``நெல் கொள்முதலில் அரசு தவறான தகவலை கூறி விவசாயிகளை ஏமாற்றுகிறது'' -எடப்பாடி பழன...
65 பைசா டிக்கெட், இரும்புக் குதிரை, விடாத மழை: மழைக்கால சினிமா ராத்திரி! #DiwaliCinema
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அது 1960 களின் இறுதி சில ஆண்டுகள்.அந்தக் காலக்கட்டத்தில்தான் எங்கள் சினிமா பார்க்கும் உற்சாகம் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம்.எங்கள் ஊர் கீழப்பெருமழையிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருத்துரைப்பூண்டிடவுனுக்குச் சென்றுதான் சினிமா பார்க்க வேண்டும்.அப்பொழுது அங்கு இரண்டு தியேட்டர்கள் உண்டு,வாசன் தியேட்டர் மற்றும் பிரஹநாயகி தியேட்டர், என்ற பெயர்களில்!
எங்கள் பேவரிட் எப்பொழுதும் செகண்ட் ஷோதான்.வீட்டுக்குத் தெரியாமல் ஃபர்ஸ்ட் ஷோ போவது கஷ்டமல்லவா?இரும்புக் குதிரைதான் எங்கள் வழக்கமான வாகனம்.எங்கள் அண்ணன்கள் சைக்கிள் வைத்திருந்ததால் இரவு எட்டரை மணிக்கு மேல் அவற்றை எங்கள் கண்ட்ரோலுக்குக் கொண்டு வந்து விடுவோம்.பன்மையில் சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?ஆமாங்க.எனது நேர் மூத்த அண்ணனும் நானுந்தான் இதில் கூட்டு.என்னை விட அவர் இரண்டு,மூன்று வயது மட்டுமே மூத்தவர்.மற்ற இரண்டு அண்ணன்களுக்கும் வயது வித்தியாசம் அதிகம்.இரவு எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட்டு விட்டு,பாட்டி வீட்டிற்குப் படுக்கப் போவதாகச் சொல்லி விட்டு,சப்தமில்லாமல் சைக்கிளை நகர்த்தி விடுவோம்.
தாத்தா சிறுவயதிலேயே செத்துப் போனதும்,பாட்டி தனியாக வீட்டில் இருந்ததும்,
பாட்டிக்கு அம்மா ஒற்றைப் பெண் என்பதும்கூட,எங்கள் சினிமா ஆசைக்கு உதவியதாக,இப்பொழுது நினைத்துப் பார்த்தால் புரிகிறது.பாட்டி வீட்டில் எப்பொழுதும் படுக்கச் செல்வதால் சினிமாப் பயணம் எளிதாயிற்று எங்களுக்கு.

வீட்டில் சொல்லிக் கொள்ளாமல் சினிமா பார்த்து விட்டு வந்தாலும்,”ஏண்டா இப்படி ராப்பகலா அலையறீங்க!”என்ற அன்பான கண்டிப்பு மட்டுமே தண்டனை என்பதால்,எங்கள் சினிமா ஆசைக்குப் பெரிய இடையூறெல்லாம் இருந்ததில்லை.
அப்பொழுது பேக் பெஞ்ச் டிக்கட் 65 பைசா மட்டுமே. டீ 10,15 பைசா.சைக்கிள்
பார்க்கிங்குக்கு 10 பைசா.வீலில் காற்று இறங்கினால் அடிக்க 5 பைசா.கையில் ஒன்றே முக்கால் ரூபாய்,அதாவது 175 பைசா இருந்தால் இருவரும் இரும்புக் குதிரையில் ஏறி விடுவோம்.
அப்படித்தான் அந்தத் தீபாவளிக்கு அடுத்த நாள், புதுப்படம் பார்க்கக் கிளம்பினோம்.எங்களூரில் அப்பொழுது ரிலீசெல்லாம் செய்ய மாட்டார்கள்.தீபாவளி,பொங்கல் சமயங்களில், ரிலீசாகி நன்றாக ஓடிய படங்களைப் புதுப்படங்கள் என்று போடுவார்கள்.பிரஹநாயகி தியேட்டரில் ‘நான்’ஓடியது அப்போது!அன்றைக்கு நைட் ரெண்டாவது ஷோவுக்குப் போவதென்று திடீரென்று முடிவெடுத்தோம்.எட்டு
மணிக்கே டின்னரை முடித்து விட்டு ரெடியானோம்.அன்றைக்குப் பார்த்து வீட்டிலிருந்த கேரியர் வைத்த சைக்கிள் நேரத்திற்கு வந்து சேரவில்லை.லேசான மழைத் தூறல் வேறு.சினிமா பார்ப்பதென்று ஒரு தடவை முடிவெடுத்து விட்டால்,எக்காரணம் கொண்டும் அதை மாற்றிக் கொண்டதாக எங்கள் வரலாற்றியே இல்லை.
