``நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது'' -எடப்பாடி பழன...
``நம்ம வீடு இருட்டா இருந்தா, அப்படியே விடுவோமா?'' - சொந்த செலவில் ஊரை வெளிச்சமாக்கிய காவலர் தம்பதி
60 அடி உயர ஹைமாஸ் லைட்
கடலூர் மாவட்டம், பண்ருட்டி கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த காவலர் அருண்குமார், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிவிரைவுப் படையில் பணியாற்றி வருகிறார்.
அருண்குமார் மனைவி, காவலர் காயத்ரி, கடலூர் ஆயுதப் படையில் பணியாற்றி வருகிறார். கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து, தங்கள் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

தங்கள் ஊர் பேருந்து நிலைய நிறுத்தம் இருட்டில் இருந்ததால், அங்கு தெருவிளக்கு அமைக்க நினைத்தார்கள் அருணும் காயத்ரியும்.
அதன்படி, தங்கள் சம்பளத்தில் ஒரு பகுதியை சேமித்து வைத்து, 6 லைட்களுடன் 60 அடி உயரத்தில் `ஹைமாஸ் லைட்’ அமைத்து நெகிழ வைத்திருக்கிறார்கள்.
அதுகுறித்துக் கேள்விப்பட்ட கடலூர் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார், அவர்கள் இருவரையும் நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
`ஊருக்கு எதையாவது செய்யணும்’
காவலர் அருணிடம் இதுகுறித்துப் பேசியபோது, “புதுச்சேரியில் +2-வையும், பண்ருட்டியில் 2016-ல் EEE படிப்பையும் முடித்தேன். 2017-ல் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தேன்.
அதேபோல், பி.எஸ்.சி., பி.எட். படித்திருந்த காயத்ரியும் அதே ஆண்டு காவலர் பணியில் சேர்ந்தார்.
எங்களோட ஊர் சின்ன கிராமம். எங்களை வளர்த்து வேலைக்கு அனுப்பிய கிராமத்துக்கும், அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் எதையாவது செய்ய வேண்டும் என்று நானும் என் மனைவியும் அடிக்கடி பேசிக் கொள்வோம்.”

அதன் ஒருபடியாக இரண்டு டைப்ரைட்டிங் மெஷின்களை வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால் அதை சொல்லிக் கொடுக்க ஆசிரியர் இல்லாததால், அவற்றை அப்படியே வைத்திருக்கிறோம்.
இந்த நிலையில்தான் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம் நீண்ட நாளாக இருட்டில் இருப்பது எங்கள் நினைவுக்கு வந்தது.
`இருட்டில் 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும்’
கடலூர்–பண்ருட்டி சாலையில் இருக்கும் மேல்பட்டாம்பாக்கத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தள்ளி உள்புறமாக இருக்கிறது எங்கள் கொங்கராயனூர் கிராமம்.
விழுப்புரத்தில் இருந்து மாளிகைமேடு வழியாக வந்து செல்லும் சில பேருந்துகள்தான் எங்களுக்கான பேருந்துகள். இரவு நேரங்களில் அவற்றை தவறவிட்டால், பட்டாம்பாக்கம் வரை இரண்டு கிலோமீட்டர்கள் இருட்டில் நடந்து வந்துதான் பேருந்தைப் பிடிக்க வேண்டும்.

எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம் இரவு நேரங்களில் 100% இருட்டாக இருக்கும். அதனால் அடிக்கடி சிறிய விபத்துகள் ஏற்படுவதுடன், பாம்புகளாலும் தேள்களாலும் எங்கள் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அதனால் அங்கு ஹைமாஸ் விளக்கு அமைக்க வேண்டும் என்று காயத்ரியும் நானும் முடிவு செய்தோம். அதுகுறித்து விசாரித்தபோது ரூ.60,000 செலவாகும் என்றார்கள். எங்களுக்கு சஜின், சாத்விக் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
`யாரிடமும் கடனோ, அன்பளிப்போ வாங்கவில்லை...’
அதனால், நினைத்த உடனே பணத்தை எடுத்து செலவு செய்வது எங்களுக்கு முடியாத காரியம். அதனால், ஒவ்வொரு மாதமும் ஹைமாஸ் விளக்குக்காக ஒரு தொகையை தனியே எடுத்து வைத்தோம்.
அந்தப் பணத்தில் ஹைமாஸ் லைட் அமைப்பதற்கு தேவையான ஒவ்வொரு பொருளையும் வாங்கி வைத்தோம். அதற்கான முழு பணமும் இப்போதுதான் சேர்ந்தது.
அதற்காக நாங்கள் யாரிடமும் ஒரு ரூபாய்கூட கடனாகவோ, அன்பளிப்பாகவோ வாங்கவில்லை.

இந்த லைட் அமைத்ததால், எங்கள் ஊர் பெண்கள் இரவில் பயமின்றி பேருந்துக்காக நிற்கிறார்கள், நடந்து செல்கிறார்கள். எங்கள் ஊர் இளைஞர்கள்தான் இதை வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டார்கள்.
எஸ்.பி. ஜெயக்குமார் சார் எங்களை நேரில் அழைத்துப் பாராட்டியபோது ரொம்ப சந்தோஷமாக இருந்துச்சு. “நம்ம வீடு இருட்டா இருந்தா நாம விடுவோமா? அப்படித்தான் நம்மை வாழ வைக்கும் ஊரும்,” என்றார் நெகிழ்ச்சியுடன்.