திருமணத்தை மீறிய உறவு: ரூ.2.1 கோடியை கொடுத்துவிட்டு திரும்பக் கேட்ட பெண் - நீதிம...
15 வருடங்கள் கழித்து என் ஆசை நிறைவேற போகிறது! - ரஜினி, கமல் ரசிகர் நெகிழ்ச்சி #MyVikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்புள்ள திரு. ரஜினிகாந்த் மற்றும் திரு. கமலஹாசன் அவர்களுக்கு,
வணக்கம்!
கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக உங்களது ரசிகனாக வாழ்ந்து வரும் ஒரு ரசிகனின் வேண்டுகோள் கடிதமாக இதை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்!
கடந்த சில நாட்களாக வலைத்தளங்களிலும் சோசியல் மீடியாக்களிலும் வைரலாக உலா வரும் செய்தி தான் என்னை இந்த கடிதத்தை எழுத வைத்தது! அந்த செய்தி ‘நீங்கள் அனைவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளீர்கள்’ என்பது. உங்கள் இருவரின் நீண்ட கால ரசிகனாக எனக்கு இது ஒரு மிக மிக மகிழ்ச்சியான செய்தி! எனக்கு மட்டும் அல்ல. என்னைப் போன்று உலகெங்கும் வாழும் உங்களது ரசிகர்கள் அனைவருக்கும் இந்த செய்தி ஒரு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுத்திருக்கும்!

எனக்கு இது மற்ற ரசிகர்களை விட இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் செய்தி. ஏனெனில், நீங்கள் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை 2011ம் ஆண்டே ஆனந்த விகடன் மூலம் வைத்திருந்தேன்.
அப்போது நடிகர் கமலஹாசன் அவர்களுடைய ‘கேள்வி பதில்’ பகுதி ஆனந்த விகடன் சில வாரங்கள் வெளிவந்தது. ரசிகர்களுடைய கேள்விக்கு கமல்ஹாசன் ஆகிய நீங்கள் உங்களுடைய பாணியில் பதில் அளித்து ஒரு உரையாடலை நிகழ்த்தி இருப்பீர்கள்!
அந்த கேள்வி பதில் பகுதிக்கு என்னுடைய கேள்வியாக, நீங்களும் திரு ரஜினிகாந்த் அவர்களும் இணைந்து நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, ஒரு ஆங்கிலத் திரைப்படத்தை தமிழில் உரிமை வாங்கி மீள் உருவாக்கம் செய்து அதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்றும் கோரி இருந்தேன். (அந்த ஈமெயில் ஸ்க்ரீன் ஷாட்டை இத்துடன் இணைத்துள்ளேன்). கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து என்னுடைய ஆசை நிறைவேற போகிறது என்று நினைக்கும் பொழுது மகிழ்ச்சி வராமல் இருக்குமா?
எனக்கு ஐந்து வயது இருக்கும் பொழுது நான் முதல் முதலில் திரையரங்கிற்கு சென்று பார்த்த படம் சகலகலா வல்லவன். இன்னமும் வந்த காட்சிகள் நினைவில் இருக்கிறது. அதே வருடத்தில் வெளிவந்த மூன்றாம் பிறை படத்திற்கு சென்ற காட்சிகள் கூட நினைவில் இருக்கிறது. மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா அவர்களுடன் நீங்கள் வரும் காட்சி திரையில் வரும் பொழுது என் அத்தை என்னுடைய கண்ணை மறைத்து கொண்ட அந்த தருணத்தை இப்பொழுது நினைத்தாலும் ஒரு புன்னகை அரும்பத்தான் செய்கிறது. ஐந்து வயதில் என்னை ஆக்கிரமித்த உங்கள் மீதான ஒரு பிரமிப்பு இன்னமும் அப்படியே தான் இருக்கிறது.

