சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை
எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின் பதிவு!
எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சத்தை, அந்த பெண்ணின் பதிவு பிரதிபலிப்பதாக பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் பணியாற்ற வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் எச்1பி விசாவின் கட்டணத்தை ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ. 88 லட்சமாக உயர்த்துவதற்கான கோப்பில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதனால் அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருப்பவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பித்திருப்பவர்கள் பீதி அடைந்துள்ளனர். அவர்களின் வேலை நிச்சயமற்றதாக உணரத் தொடங்கியுள்ளனர்.
மேலும், அமெரிக்க நிறுவனங்கள் புதிதாக எச்1பி விசாவில் வெளிநாட்டவர்களை பணி அமர்த்தப்படுவதை குறைத்து விடுவார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. இதனிடையே, எச்1பி விசா கட்டண உயர்வு அறிவிப்புக்கு மத்தியில், அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளப்பட்ட பலர், மீண்டும் சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்ல அறிவுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பெண்ணின் பதிவு வைரல்
இந்த நிலையில், இந்திய பெண் ஒருவரின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
”என் கணவர் எச்1பி விசா வைத்திருப்பவர். ஆண்டுக்கு 1.40 லட்சம் டாலர் சம்பாதிக்கிறார். என்னிடம் எச்4 விசா இருக்கிறது. நான் பணிபுரிந்து வருகிறேன். எச்1பி விசாவின் நிச்சயமற்ற தன்மை காரணமாக நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறோம்.
என் அலுவலகத்தில் கிரீன் கார்டு வைத்திருக்கும் ஒருவர் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்துவிட்டார். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், எனக்கும் அவரை பிடிக்கும்.
என் கணவரை விவாகரத்து செய்துவிட்டு அலுவலக சகாவை திருமணம் செய்து கொள்ளலாமா? எதிர்காலத்தில் விசாவுக்காக மன அழுத்தத்துக்கு உள்ளாக விரும்பவில்லை. நான் ஒருபோதும் இந்தியாவுக்கு போக விரும்பவில்லை.
நான் முடிவெடுக்க உதவுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பெண்ணின் பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் எதிர்வினையாற்ற தொடங்கியுள்ளனர். மலிவான செயல் என்று சிலர் விமர்சித்துள்ளனர்.
மேலுமொரு பயனர், ”இது உண்மையா என்று தெரியவில்லை. ஆனால், நிஜத்தில் இதுபோன்ற வழக்குகள் உள்ளன. புத்திசாலித்தனமான மனைவிகள், அமெரிக்க நீதிமன்றங்களிலேயே விவாகரத்து பெற்று, கணவர்களிடம் இருந்து இழப்பீடு தொகையும் பெறுகிறார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, ”தங்களின் இருப்பை வெளிச்சத்துக்கு கொண்டுவர போலியான கதையை சிலர் பதிவிடுகிறார்கள், இதுபோன்ற பதிவுகளை நம்ப வேண்டாம்” என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.