நான் முன்பாரில் அமர்ந்து குடையைப் பிடித்துக் கொள்ள,அண்ணன் உற்சாகமாக மிதிக்க ஆரம்பித்தார்.சுமார் 3 கிலோ மீட்டரிலுள்ள பாண்டியைத் தாண்டுவதற்கு முன்னரே,இருவரும் தொப்பலாக நனைந்து விட்டோம்.
மனதில் ‘நான்’கொடுத்த உற்சாகம், அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.9.30 மணிக்குள்ளாகத் தியேட்டரை அடைந்து விட்டோம்.மழை மட்டும் விட்ட பாடில்லை.அங்கு வந்த பிறகுதான் அடுத்த ஷாக் காத்திருந்தது.எங்கள் ஊர் பண்ணையாரான எங்கள்
உறவினரின் வண்டி வெளியே நின்றது.பண்ணையாரும் அவரின் நெருங்கிய நண்பருமான எங்கள் மூத்த அண்ணனும் தியேட்டரின் உள்ளே இருந்தனர். அவர்கள் படம் முடிந்து வெளியே வருகையில் அவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாதே என்ற பயம் உள்ளத்திலோட,எங்களை இருட்டில் ஒளித்துக் கொண்டோம்.
அடுத்து வந்தது பெரிய ஷாக்!கரண்ட் போய் விட்டது. அப்பொழுது ஜெனரேட்டர் வசதியெல்லாம் கிடையாது.மின்சாரம் இருந்தால்தான் படத்தை ஓட்ட முடியும்.10,11 என்று மணிதான் ஆகிக்கொண்டிருந்தது.
கரண்ட் வந்த பாடில்லை. ஓரிரண்டு பேரைத் தவிர யாரும் வெளியே வரவில்லை. நனைந்த உடையும்,தொடர்ந்த மழையும் உடலை மெதுவாக நடுங்கச் செய்தன.படம் பார்க்காமல் திரும்பவும் மனசில்லை.எப்படியும் வீட்டில் பாட்டு வாங்கியாக வேண்டும்.அதனைப் படத்தைப் பார்த்து விட்டு வாங்கினால்,சின்ன திருப்தியாவது இருக்குமல்லவா!

புதுப்படம் என்பதால்,எங்களைப் போலவே பலரும் காத்திருந்தனர். சுமார் 12 மணி வாக்கில் கரண்ட் வர,முதல் ஷோ முடியவே நள்ளிரவு ஒரு மணியை நெருங்கி விட்டது.
இரண்டாவது ஷோ போடுவார்களோ,மாட்டார்களோ என்ற பயம் வேறு உளத்தை வாட்ட,படம் உண்டு என்ற அறிவிப்பு வயிற்றில் பால் வார்க்க,படம் பார்த்து விட்டு வந்த அண்ணன் கண்ணில் படாமல் தப்பித்து,கவுண்டரை நெருங்க, க்யூவில் நின்றோம்.
ஒரு பத்துப் பதினைந்து பேர் கவண்டரில் டிக்கட் வாங்கிய பிறகு,மீண்டும் கரண்ட்கட்டாக, அதிர்ந்து நின்றோம்.
இரண்டொரு நிமிட இடைவெளிக்குப் பிறகு மின்சாரம் வந்தது. படம் முடியும் வரை நிலைக்குமா? என்ற சந்தேகம் பயமேற்படுத்த உள்ளே சென்று அமர்ந்தோம். ஏதோ கெட்டதிலும் நல்லது என்பார்களே! அதைப்போல, அதன் பிறகு பவர் கட்டாகாமல் தொடர, ஒரு வழியாகப் படத்தைப் பார்த்து முடித்தோம்.
திரும்பி வீடு சேரும் முன்னால் பொழுது புலர ஆரம்பித்து விட்டது. சைக்கிளை வைக்க வீட்டிற்குச் சென்றபோது,அம்மா சாணி தெளித்துக் கொண்டிருந்தார்கள்.
“ஏம்பா இந்த மழை நேரத்ல இப்படி அலையறீங்க?”என்ற அவர்கள்,எங்கள் கோலத்தைப் பார்த்து மேலும் எதுவும் சொல்லாமல் அமைதி காக்க,எங்களுக்குள் லேசான குற்றவுணர்வு தலைதூக்கினாலும்,சினிமா பார்த்த திருப்தி அதைக் குன்றச் செய்து விட்டது!
“போதுமோ இந்த இடம்! கூடுமோ அந்த சுகம்!” என்ற பாடலை எப்பொழுது கேட்டாலும்,”போதும்டா சாமி! இந்தப் படத்தைப் பார்க்க நாங்கள் பட்ட கஷ்டம்!’என்று மனது சொல்லும்!ஆனாலும் அந்த மழைக்கால இரவும்,’நான்’ திரைப்படமும்,சுமார் அரை நூற்றாண்டைக் கடந்து இன்றைக்கும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளது என்பதே நிதர்சனம்!
-ரெத்தின.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.