அதுபோலவே ரஜினிகாந்த் அவர்களே! உங்களை நான் முதல் முதலில் திரையில் பார்த்தது பாயும் புலி படத்தில் தான்! அன்றிலிருந்து பால்ய பருவம் முடியும் வரை எனது வீட்டிலும் உறவினர்கள் முன்பும் நான் தான் ரஜினிகாந்த்! நான் மட்டும் தான் அப்படி என்று நினைத்திருந்தேன் ஜெர்மனி செல்லும் வரை.
சில வருடங்களுக்கு முன்பு அலுவல் நிமித்தமாக ஜெர்மனியில் சில காலம் தங்கி இருக்க நேர்ந்தது. அங்கு பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட பல நாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒரு பாகிஸ்தான் நாட்டு நண்பர் என்னிடம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டார். நான் தமிழ்நாடு என்று சொன்னவுடன் அவருக்கு ஒரே ஆச்சரியம்! ‘ உங்கள் ஊரில் தானே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார்’ என்று கேட்டார்.
எனக்கும் அதே ஆச்சரியம்! ‘ உங்களுக்கு ரஜினிகாந்த் தெரியுமா?’ என்று கேட்டேன். அதற்கு அவர் என்ன இப்படி கேட்டு விட்டீர்கள்? எங்களுடைய சிறுவயதில் சலூனில் ரஜினிகாந்த் படம் டிவியில் போட்டால் பார்ப்பதற்கு ஒரு பெரும் கூட்டமே கூடிவிடும். அவ்வளவு ரசிகர்கள் உண்டு எங்கள் நாட்டில்’ என்றார்.
அப்பொழுதும் எனக்கு பெரிய நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்தவர், ஒரு நிமிடம் என்றவாறு, சற்று தொலைவில் இருந்த தனது நண்பர் ஒருவரை அழைத்து கேட்டார். ‘ நண்பா! ஒரே அடியில் 100 பேரை வீழ்த்துவாரே ஒரு ஹீரோ! அவர் பெயர் என்ன சொல்’ என்று கேட்டார். அதற்கு அவர் நண்பர் ஒரு நொடி கூட யோசிக்காமல் சொன்ன பெயர் ரஜினிகாந்த்’. அந்த நிமிடம் உண்மையிலேயே எனக்கு ஒரு மயிர் கூச்செறியும் நொடியாகத்தான் இருந்தது! உங்கள் புகழ் இந்தியா மட்டும் அல்ல மற்ற நாடுகளிலும் பரவி இருக்கிறது என்பதை உணர்ந்த தினம் அன்று.
கடந்த 50 வருடங்களாக திரையில் மட்டுமல்ல, நிஜத்திலும் நண்பர்களாக வாழ்ந்து வரும் நீங்கள் இணைந்து ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என்றால் அதன் திரைக்கதை எவ்வளவு அற்புதமாக, உங்களது நட்புக்கு நியாயம் சேர்க்கும் வகையில் இருக்க வேண்டும்! அப்படி யோசித்த வகையில் எனக்கு தோன்றிய திரைப்படத்தை தான் ரீமேக் செய்ய வேண்டும் என்று முன்மொழிந்தேன்!
அந்த திரைப்படம், பிரபல ஹாலிவுட் இயக்குனர் ‘ராப் ரெய்னர்’ இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த ‘The Bucket List’ திரைப்படம். பிரபல நடிகர்கள் ஜாக் நிக்கேல்சன் மற்றும் மார்கன் பிரீமன் இணைந்து நடித்த இந்த திரைப்படம் உலகெங்கும் வெளியாகி திரைப்பட ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் ஏகோபித்த பாராட்டையும் பெற்றதோடு உலகெங்கும் வசூலையும் வாரிக் குவித்தது.

அற்புதமான திரைக்கதை மற்றும் இவ்விரு நடிகர்களின் சிறந்த நடிப்பு மற்றும் ராப் ரெய்னரின் சிறப்பான இயக்கத்தினால் இன்றும் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு கிளாசிக் படமாக இருந்து வருகிறது. இந்தப் படத்தை முதல் முறை பார்க்கும் பொழுதும் சரி இன்று பார்க்கும் பொழுதும் சரி அந்த இரு நடிகர்களின் முகம் மறந்து உங்கள் இருவரின் முகம் தான் என் மனக்கண்ணின் முன்னே வந்து நிற்கும். ஜாக் நிக்கல்சன் அவர்களின் கதாபாத்திரத்தில் கமலஹாசன் அவர்களையும், மார்கன் பிரீமன் அவர்களின் கதாபாத்திரத்தில் திரு ரஜினிகாந்த் அவர்களையும் வைத்துக் கொண்டே அந்த படத்தை பார்ப்பேன்!
ஒன்று மட்டும் உறுதியாக என்னால் சொல்ல முடியும்! நட்பு எமோஷன் சென்டிமென்ட் எல்லாம் கலந்த ஒரு நல்ல திரைக்கதை என்றால் இதைவிட ஒரு சிறந்த படத்தை உங்களுக்கு யாராலும் தர முடியாது. என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் எப்படியாவது தயாரிப்பு நிறுவனம் வார்னர் பிரதர்ஸ் இடம் பேசி ரீமேக் உரிமையை வாங்கி, ஒரு நல்ல இயக்குனர் மூலம் ரீமேக் செய்து நடித்து வெளியிட வேண்டும்! சிறந்த இயக்குனர் என்று சொன்னால், அன்று கூறியது போலவே இன்றும் எனது தேர்வு கெளதம் வாசுதேவ் மேனன் தான்.
இந்த கடிதத்தின் மூலம் எனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளேன் . நிறைவேற்றுவீர்களா!
இப்படிக்கு
உங்கள் கோடான கோடி ரசிகர்களில் ஒருவன்!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!