கும்.
மனிதர்களுடன் அதிகம் உரையாடுவோம், மகிழ்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வோம். எந்த முன்முடிவுக்கும் வரமாட்டோம்.
என் கொண்டாட்டங்களை ஒரு பொருள் மீதோ, தினத்தின் மீதோ திணிப்பதில்லை. என் வீட்டில் பயங்கர சேட்டை செய்யும் ஒரு பூனை இருந்தது.
ஒருமுறை பட்டாசு வெடித்தபோது அது பயந்து வீட்டை விட்டு வெளிவரவே இல்லை. மூளையில் சுருண்டு படுத்துக்கொண்டது. அதிலிருந்து பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டேன்.

தீபாவளியை பட்டாசு இல்லாமல்தான் கொண்டாடுகிறேன். ரம்ஜான், கிறிஸ்துமஸ் என மக்கள் கொண்டாடும் எல்லாவற்றிலும் பங்கெடுப்பேன்.
இந்தக் கொண்டாட்டங்கள் மிகவும் அவசியம் எனக் கருதுகிறேன். இது நம்மை இலகுவாக்கி, மனித உறவுகளைப் புதுப்பிக்கும், அன்பு பரிமாற்றங்கள் அதிகம் நடக்கும் என நம்புகிறேன்.
கிராம, பாமரப் பெண் என ஒரே மாதிரியான கதாப்பாத்திரங்களே நடிக்கிறீங்களே... ஸ்கின் கலர் பார்த்துதான் சினிமா ஸ்கிரிப்ட் எழுதுதா?
அயலி, ஜே.பேபி போன்ற படங்களில் என் வயதை மீறிய தோற்றத்தில் நடித்திருப்பேன். என்னை அணுகும் இயக்குநர்கள் அதுபோன்ற கேரக்டருக்குதான் கேட்கிறார்கள்.
நான் ஒரு நாடகக் கலைஞர். எனக்கு வயதான ரோல், குட்டி பாப்பா ரோல் என எந்த கதாப்பாத்திரமும் பிரச்னை இல்லை. ஆனால் அதையே திரும்பத் திரும்ப நடிக்க விரும்பவில்லை. குடிகாரனுக்கு மனைவியாகவே என்னால் காலம் முழுக்க நடிக்க முடியாதல்லவா?
மற்றொரு விஷயம் கறுப்பாக இருக்கும் பெண் என்றால், ஏழ்மையான குடும்பப் பெண், குடிகாரனுக்கு மனைவி அல்லது நாகரீகமற்ற பெண் என்றுதான் சித்தரிக்க வேண்டுமா?

வெள்ளையாக இருந்தால்தான் வணிகம் செய்ய முடியும் என்ற மனநிலையும் இந்த திரையுலகில் இருக்கிறது.
ஆனால், இந்த சினிமாதான் கறுப்பான நாயகிகளை அறிமுகப்படுத்தி வெற்றிக் கோலோச்சிய கே.பாலசந்தர், பாரதி ராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரனை கடந்து வந்திருக்கிறது.
கறுப்பை கொண்டாடிய இதே ஊரில்தான் நிறவேறுபாடும் பார்க்கிறார்கள். இந்தியா முழுவதும் இதுதான் நிலை.
மலையாள சினிமா மட்டும் இன்னும் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனக் கருதுகிறேன். நம் சொந்த மண்ணிலேயே நம் மண் நிறத்தைப் புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
உங்களின் சமூக ஊடகங்களை கவனிக்கும்போது தொடர்ந்து பயணம் செய்கிறீர்களே?
பயணம்தான் நம் வாழ்வை புரிந்துகொள்ள வழி அமைக்கும். அதனால், தொடர்ந்து பயணப்பட வேண்டும் என நினைக்கிறேன்.
நான் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூர் சென்றபோதும், டெல்லி சென்றபோதும் கிடைத்த அனுபவம் வேறு. ஜப்பான் போனபோது கிடைத்த அனுபவம் வேறு.
உணவு, உடை, கலாச்சாரம் என எல்லாமே விதவிதமானது. இந்த வானத்துக்குக் கீழ் நாம் பார்க்க வேண்டியவை நிறைய இருக்கிறது.

ஆனால், எல்லா ஊரிலும், நாட்டிலும் மனிதர்களின் உணர்வுகள் ஒரேமாதிரியானவை என்பதை இந்தப் பயணம் எனக்குக் கற்றுக்கொடுக்கிறது.
பயணம்தான் பெரும் புத்தகம் என நம்புகிறேன். எனவே, நாம் வாழ்வதற்கும், கொண்டாடுவதற்கும் நிறையக் காரணங்கள் இருக்கின்றன என்பதை பயணம் கற்றுக்கொடுக்கிறது.
நாடகம் - சினிமா தவிர வேறு என்ன செய்கிறீர்கள்?
நான் சிடிஏ, மைன்ட் ஸ்கிரீன், கூத்துப்பட்டரை, பெங்களூர் என்.எஸ்.டி, சிக்கிம் என்.எஸ்.டி போன்ற இடங்களில் நடிப்பு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக பணியாற்றுகிறேன்.
அழைக்கும் கல்லூரிகளில் நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறேன். இதுபோகதான் திரைப்படங்களில் நடிக்கிறேன்.
உங்களின் அடுத்த அப்டேட் என்ன?
நான் நடித்த 13 படங்களில் நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன். செம்மலர் அன்னம் இயக்கியிருக்கும் மயிலா படத்தில் நான் முக்கியக் கதாப்பாத்திரமாக நடித்து முடித்திருக்கிறேன்.

அந்தப் படம் ஒரு பெரிய இன்டர் நேஷ்னல் ஃபெஸ்டிவலுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அது என்ன நிகழ்வு என்பது 23-ம் தேதி அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.
என்னுடைய நடிப்பாற்றலை முழுமையாகப் பயன்படுத்தும் விதத்தில் எழுதப்பட்ட கேரக்டர்.
இயக்குநர் ரஞ்சித் சாரின் வேட்டுவம் படத்தில் முக்கியமாக கேரக்டரில் நடிக்கிறேன். இந்த இரண்டுபடமும் எனக்கு பெரும் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.