சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை
ராஜஸ்தான்: "எங்களைப் போகவிடுங்க" - காதலனுடன் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளை செய்த மைனர் பெண்
ராஜஸ்தான் மாநிலம் கோடா என்ற இடத்தைச் சேர்ந்த மைனர் பெண் ஒருவரைக் காணவில்லை என்று கூறி அவரது பெற்றோர் போலீஸில் புகார் செய்து இருந்தனர். போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
விசாரணையில் அப்பெண் தனது காதலனுடன் ராம்புரா என்ற இடத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே போலீஸார் அங்குச் சென்று மைனர் பெண்ணையும், அவரது காதலனையும் போலீஸ் ஜீப் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்தனர்.
போலீஸ் ஜீப் அருகில் வந்ததும், மைனர் பெண்ணை அவரது காதலன் போலீஸ் ஜீப் கூரையின் மீது ஏற்றிவிட்டார்.
பெண்ணின் காதலன் குடிபோதையிலிருந்தார். மைனர் பெண்ணை போலீஸ் ஜீப்பில் ஏற்றிவிட்ட பிறகு தானும் ஜீப் மேல் ஏறிக்கொண்டார். அவர்களை போலீஸார் கீழே இறங்கும்படி கூறினர்.

ஆனால் மைனர் பெண் பொதுமக்கள் முன்னிலையில் போலீஸாரைக் கண்டபடி திட்டினார். அவரது காதலன் மைனர் பெண்ணைக் கட்டிப்பிடித்தபடி இருந்தார். இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் போலீஸ் ஜீப்பில் நின்று கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதி மக்கள் சூழ்ந்து நின்று பார்த்தனர். அப்பெண் தங்களைச் செல்ல அனுமதிக்கும்படி கத்தினார்.
அப்பெண்ணை அவரது காதலன் அடிக்கடி கட்டிப்பிடித்தபடி இருந்தார். இது 10 நிமிடத்திற்கும் மேல் நீடித்தது. அந்த வழியாக வந்த வாகனங்கள் அப்படியே நின்றன. அதிலிருந்தவர்கள் இந்தச் சம்பவத்தை வேடிக்கை பார்த்ததனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
மிகவும் போராடி அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் ஜீப் கூரையிலிருந்து கீழே இறக்கினர். அவர்கள் இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.
மைனர் பெண்ணின் 22 வயது காதலன் மீது மைனர் பெண்ணைக் கூட்டிச்சென்றது, பொது இடத்தில் ஆபாசமாகப் பேசுதல், தொந்தரவை உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.
அவர்கள் பொது இடத்தில் போலீஸ் ஜீப் மீது ஏறி நின்று ரகளையில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியிருக்கிறது. அதனைப் பார்த்த நெட்டிசன்கள் அவர்களின் செயலைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.